யமதீபம் என்றால் என்ன? அதனை ஏன் வழிபட வேண்டும்
எம தர்மர் - கோப்புப்படம்
இந்திய கலாசாரத்தில் எத்தனையோ தெய்வங்கள் வழிபடப்படுகின்றன. சிவபெருமானையும், மஹாவிஷ்ணுவையும், தேவியையும் வழிபட்டு மக்கள் தங்கள் தெய்வீகக் கடமைகளை செய்து வருகின்றனர். ஆனால், யாரும் ‘யமதர்மராஜனை’ தெய்வமென்று நினைப்பதில்லை. பூஜிப்பதுமில்லை. காரணம் யமன் என்பவன் தங்கள் உயிரை எடுத்துச் செல்லும் கொடியவன் என்று, அவனை நினைத்தாலே எல்லோருக்கும் பயம்தான் வருகிறதே தவிர பக்தி வருவதில்லை.
தர்மத்தின் தலைசிறந்த மூர்த்தி யமன். அதனால் தான் ‘யமதர்மராஜன்’ என்று அழைக்கப்படுகிறான். அவன் ஒரு நியாயமான நீதிபதி. அவன் நீதிமன்றமும் நியாயமான நீதிமன்றம். பூமியிலே கொலை, கொள்ளை போன்ற கொடும் செயல்களை செய்து விட்டு, திறமையான வக்கீலைக் கொண்டு வாதாடி, பொய் சாட்சிகளை வைத்து ஜோடித்து, தான் நிரபராதி என்று நிரூபித்து விட்டாலும் யமனுடைய தீர்ப்பிலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. அங்கே குற்றத்துக்கான (பாவத்துக்கான) தண்டனை கண்டிப்பாகக் காத்திருக்கிறது.
மனிதன் ஆரம்பிக்குமிடம் இன்பமான சூழ்நிலை. அவன் முடிக்குமிடம் மரணம். குழந்தை, இளமை, வாலிபம், கிழம், மூப்பு, பிணி நோய் இதற்கெல்லாம் பிறகு மரணம். இதுவே மனிதனின் வாழ்க்கைப் பயணம். மரணம் கண்ணுக்குத் தெரியாத ஒன்று. அது, அமைதியானது மரணம் என்பது இயற்கை நமக்குத் தந்த பரிசு.
சொத்து சேர்த்து ‘ஓஹோ’ வென்று வாழ வேண்டும் என்று பித்துப்பிடித்து அலைபவனும் செத்துப்போவோம் என்று மரணத்தைக் கண்டு பயப்படுகிறான். பூமிக்கு எப்படி வந்தானோ, அப்படியே போய்ச் சேருகிறான்.
ஆனால், வந்த இடம் அவனுக்குப் பூமி என்று தெரிகிறது. மரணத்திற்குப் பிறகு போகும் இடம் எது என்று அவனுக்குத் தெரிவதில்லை. எதை எதை எல்லாமோ கண்டுபிடித்து, பட்டம் பல பெற்ற விஞ்ஞானிகள் கூட, மரணத்துக்குப் பிறகு தான் செல்லக்கூடிய இடம் இன்னது தான் என்று இன்று வரை சொல்ல முடியவில்லை.
அப்படிப்பட்ட ரகசியமான இடத்திலே அமர்ந்து கொண்டு நீதி தவறாமல் ஆட்சிபுரியும் நீதிபதி தான் யமதர்மராஜன். நமக்கு மரணத்தை ஏற்கும் மனப்பக்குவத்தைத் தர வேண்டுமா? மரணத்திற்குப் பிறகு நல்ல உத்தம நிலையை நாம் அடைய வேண்டுமா? இல்லறத்தில் ஏற்படும் மரண சம்பவங்கள் நம் மனநிலையை பாதிக்காமல் இருக்க வேண்டுமா?
மரணபயம் நம்மைவிட்டு அகல வேண்டுமா? துர்மரணமின்றி அமைதியான மரணம் ஏற்பட வேண்டுமா? இதற்கெல்லாம் நாம் அந்த யமதர்மராஜனை தவறாமல் வழிபட வேண்டும். நமக்கு எல்லாமே நல்லதாய் நடக்கும்; இறப்பை அமைதியாக தெளிவான குழப்பமில்லாத மனதுடன் எதிர்நோக்க முடியும்.
எனவே யமதர்மராஜனின் யமலோகப் பாதைக்கு இருட்டு என்ற கொடிய பாதையில் தட்டுத்தடுமாறி சென்று அல்லல்படாமல், பிரகாசமான வெளிச்சத்திலே சுகமான பயணத்தை மேற்கொள்ள தீபாவளிக்கு முதல் நாள் இரவு அரைலிட்டர் நல்லெண்ணெய் பிடிக்கும் அளவிற்கு ஒரு பெரிய மண் அகல் விளக்கில் பஞ்சுத் திரியிட்டு அந்த விளக்கை ஏற்றி நமது வீட்டின் கூரையின் மேற்பகுதியில் எவ்வளவு உயரத்தில் வைக்க முடியுமோ அவ்வளவு உயரத்தில் தெற்கு நோக்கி வைத்து வழிபடவேண்டும். அப்போது கீழ்க்கண்ட மந்திரத்தைச் சொல்லி வழிபட்டால் யம தர்மராஜனின் அனுகிரகம் கிடைக்கும்.
ஸ்ரீ யமாய நம: யமாய தர்ம ராஜாய
ம்ருத்யவே சாந்த காயச
வைவஸ்தாய காலாய ஸர்வ பூத க்ஷயாயச
ஓளதும்பராய தத்னாய நீலாய பரமேஷ்டினே!
வ்ருகோதராய சித்ராய சித்ரகுப்தாய வை நம:
சித்ரகுப்தாய வை ஓம் நம இதி:
‘அனைத்தையும் அடக்கி ஆள்பவராகவும், தர்ம மூர்த்தியாகவும் தீவினையை அழிப்பவராகவும், விவஸ்வானுடைய புத்திரனாகவும் காலத்தின் வடிவாகவும், அனைத்து ஜீவன்கட்கும் நல்லதோர் முடிவை அளிப்பவராகவும், பலவித பிறப்பு, இறப்பு ரகசியங்களைத் தன்னுள் கொண்டவருமான அனைவராலும் பூஜிக்கப்படுபவருமான ஸ்ரீயமதர்மராஜமூர்த்தியை வணங்குகிறேன். பெரும் வயிறு படைத்தவனும் சித்திரத்திலிருந்து தோன்றியவனுமான சித்ரகுப்தனுக்கு மீண்டும் மீண்டும் நமஸ்காரங்கள்’ என்று பொருள்.
இந்த யமதீபத்தை தீபாவளியில் ஒரு திருவிளக்காக ஏற்றி வழிபடவேண்டும். தீபாவளிக்கு முன்பு வருகின்ற ‘மகாளய பட்ச’ நாட்களில் நமது மூதாதையர்கள் பூலோகம் வந்து நம்முடன் இருந்து விட்டு மஹாளய அமாவாசையில் மீண்டும் திரும்பி மேலுலகம் செல்கின்றனர். அப்படி அவர்கள் செல்லும் போது இந்த ‘யமதீபம்’ அவர்களுக்கு வழிகாட்டுகிறது.
இந்த வெளிச்சத்தில் அவர்கள் சுகமான பயணம் மேற்கொள்ளும்போது இப்படி அவர்களுக்கு வெளிச்சம் காட்டிய நம்மை ஆசீர்வதித்துச் செல்கின்றனர். அந்த ஆசீர்வாதம் நமக்கு பல நன்மைகளை வாரி வழங்கக்கூடியது. அப்படிப்பட்ட ஆசீர்வாதத்தை நாம் பெற ‘இந்த யமதீபத்தை’ ஏற்றி வழிபட வேண்டும்.
‘யமதீபம்’ என்பது யமலோகத்தில் மட்டும் காணப்படுகின்ற அற்புத ஒளி விளக்காகும். நல்ல மரணம் அடைந்தவர்களை இந்த விளக்கு வெளிச்சம் சுகமான பயணத்துடன் யமலோகத்தின் உள்ளே கொண்டு செல்கிறது. எவனொருவன் இறந்த பின்பு, அவன் சவத்தை ஊர்வலமாக எடுத்துச் செல்லும் போது ‘‘உத்தமன் போய் விட்டான்’’ என்று ஊர் புலம்புகிறதோ அவனது மரணம் அவனுக்கு இயற்கை தந்த பரிசு. எவனொருவன் இறந்தபின்பு, அவன் சடலத்தை எடுத்துச் செல்லும் போது,
‘‘சண்டாளன் போய்த் தொலைந்தான்’’ என்று ஊர் மகிழ்ச்சியடைகிறதோ அவனது மரணம் இறைவன் அவனுக்குத் தந்த எச்சரிக்கை. ‘‘ஆடாதீர் மனிதர்களே! உங்கள் ஆட்டத்தை அடக்கி வைத்து, முழுவதுமாக முடக்கி வைக்க நான் இருக்கிறேன் என்பதே அந்த எச்சரிக்கை. எனவே எந்த ஒரு மனிதனின் மரணமும் தர்மத்தோடு இணைந்து இருக்க வேண்டும். தர்மத்திலிருந்து தவறியவனின் மரணம் தண்டனைக்குரிய மரணம் என்பதை மறக்க வேண்டாம்.
தவறு செய்வது மனிதனின் பழக்கம். அதை உணர்ந்து நடந்து கொண்டால் மன்னிப்பு கிடைக்கும். கூடு விட்டு ஆவி போனபின்பு எல்லோரும் கூடும் இடம் யமலோகம். அந்த லோகத்தின் அதிபதி யமனை வழிபட்டு நற்கதி அடைய யமதீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu