ஓம் என்ற சொல்லுக்கும் மனித உயிருக்கும் என்ன தொடர்பு?

ஓம் என்ற சொல்லுக்கும் மனித உயிருக்கும் என்ன தொடர்பு?
X
கருப்பையில் குழந்தை "ஓம்" வடிவில்தான் உள்ளது. இதுவே "ஓம்" சொல்லுக்கும், மனிதனுக்கும் உள்ள தொடர்பினை உணர்த்தும்.

மனிதனின் உடலும் இறைவனின் இயற்கை வடிவான ஓங்கார வடிவத்துடன் அமைந்திருக்கிறது. மனித வடிவமும் அருள் வடிவம் தான். தொப்புளில் பிராணன் எனப்படும் மூச்சுக் காற்று ஒரு மனிதன் எவ்வளவு நாள் வாழ்வான் என்பதற்கு ஏற்ப, அந்தந்த வயதுக்குத் தக்கபடி எவ்வளவு மூச்சுகள் இருக்க வேண்டுமோ அவ்வளவு மூச்சும் அநேக சுற்றுகளாய் சுற்றிப்படுத்துக் கொண்டு, அதிலிருந்து இரவு பகலாய் மூச்சு செலவழிந்து கொண்டே வந்து, இறுதியில் தொப்புளில் மூச்சு எதுவுமில்லாமல் காலியாகிவிடும். மூச்சு தொப்புளில் காலியாகி விட்டால் உயிர் போய் விட்டது என்று சொல்வார்கள். இந்த மூச்சே உயிர் என்றும், பிராணன் என்றும் சொல்லப்படும்.

நாம் உயிர் வாழ சுவாசிக்கிறோம். நமக்குத் தேவையான வாயு நாசித்துவாரங்கள் வழியாக (சிலர் வாய் வழியாகவும் சுவாசிப்பதுண்டு) நுரையீரலுக்குச் சென்று அதை இயங்கச் செய்யும். இது நாம் சுவாசிக்கும் முறை. ஆனால் யோகியர்களும் சித்தர்களும் யோக நிலையில் இப்படி வெளிக்காற்றை நாசிகள் வழியாக சுவாசிப்பதில்லை. அவர்கள் சுவாசிக்கும் முறையே வேறு.

கருப்பையில் இருக்கும் குழந்தை சுவாசிப்பதைப் போலவே அவர்கள் சுவாசிப்பர். அதாவது தொப்புளைச் சுற்றியிருக்கும் பிராணன் எனப்படும் வாயுவைக் கொண்டு நுரையீரலை இயங்கச் செய்வர்.

தொப்புளில் "ஓ" என்ற எழுத்தின் ஒலி வடிவம் தொடங்குகிறது என்றால், தொப்புளைச் சுற்றி காற்று இருக்கிறது என்பது தெளிவு. அந்த காற்றே உயிர்க்காற்று. அதுவே நம் உடம்பிற்கு உயிரூட்டுவதால் உயிர்மூச்சு. இப்படி உயிரா கிய- பிராணனாகிய வாயுவிலிருந்து உருவெடுத்து மேலெழும்பி வருவதே "ஓம்" எனும் மந்திரம். பிராணனிலிருந்து வெளிப்படுவதாலேயே இது பிரணவ மந்திரம் என்றாயிற்று.

நாம் சொல்லும் மந்திரங்களிலும் நாமங்களிலும் "ஓம்" என்ற பிரணவத்தை முதலில் கூறக் காரணமே, சொல்லும் மந்திரங்களும் தெய்வங்களின் நாமங்களும் உயிரோட்டமாக இருக்க வேண்டும் என்பதற்காகத் தான். அநேகமாக நாம் பேசும்போது உள்காற்று வெளியேற்றப்படுகிறது. ஆனால் "ஓம்" என உச்சரிக்கும் போது வெளிக்காற்று உள்வாங்கப்படுகிறது.

அடுத்து, காதுகள் "ஓம்" என்ற பிரணவ எழுத்து வடிவத்திலேயே அமைந்துள்ளன. நமது காதுகளுக்குள்ள தனிச்சிறப்பு என்னவெனில், இது எப்போதும், எக்காலமும் நிறம் மாறாத ஓர் உறுப்பு. குழந்தை கருவறையிலிருந்து வெளி உலகுக்கு வந்தவுடன் செக்கச் செவேரென்றோ, நல்ல வெள்ளையாகவோ இருக்கும்.

வெளியுலகம் கண்டவுடன் சூரியனின் கதிர்கள், வெளிக்காற்றுகளின் தாக்கம் மற்றும் கால நிலைக்கேற்ப அதன் நிறம் சிறிது சிறிதாக மாறுபடும். சிவப்பாக அல்லது வெள்ளையாக இருந்த குழந்தை கறுப்பாக மாறலாம். ஆனால் காதுகள் அப்படியல்ல.

பிறந்த குழந்தை பெரியவனானதும் எந்த நிறத்திலிருக்கும் என்பதை அறிய குழந்தையின் காதுகளின் நிறத்தை வைத்தே தெரிந்துகொள்ளலாம். காரணம் காதுகள் ஒருபோதும் நிறம் மாறுவதில்லை.

ஆக, நாம் கருவில் "ஓம்" என்ற பிரணவத்தின் எழுத்து வடிவத்திலிருந்தோம். ஒலி அதிர்வுகளைக் கேட்க வைக்கும் காதுகள் "ஓம்" என்ற எழுத்து வடிவத்தில் நிலையாக அமைந்து விட்டது. இன்றைய நவீன உலகில் தினந்தோறும் நாம் எவ்வளவோ ஒலிகளைக் காதுகளால் கேட்கிறோம். கண்களால் எவ்வளவே காட்சிகளைக் காண்கிறோம். ஆனால் அவற்றிலெல்லாம் கிடைக்காத சுகத்தை, மன அமைதியை "ஓம்" என்ற பிரணவத்தை உச்சரிப்பதாலும் காதுகளால் கேட்பதாலும் பெற முடிகிறது.

ஆலயத்தினுள் எழுப்பப்படும் "ஓம்" என்ற மந்திர அதிர்வலைகள் நம் உடலெங்கும் பாய்ந்து, நம்மை ஒரு பரவச நிலைக்குக் கொண்டு செல்கின்றன. அது மந்திர ஜாலமா, மாயா ஜாலமா, இந்திர ஜாலமா என்பதை நாமறியோம். ஆனால் அது நமது ஐம்புலன்களையும் ஒரு சேர அதிரவைத்து, அடக்கி கட்டுக்குள் வைக்கிறது என்பது மட்டும் உண்மை.

"ஓம்" என்ற பிரணவத்தை உச்சரிக்கும்போது முதல் நாபியில் அதிர்வலைகள் உருவாகி, உடலெங்கும் மின் ஆற்றல் பாய்வதை உணர முடியும். இந்த அதிர்வலைகளில் ஒருவித காந்த சக்தி இருப்பதை உணரலாம். இன்று மருத்துவ உலகில் மின்காந்த சிகிச்சையினால் பல நோய்கள் குணப்படுத்தப்படுகின்றன. இதற்கெல்லாம் அடிப்படை ஓம் என்ற மந்திரம் என்பதை மறந்து விடக்கூடாது.

Tags

Next Story
கொமதேக தலைவரின் மாபெரும் அறிவிப்பு: திமுக கூட்டணியில் எந்த பிரச்சனையும் இல்லை!