அரசாளும் யோகம் யாருக்கு கிடைக்கும்..?
சிம்மாசனம்-கோப்பு படம்
சூரியனும் சந்திரனும் நேருக்கு நேராக பார்த்துக்கொள்ளும் பௌர்ணமி அமைப்புடன் உள்ள நேரத்தில் பிறந்தவர்கள் மற்றவர்களை விட உயர்ந்த நிலையில்தான் இருப்பார்கள் என்பது ஜோதிட விதி.
பௌர்ணமி திதியில் பிறந்தவர்களுக்கு திதி சூன்யம் இல்லை. எனவே, இராசி கட்டங்கள் முடங்காது. அனைத்து பாவங்களும் இயங்கும் அமைப்பாக இருக்கும். சூரியன் ஆத்மபலம், தந்தை,கால்சியம் ஆகியவைகளை குறிக்கின்றார். சந்திரன் - தாய், மனம், உடல், உணவு ஆகியவற்றை குறிக்கின்றார். பௌர்ணமியில் பிறந்தவர்கள் மேற்கண்டவைகளை சிறப்பாக பெற்றவனாகிறார்கள்.
பௌர்ணமியில் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய், தந்தையின் அன்புக்கு பாத்திரமானவன் ஆகிறான். மேலும், தன்னம்பிக்கையும் தைரியமும் இயல்பாகவே கிடைக்கப் பெற்றவனாகிறான். பௌர்ணமியில் பிறந்தவர்கள் பொதுவாக அழகுடன் தேஜஸாக காட்சியளிப்பார்கள். தந்தையிடம் இருந்து பெறும் சொத்துகள் கிடைக்கப் பெற்றவன் ஆகிறான்.
சொத்துகள் என்றதும் நீங்கள் வீடு, மனை, பணம் என எண்ணிக் கொள்ள வேண்டாம். இங்கு தைரியம், திறமை, எத்தனை பிரச்னைகள் இருந்தாலும் தீர்வை நோக்கி செல்லும் ஆத்ம பலம், பலர் இவர்களுக்காக வேலை செய்யும் ஆள் அடிமை பலம், அதிகாரம் அல்லது பதவியை பெறுவது, தனி மனித கௌரவம், சம்பாத்தியத்தில் மிகச் சிறப்பான செயல்பாடுகளை பெற்றவர்களாக திகழ்கிறார்கள்.
பெளர்ணமியில் பிறந்த புத்தர் பிரான், குருநானக், ராகவேந்திர சுவாமிகள் மற்றும் ஞானியர்கள் பலரும் வழிகாட்டியாக வாழ்ந்து பல நூற்றாண்டுகள் கடந்தும் இவர்களுடைய போதனைகளும் என்றும் மக்களின் மனதில் நீங்கா வண்ணம் நிலைத்து நிற்கக் கூடிய சாதனைகளை செய்து சென்றுள்ளனர்.
சந்திரன் பூரண ஒளியோடு இருக்கும் பௌர்ணமி நாளில் பிறந்தவர்கள் அரசாளும் யோகம் கொண்டவர்களாக இருக்கின்றனர். பௌர்ணமி சந்திரன் தனது வலிமை குன்றாமல், முழு சுபராக இருந்தால் அந்த ஜாதகருக்கு சந்திர தசை சிறப்பாக அமையும். ஜாதகத்தில் சூரியன், சந்திரன் நேர்க்கோட்டில் இருந்தாலும் ஜாதகர் பௌர்ணமிக்கு மறுநாள் பிறந்து இருக்க கூடாது.
ஆனால் பௌர்ணமிக்கு முதல் நாள் பிறந்து இருந்தால் மிகச்சிறப்பான பலன் உண்டு. சித்திரை மாதம் சித்திரை நட்சத்திரத்தில் உள்ள பெளர்ணமி மிகவும் சிறப்புடையதாக இருக்கிறது. காரணம் அன்று சூரியன் மேஷ வீட்டில் மிகவும் உச்சம் பெற்று அதிகமான கதிர்களை வெளியிடுகிறான்.
அப்போது பிறக்கும் ஜாதகர் அதிக தன்னம்பிக்கை உடையவனாகவும் எதையும் சாதிக்கும் வல்லமை உடையவனாகவும் உள்ளான். சித்ரா பௌர்ணமி வெகு சிறப்பான விழாவாக கொண்டாடுகிறோம்.
கார்த்திகை மாதம் கிருத்திகை நட்சத்திரத்தில் உள்ள பௌர்ணமியும் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது. காரணம் சந்திரன் ரிஷபத்தில் உச்சமடைகிறான். அதனால், சந்திரன் முழு சக்தியையும் சூரியனிடமிருந்து பெறுகின்றது. இந்த நாளில் கார்த்திகை தீபம் ஏற்றி தீபத்திருநாளாக கொண்டாடுகிறோம்.
தைமாதம் பூச நட்சத்திரத்தில் உள்ள பௌர்ணமியும் சிறந்த பௌர்ணமியாக உள்ளது. கடகத்தில் சந்திரன் தன் சொந்த வீட்டில் வலிமை பெறுகிறான். பழனியில் முருகப் பெருமானை வழிபட்டு அந்த மலையின் கதிர்கள் நம்மீது பட்டு சிறப்பான பலன்களைத் தருகிறது.
ஆவணி மாதம் சூரியன் தன் சொந்த வீட்டில் இருக்கும் போது சந்திரன் அவிட்ட நட்சத்திரத்தில் பயணிக்கும் காலத்தில் பிறக்கும் குழந்தையும் சிறந்த பலம் உடையவனாகவும் தேஜஸ் உடையவனாகவும் திகழ்கிறான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu