மகாபாரத போரின் முடிவை மாற்றி அமைத்தது எது தெரியுமா?
செய்திக்கான மாதிரி படம்
பாண்டவர்களும், கௌரவர்களும் போருக்குத் தயாராகிக் கொண்டிருந்த சமயம். ஒவ்வொரு ராஜ்ஜியமாக சென்று ஆதரவை திரட்டிக் கொண்டிருந்தனர். அப்போது கிருஷ்ணர் யாருடன் சேரப் போகிறார் என்பது பெரிய கேள்விக்குறியாக இருந்தது. கிருஷ்ணரும் பெரிய அரசன். துவாரகாவை ஆட்சி செய்கிறார். அவரிடம் 21,000 யானைகள் கொண்ட படையும், 65,000 குதிரைகள் கொண்ட படையும், 1,00,000 போர் வீரர்கள் என்று பெரிய படை இருந்தது. இதனால் கிருஷ்ணரை தங்களுக்கு ஆதரவாக வைத்துக் கொள்வதற்காக துரியோதனனும், அர்ஜுனனும் கிருஷ்ணரைக் காணச் சென்றிருந்தனர்.
துரியோதனன் முதலிலே கிருஷ்ணரைக் காணச் செல்கிறான். அங்கே கிருஷ்ணர் படுத்து உறங்கிக் கொண்டிருக்கிறார். இதை கண்ட துரியோதனன் கிருஷ்ணரை எழுப்பாமல் அவருடைய தலைக்கு அருகிலே சென்று அமர்கிறான். அடுத்ததாக வந்த அர்ஜுனன் கிருஷ்ணர் மீது கொண்ட பக்தியின் காரணமாக அவரது கால் அருகில் அமர்கிறான்.
கிருஷ்ணருக்கு தூக்கம் கலைந்ததும் இயல்பாக காலுக்கு அருகிலுள்ள அர்ஜுனன் மீது பார்வை போகிறது. ‘வா! அர்ஜுனா’ என்று வரவேற்கிறார். பிறகு தான் துரியோதனை பார்க்கிறார். இரண்டு பேருமே போருக்கான கிருஷ்ணரின் ஆதரவை கேட்கிறார்கள்.
இப்போது கிருஷ்ணர் சொல்கிறார், ‘தான் ஒரு பக்கமும் தன்னுடைய படைகள் ஒரு பக்கமும் இருப்போம். ஆனால், நான் போரிட மாட்டேன். இப்போது இந்த இரண்டில் எது உங்களுக்கு வேண்டும்?’ என்று கேட்கிறார். முதலில் அர்ஜுனனை பார்த்ததால் அவனிடமே முதலில் கேட்கிறார். அதற்கு அர்ஜுனனோ, ‘எனக்கு படையெல்லாம் வேண்டாம். நீங்கள் எங்களுடன் இருந்தால் போதும்' என்று கேட்கிறான்.
துரியோதனன் மனதிற்குள், ‘பாண்டவர்கள் இவ்வளவு பெரிய முட்டாளாக இருக்கிறார்கள். சண்டைபோடாத கிருஷ்ணரை வைத்துக் கொண்டு என்ன செய்யப் போகிறார்கள்?’ என்று நினைத்துக் கொண்டு, கிருஷ்ணரின் படைகளை துரியோதனன் கேட்டு வாங்கிக்கொண்டு மகிழ்ச்சியாக சென்று விடுகிறான்.
இந்த ஒரே ஒரு முடிவு மொத்த மகாபாரதத்தின் முடிவையும் மாற்றியமைத்தது. ஏனெனில், துரியோதனன் தேர்ந்தெடுத்தது பொருளை. அர்ஜுனன் தேர்ந்தெடுத்தது கிருஷ்ணர் என்னும் அருளை. கிருஷ்ணர் எவர் பக்கமோ வெற்றியும் அவர் பக்கமேயல்லவா? இந்த நிகழ்வே மகாபாரதப் போரில் பாண்டவர்களின் வெற்றியை ஆணித்தரமாக உறுதி செய்தது என்று சொல்லலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu