இன்று மஹாகந்தசஷ்டி திருவிழா ஆரம்பம்

பைல் படம்
கந்தசஷ்டி விரதம், தீபாவளி பண்டிகைக்குப்பின் வரும் ஆறு நாட்கள் நடைபெறுகிறது. திருச்செந்தூரில் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா.
எந்த வினையானாலும், கந்தன் அருள் இருந்தால் வந்த வழி ஓடும் என்பது ஆன்றோர் வாக்கு. அந்த ஆறுமுகனுக்கு உரிய விரதங்களுள் மிக முக்கியமானதாகச் சொல்லப்படுவது, கந்தசஷ்டி விரதம். குறிப்பாக குழந்தை பாக்கியம் வேண்டுபவர்கள் கந்தசஷ்டி விரதம் இருந்தால் முருகனே குழந்தையாக அவதாரம் செய்வார் என்பது அசைக்கமுடியாத நம்பிக்கை.இதைத் தான் சஷ்டியில் இருந்தால் அகப்பை(கருப்பை)யில் வரும் என்ற பழமொழியாக கூறுவார்கள். முசுகுந்தச் சக்கரவர்த்தி, வசிஷ்ட முனிவரிடம் இவ்விரதம் பற்றிக் கேட்டறிந்து கடைப்பிடித்து பெரும்பயன் அடைந்தாராம்.
முனிவர்கள், தேவர்கள் உள்ளிட்ட பலரும் கடைப்பிடித்த விரதம் இது. வேண்டுவன யாவும் தரும் கந்த சஷ்டி விரதத்தை எப்படிக் கடைபிடிப்பது? கந்தசஷ்டி தினம் முதல் சூரசம்ஹாரம் வரை மிக எளிமையான சைவ உணவினை, குறைந்த அளவில் உட்கொண்டு எப்போதும் முருகனின் சிந்தனையிலேயே விரதம் இருங்கள். பொதுவாக விரத தினங்களில் மக்கள் சைவமாக இருந்தால் போதும் என்று எண்ணிக் கொண்டு, பலகாரங்களை விருப்பமாக உண்ணுகின்றனர். ஆனால், விரதத்தை நியமத்தோடு கூடியதாக இருப்பதே முழுபலனைத் தரும்.
கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் மதியம் உச்சிவேளையில் ஒருபொழுது மட்டும் பச்சரிசி உணவு தயிர் சேர்த்து உண்ண வேண்டும். காலை மற்றும் இரவில் பால், பழங்கள் மட்டும் சாப்பிடலாம். ஆனால், வயோதிகர்கள், நோயாளிகள் ஆகியோர் விரதத்தின் போது அவரவர் உடல்நிலைக்கு தக்கபடி நடந்து கொள்ள விதிவிலக்கு உண்டு. காலை, மாலை ஆகிய இருவேளையும் நீராடுவது நல்லது.
ஆறுமுகமான - சண்முக தத்துவம் என்ன ? ஒரு முகம் - மஹாவிஷ்ணுவுக்கு, இரு முகம் - அக்னிக்கு,மூன்று முகம் - தத்தாத்ரேயருக்கு, நான்முகம் - பிரம்மனுக்கு,ஐந்து முகம் - சிவனுக்கு, அனுமனுக்கு, காயத்ரி தேவிக்கு, ஹேரம்ப கணபதிக்குஆறு முகம் - கந்தனுக்கு. நக்கீரர் தமது திருமுருகாற்றுப்படையில் இவ்வாறு கூறுவார் :
உலகைப் பிரகாசிக்கச் செய்ய ஒரு முகம்,. பக்தர்களுக்கு அருள் ஒரு முகம்,. வேள்விகளைக் காக்க ஒரு முகம், உபதேசம் புரிய ஒரு முகம், தீயோரை அழிக்க ஒரு முகம், பிரபஞ்ச நன்மைக்காக வள்ளியுடன் குலவ ஒரு முகம்.
சரவணபவ - என்பது ஷடாக்ஷர மஹாமந்திரம் (6 எழுத்துகள்). இதன் மகிமை என்ன?
ச - லக்ஷ்மிகடாக்ஷம்.ர - ஸரஸ்வதி கடாக்ஷம்.வ - போகம் - மோக்ஷம்.ண - சத்ருஜயம்.ப - ம்ருத்யுஜயம்.வ - நோயற்ற வாழ்வு ஆக, பிரணவ ஷடாக்ஷரம் கூறி இவ்வாறு பயன்களும் பெறலாம். ஆறுபடை வீடுகளும் ஆறு குண்டலினிகளாக விளங்குகின்றன.
திருப்பரங்குன்றம் - மூலாதாரம்.திருச்செந்தூர் - ஸ்வாதிஷ்டானம். பழனி - மணிபூரகம்.சுவாமிமலை - அனாஹதம். திருத்தணிகை - விசுத்தி.பழமுதிர்சோலை - ஆக்ஞை.. ஆக ஆறுமுகனான திருமுருகனை, விசாக, கார்த்திகை, பௌர்ணமி நாட்களில் ஸ்கந்த ஷஷ்டியில் துதித்து வழிபட்டு குஹானந்த அனுபூதி வாரிதியில் மூழ்குவோம். முருகனுக்கு மூன்று மயில்கள் உண்டு. மாங்கனி வேண்டி உலகைச் சுற்றி வர உதவிய மயில் மந்திர மயில்.
சூரசம்ஹாரத்தின்போது இந்திரன் மயிலாகி முருகனைத் தாங்கினான். இது தேவ மயில். பின் சூரனை இருகூறாக்கியதில் வந்த மயில்தான் அசுர மயில். ஆறுமுகமும் 12 கரங்களும் கொண்ட முருகனின் திருக்கோலத்தை சஷ்டி விழாவின்போது மட்டுமே திருச்செந்தூரில் முழுதாகத் தரிசிக்கலாம். மற்ற நாட்களில் அங்கவஸ்திரத்தால் மூடி விடுவார்கள். வியாசர் எழுதிய 18 புராணங் களில் ஸ்காந்தம் என்னும் கந்தபுராணமே மிகப்பெரியது. ஒரு லட்சம் சுலோகங்கள் கொண்டது. மற்ற எல்லா புராணங்களும் சேர்ந்தே மூன்று லட்சம் சுலோகங்கள்தான். கந்தன் பல பெயர்களால் போற்றப்படுகிறான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu