திருப்பதிக்கு வயது 892..! பெயர் சூட்டியது ராமானுஜர்.. இதுவரை தெரியாத தகவல்..

திருப்பதிக்கு வயது 892..! பெயர் சூட்டியது ராமானுஜர்.. இதுவரை தெரியாத தகவல்..
X

திருப்பதி கோயில் கோபுரத்தோற்றம்

தற்போது திருப்பதிக்கு 892 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தெரியாத ஒரு விஷயம் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது

திருப்பதி நகருக்கு வயது 892. இதனையொட்டி நேற்று திருப்பதி உதயமான நாள் விழா வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. வைணவ ஆச்சாரியரான ராமானுஜர் கி.பி 1130ம் ஆண்டில் திருப்பதி வந்தபோது, கோவிந்தராஜ புரமாக இருந்த ஊர், திருப்பதி என பெயர் சூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

இது குறித்து சில கல்வெட்டுகளை ஆராய்ச்சி செய்த பின்னர், திருப்பதி நகரம் உருவாகி 892 ஆண்டுகள் ஆனதாக தெரிய வந்ததால், நேற்று திருப்பதி நகரம் உதய தினத்தை திருப்பதி எம்.எல்.ஏ. கருணாகர்ரெட்டி தலைமையில் விழாவாக கொண்டாடப்பட்டது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி திருக்கோயிலில் இருந்து உற்சவருக்கு பூஜைகள் செய்த பின்னர், அங்குள்ள ராமானுஜரின் சந்நதியிலிருந்து ஊர்வலம் புறப்பட்டது.

இந்த ஊர்வலம் திருப்பதி நகரில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக மீண்டும் கோவிந்தராஜ சுவாமி கோயில் வந்தடைந்தது.இதில் பங்கேற்ற எம்.எல்.ஏ., கருணாகர் ரெட்டி, திருப்பதி நகர மேயர் டாக்டர் சிரிஷா, துணை மேயர் அபினய், ஆணையர் கிரிஷா, மாநகராட்சி கவுன்சிலர்கள், அதிகாரிகள், பொது மக்கள் பலர் பங்கேற்றனர்.

இதுகுறித்து தேவஸ்தான பெரியஜீயர் கூறியதாவது: சிவ பக்தனான கிருமி கண்ட சோழன் எனும் அரசன், வைணவ கோயில்களை அழித்து வந்தார். இதில் ஒரு கட்டமாக, சிதம்பரத்தில் இருந்த கோவிந்தராஜ பெருமாளின் சிலையை கடலில் வீசினார். அப்போது சிலர் அங்கிருந்த கோவிந்தராஜரின் உற்சவ சிலையை மறைத்து திருப்பதிக்கு கொண்டு வந்து வைத்து வழிபட்டு வந்தனர்.இதனை அறிந்த ராமானுஜர் அவரது 112வது வயதில் கடந்த 1130ம் ஆண்டு திருப்பதிக்கு விஜயம் செய்தபோது, கோவிந்தராஜர் கோயிலில் அந்த சிலையை பிரதிஷ்டை செய்தார்.

மேலும் வைணவ வைகானச முறைப்படி பூஜை முறைகளை வழி வகுத்தார். இதனால், கோவிந்தராஜபுரம் என இப்பகுதிக்கு பெயர் வந்தது.அது சில காலத்துக்கு பின்னர் ராமானுஜபுரம் என்றும் மக்கள் அழைக்கலாயினர்.ஆனால், கீழ் திருப்பதியில் அலர்மேலு மங்காபுரத்தில் பத்மாவதி தாயார் வீற்றிருப்பதாலும், மலை மீது அவரின் பதி அதாவது கணவரான வெங்கடேச பெருமாள் குடி கொண்டிருப்பதாலும் 'திரு' மற்றும் 'பதி' என்ற பெயர் ராமானுஜரால் சூட்டப்பட்டது. மகாலட்சுமியும், அவரது கணவர் பெருமாளும் குடிக் கொண்டுள்ள தலம் என இதற்கு தமிழில் பெயர் சூட்டப்பட்டது என ஜீயர் தெரிவித்தார்.

இது குறித்து திருப்பதி எம்.எல்.ஏ கருணாகர்ரெட்டி கூறியதாவது: கோவிந்தராஜபுரம் என பெயர் வைத்தற்கான கல்வெட்டுகள் தற்போதைய திருப்பதி கோவிந்த ராஜர் கோயிலில் உள்ளன. கடந்த 1130ம் ஆண்டு இப்பெயர் சூட்டப் பட்டுள்ளது. ஆதலால் தற்போது திருப்பதிக்கு 892 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை தெரியாத ஒரு விஷயம் தற்போது வெளியுலகிற்கு தெரிய வந்துள்ளது. ஆதலால், இதனை திருப்பதிவாசிகள் கொண்டாடி மகிழ வேண்டும் என்றார் அவர்..

Tags

Next Story
வாட்ஸ்அப், ஸ்கைப் மோசடிகள்: டிஜிட்டல் அரெஸ்ட் மோசடி விழிப்புணர்வு