இறைவன் உங்களை தேடி வர நீங்கள் என்ன செய்ய வேண்டும்?
உயிருக்குப்போராடிய நிலையிலும் இல்லை என்று சொல்லா வரம் கேட்ட கர்ணன்.(கோப்பு படம்)
கர்ணனைக் காத்த அந்த தர்மத்தையும் கண்ணன் தானமாகப் பெற்றுக் கொண்டான். கண்ணனுக்கே தாங்கவில்லை. "உனக்கு ஒரு வரம் தர விரும்புகிறேன். என்ன வரம் வேண்டுமோ கேள்" என்றான். அப்போதும் கர்ணன் "மறு பிறவி என்று ஒன்று வேண்டாம். அப்படி ஒரு வேளை பிறக்க நேர்ந்தால், யாருக்கும் இல்லை என்று சொல்லாமல் கொடுக்கும் உள்ளத்தைத் தா" என்று வேண்டினான்.
கண்ணன் அழுதே விட்டான். இப்படி ஒரு நல்லவனா என்று அவனால் தாங்க முடியவில்லை. கீழே விழுந்து கிடந்த கர்ணனை அப்படியே எடுத்து மார்போடு அனைத்துக் கொண்டான்.
கண்ணனின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. கர்ணன் கேட்டதோ இல்லை என்று சொல்லாத உள்ளம் மட்டும் தான். கண்ணன் மேலும் பலவற்றை சேர்த்துத் தருகிறான். "நீ எத்தனை பிறவி எடுத்தாலும், தானம் செய்து, அதைச் செய்ய நிறைய செல்வமும் பெற்று, முடிவில் முக்தியும் அடைவாய்" என்று வரம் தந்தான்.
இறைவனைக்காண வேண்டும், முக்தி அடைய வேண்டும் என்று எவ்வளவோ பேர் எவ்வளவோ தவம் செய்வார்கள். எவ்வளவோ படிப்பார்கள். கர்ணன் இறைவனைக் காண வேண்டும் என்று தவம் செய்யவில்லை. முக்தி வேண்டும் என்று மெனக்கெட வில்லை.
இறைவன் அவனைத் தேடி வந்தான். கேட்காதபோதே விஸ்வரூப தரிசனம் தந்தான். அவனைக் கட்டி அணைத்துக் கொண்டான். கண்ணீர் விட்டான். செல்வம், ஈகை, முக்தி என்று எல்லாம் கொடுத்தான். இறைவனைத் தேட வேண்டாம். அவன் நாம் இருக்கும் இடம் தேடி வருவான். கேட்காதது எல்லாம் தருவான். நம்மைக் கட்டி அணைத்துக் கொள்வான். அதற்கு என்ன செய்ய வேண்டும்?
கர்ணன் தானம் செய்தான். செய் நன்றி மறவாமல் இருந்தான். எளியவர்களுக்கு உதவி செய்தான், தனக்கு உதவி செய்தவர்களுக்கு நன்றி மறக்காமல் இருந்தான். அவ்வளவு தான். உலகளந்த பெருமாள், அவனிடம் கை நீட்டி நின்றார். "ஈகை" எவ்வளவு பெரிய நற்செயல். இயன்றதைசெய்வோம் இல்லாதவர்க்கு.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu