புதுவீடு கட்றீங்களா..? அப்போ இதையெல்லாம் நீங்கள் கவனிக்கணும்..!

புதுவீடு கட்றீங்களா..? அப்போ இதையெல்லாம் நீங்கள் கவனிக்கணும்..!
X

வாஸ்து வீடு -மாதிரி படம் 

போர்வெல் முதல் பால்கனி வரை புதுவீடு கட்டும்போது, அவசியம் கவனிக்க வேண்டிய 6 வாஸ்து விஷயங்களை பார்க்கலாம்.

வாஸ்து சாஸ்திரப்படி ஒரு கட்டடத்தைக் கட்டும் போது, முக்கியமான அம்சங்களைக் கவனத்தில் கொள்ள வேண்டும். முதலில், கட்டடம் கட்டப்போகும் பிளாட்டில் முட்புதர்கள், கற்கள், இதர விரும்பத் தகாதப் பொருட்களை அகற்றி சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.

பிளாட்டின் நிருதி மூலையான தென்மேற்கு பகுதி 90 டிகிரியில் உள்ளதா என்பதைச் சரிபார்க்கவும். அப்படி இல்லையெனில் 90 டிகிரியில் இருக்கும்படி நிலத்தை ஒழுங்குப்படுத்த வேண்டும். இப்படி முக்கியமான வழிகாட்டுதலைத் தருகிறது வாஸ்து சாஸ்திரம். அவற்றில் அவசியமான 6 விஷயங்களை அறிந்துகொள்வோம்.

1. போர்வெல் எங்கே அமைப்பது?

கட்டடம் கட்டுவதற்கு நமது பிளாட்டில் அமைத்த போர்வெல் அல்லது கிணற்றில் இருந்து எடுத்த நீரை முதலில் பயன்படுத்துவது மிக விசேஷம்.பிளாட்டில் கட்டடத்துக்கும் மதிலுக்கும் இடையில் அமைந்த காலியிடத்தில், கீழ்க்காணும் திசைகளில் போர்வெல் அமைக்க வேண்டும்.

அ. பிளாட்டில் ஈசானிய மூலை அதாவது வடகிழக்கு.

ஆ. வடக்கில் சரிபாதிக்கு மேல் கிழக்கு பாகத்தில்.

இ . கிழக்கில் சரிபாதிக்கும் மேல் வடக்கு பாகத்தில்.

2. முதலில் கட்டத் துவங்குவது எதை? எப்படி?

தெற்கிலும் மேற்கிலும் வெட்டவெளியாக அமைந்திருக்கும் பிளாட்டில் வீடு கட்டும்போது, நிருதி மூலையைச் சரிப்படுத்தி, முதன்முதலில் மதிலைக் கட்டிக்கொள்வது மிகவும் நல்லது.

அடுத்ததாக மதிலுக்கும் இடையில் உள்ள காலியிடத்தை தெற்கை விட வடக்கில் அதிகமாகவும், மேற்கை விட கிழக்கில் அதிகமாகவும் இருக்கும்படி சரிசெய்து கொண்டு, வானக்கால் தோண்டவும். எதிரெதிர் மூலைக்குள்ள தூரம் சரியாக உள்ளதா என்பதையும் சரிபார்க்கவும். மதிலுக்கும் சரி, வீட்டுக்கும் சரி... முதன் முதலில் வானக்கால் தோண்டும்போது ஈசானிய மூலையில் தோண்ட ஆரம்பிக்கவும். அதன்பிறகு, கடைசியாக நிருதி மூலையில் (தென் மேற்கு) கடைக்கால் தோண்டும் வேலையை முடிக்கவும்.

3. கட்டுமானத்துக்குத் தேவையான மணலை எங்கு குவிக்கலாம்?

கட்டட வேலைக்கு முதன் முதலாக மணல் அடிக்கும்போது, பிளாட்டுக்குள் அல்லது பிளாட்டுக்கு வெளியே நிருதி மூலையில் (தென்மேற்கு பகுதியில்) அல்லது மேற்கில் தான் குவிக்க வேண்டும். வடகிழக்கு, கிழக்குப் பகுதிகளில் குவிக்கவே கூடாது. இதன் அடிப்படையிலேயே கற்கள் மற்றும் செங்கற்கள் முதலானவற்றையும் குவிக்க வேண்டும்.

அதேபோல், கட்டுமானத்தில் முக்கியமானது. வாசல்களை நிர்மாணிக்கும் தருணம். எனவே, வாஸ்து பிளானில் உள்ளபடி, உரிய இடங்களில் வாசல்களுக்கு இடம் விட்டுக் கட்டவேண்டும். எல்லா அறைகளையுமே நான்கு மூலைகள் இருக்குமாறு கட்ட வேண்டும்.

4. தள கான்கரீட் பணியை எந்த திசையில் தொடங்குவது?

தள கான்கரீட் போடும்போது நிருதி மூலையில் துவங்கி ஈசானிய மூலையில் முடிக்கவும். அதேபோல், கூரை அமைப்புக்கு சென்ட்ரிங் பலகை அமைத்தல், கம்பி கட்டுமானம், கான்கிரீட் போடும் வேலைகளை நிருதி மூலையில் ஆரம்பிக்கவும்.

லாஃப்ட் கான்கிரீட் அமைக்க விரும்பினால், அறைகளின் தெற்கு மற்றும் மேற்குச் சுவரில் அமைக்கவும். வடக்கு மற்றும் கிழக்கு சுவர்களில் அமைக்கக் கூடாது. மாடி கைப்பிடிச் சுவர் தெற்கைவிட வடக்கிலும், மேற்கைவிட கிழக்கிலும் உயரமாக இருக்கக் கூடாது. நான்கு புறமும் சமமாக இருக்கலாம்.

5. மடைத் துவாரங்கள்

மாடியில் மழை நீரும், வீட்டைக் கழுவிவிடும் நீரும் வடக்கு, வடகிழக்கு, கிழக்கு திசைகளில் வெளியேறும்படி மடைத் துவாரங்கள் அமைக்கவும். வீட்டின் தளம் நிருதி அறையில் உயரமாக அமைக்கவும். ஈசானிய அறையின் தளமானது மற்ற அறைகளைவிட தாழ்வாக இருக்கும்படி அமைக்கவும். இல்லையெனில் எல்லா அறைகளிலும் தளத்தின் உயரம் சமமாக இருக்கும்படி அமைக்கவும்.

6. பால்கனி

பால்கனி அமைப்பதாக இருந்தால், கூரை சென்ட்ரிங் அமைக்கும் போதே, வீட்டுக்கு வடக்கிலும், கிழக்கிலும் பால்கனி முழுமையாக வரும்படி அமைக்கவும். தெற்கிலும், மேற்கிலும் போர்டிகோ அமைத்தால் கூரை மட்டத்துக்கு அமைக்கவும். செப்டிக் டேங்கை காலி இடத்துக்கு வடக்கில் மையமாகவோ அல்லது காலி இடத்துக்கு கிழக்கே மையமாகவோ அமைக்கவேண்டும். இடத்துக்கு ஈசானியத்தில், வடக்கில் அல்லது கிழக்கில் ‘சம்ப்’ (பூமிக்குள் தண்ணீர் தொட்டி) அமைக்கலாம். மதிலின் உயரம்... மலை வாழிடங்கள் தவிர்த்து மற்ற இடங்களில் குறைந்தது 11 அடி அளவுக்கு இருப்பது சிறப்பு.

இந்த விஷயங்களை கவனத்துடன் செயல்படுத்தும் போது கட்டடப் பணிகளில் தடைகள் எதுவும் ஏற்படாது. புதுக் கட்டடத்தில் குடிபுகுந்து வசிக்கும் அன்பர்களுக்குச் சகல நன்மைகளும் உண்டாகும்.

வாஸ்து தோஷம் போக்கும் யந்திரம்.

ஏற்கெனவே கட்டிய வீட்டை வாங்கி, குடியேறும் அன்பர்கள், அங்கே ஏதேனும் வாஸ்து குறை இருந்தால் என்ன செய்வது?

‘பஞ்ச சிர ஸ்தாபனம்’ எனும் யந்திரத்தை வெள்ளியிலோ தங்கத்திலோ அல்லது தாமிரத் தகட்டிலோ தயார் செய்து, வீட்டின் தலைவாயிலில் ஸ்தாபித்து, வாஸ்து பூஜை செய்தால் போதும். சிங்கம், ஆமை, பன்றி, யானை, ஆண் எருது ஆகிய ஐந்து விலங்குகளின் தலைகள் பொறிக்கப்பட்ட இந்த யந்திரம், சகல வாஸ்து குறைபாடுகளையும் நீக்கவல்லது.

Tags

Next Story