சோறு கண்ட இடம் சொர்க்கம்னா இதுதான் அர்த்தமா?
தஞ்சை பெருவுடையார் கோவில் அன்னாபிஷேகம்
ஐப்பசி மாதம் ஐஸ்வர்யங்களை அள்ளித்தரும் மாதமாகும். மற்ற மாதங்களில் வரும் பௌர்ணமியை காட்டிலும் ஐப்பசி மாத பௌர்ணமிக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு. ஏனெனில், அன்றுதான் சந்திரன் தனது சாபம் முழுமையாகத் தீர்ந்து பதினாறு கலைகளுடன் முழுப் பொலிவுடன் திகழ்கிறார்.
ஐப்பசி மாத பௌர்ணமியன்று விரதம் இருந்தால், திருமணம் ஆகாத பெண்களுக்கு விரும்பிய மணவாழ்க்கை அமையும். திருமணமான பெண்கள் விரதம் இருந்தால் புத்திர பாக்கியமும், கணவனுக்கு நீண்ட ஆயுளும், ஆரோக்கியமும் கிடைக்கும்.
சிவனின் லிங்க திருமேனிக்கு ஐப்பசி மாதம் வரக்கூடிய பௌர்ணமி அன்று வருடந்தோறும் அன்னாபிஷேகம் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கர்ப்ப கிரகத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சமைத்த சாதங்கள், காய்கறிகள் மற்றும் பழங்களை கொண்டு அபிஷேகம் செய்யப்படுகிறது. நாம் உண்ணுவதற்கு உணவளித்த எம்பெருமானுக்கு நன்றி கூறும் விதமாக இந்த அன்னாபிஷேகம் செய்யப்படுகிறது.
எல்லா சிவாலயங்களிலும் அன்னாபிஷேகம் நடைபெற்றாலும் பெயர் பெற்ற தலமான தமிழகத்தின் நெற்களஞ்சியமான தஞ்சை மாவட்டத்தில் உள்ள பிரகதீஸ்வரர் ஆலயம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் பிரகதீஸ்வரர் ஆலயங்களில் சிறப்பாக அன்னாபிஷேக வழிபாடு செய்யப்பட்டு வருகிறது.
சமைத்த அன்னத்தை சிவலிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதை பார்த்தால் ஏழேழு பிறவிக்கும், நமக்கு உணவிற்கு எவ்வித பிரச்சனையும் ஏற்படாது என்பது ஐதீகம். அன்னாபிஷேகத்தை கண்டு வணங்கிச் செல்ல இந்தியா முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் கங்கைகொண்ட சோழபுரத்திற்கு வருகை தருவதுண்டு.
சிவபெருமான் மற்றும் பார்வதி தேவி ஆகிய இருவரின் அருளையும், ஒரு சேர பெறுவதற்கு ஆண்களும், பெண்களும் ஐப்பசி பௌர்ணமியில் விரதமிருந்து இறைவனை நோக்கி பிரார்த்தனை செய்தால் நினைத்தது நிறைவேறும். அதனால் தான் முழு நிலவு தினங்களில் சிறப்பான வழிபாட்டு முறைகளை நம் முன்னோர்கள் நமக்கு காட்டி இருக்கிறார்கள்.
சிவனுக்கு அன்னத்தை பூசி பூஜிப்பது ஏன்?
அன்னசூக்தத்தில் உள்ள மந்திரம் அன்னத்தின் தன்மையை எடுத்துச் சொல்கிறது. ஒருவன் என்னை (உணவு) நிறைய சாப்பிடத் தொடங்கினால் அவனை நான் சாப்பிட்டு விடுவேன், என்கிறது அந்த மந்திரம். கடவுளுக்குப் படைத்த பிரசாதம் ஆனாலும், அளவுக்கு அதிகமாக சாப்பிடக்கூடாது. அன்னத்தை கடவுளாக உணர்ந்து அளவாகச் சாப்பிட வேண்டும். அன்னத்தை வீணாக்கக்கூடாது.
தாயின் அன்பினை உணர்த்தும் விஷயங்களில் உணவு உன்னதமானது. அம்மையப்பராக இருந்து உலகை காத்தருளும் சிவபெருமானை அன்னத்தால் அபிஷேகம் செய்து வழிபடுகிறோம்.
ஆகாயத்தில் பிறந்த காற்றின் துணையுடன் தீ எரிகிறது. தீயில் நீரும், நீரில் நிலமும் பிறக்கின்றன. நிலத்தில் விளைந்த அரிசி, நீரில் மூழ்கி, தீயால் வெந்து அன்னமாகிறது. எனவே, அன்னம் என்பது ஐம்பெரும் பூதங்களின் சேர்க்கை. அன்னம், அபிஷேகத்தின் போது ஆண்டவனை முழுவதும் அணைத்துத் தழுவிக்கொள்கிறது. அவனிடமே அடைக்கலமாகிறது.
ஐம்பெரும் பூதங்களையும் தன்னுள் அடக்கி கொள்ளும் அன்னம் இறுதியில் இறைவனிடத்தில் சேர்கிறது. அன்னத்தின் அருமையையும், பெருமையையும் புரிந்து அன்னத்தை வீணாக்கக்கூடாது என்பதற்காக அன்னத்தை சிவனுக்கு அபிஷேகம் செய்கின்றனர்.
சோறு கண்ட இடம் சொர்க்கம் என்பதன் பொருள் இதுதானா ..
உலகில் வாழும் உயிரினங்களுக்கு எல்லாம் உணவளிக்கும் இறைவனுக்கு நன்றி கூறும் விதமாகவே ஐப்பசி பவுர்ணமி நாளில் அன்னாபிஷேகம் செய்கின்றனர். இந்த அன்னாபிஷேகத்தை பார்ப்பவர்களுக்கு சொர்க்கம் நிச்சயம். இதைத்தான் சோறு கண்ட இடம் சொர்க்கம் என்று கூறியுள்ளனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu