பங்குனி உத்திரம் நாளில் திருவண்ணாமலையில் மட்டும் 2 முறை திருக்கல்யாணம்
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர்
பங்குனி உத்திரம் தினத்தன்று திருவண்ணாமலை தலத்தில் மட்டும் 2 தடவை திருக்கல்யாணம் நடைபெறும். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முக்கிய ஆலயங்களில் தெய்வங்களின் திருமணம் நடைபெறும். அந்த திருமணத்தை நேரில் பார்த்து, தெய்வங்களை வழிபட்டால், நமது திருமண வாழ்க்கை அர்த்த முள்ளதாக, இனிமை நிறைந்ததாக மாறும் என்று பக்தர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை உள்ளது. திருமணம் ஆகாதவர்கள், தெய்வத் திருமணங்களை கண்டு வழிபட்டால், அவர்களுக்கு விரைவில் திருமணம் கை கூடும்.
அதிசயங்களும் ஆச்சரியங்களும் நிறைந்த திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் அண்ணா மலையாருக்கும் உண்ணாமுலை அம்மனுக்கும் மிக விமரிசையாக திருமணத்தை நடத்துவார்கள். இநத திருமண உற்சவம் மிகுந்த உள் அர்த்தத்துடனும், பாரம்பரிய கலாச்சார பின்னணியுடனும், நமபிக்கையுடனும் நடத்தப்படும். மனிதன் எவ்வாறு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும் என்பதை பிரதிபலிக்கும் வகையில் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் திருமணம் செய்து கொண்டு திருமணக் கோலத்தில் நமக்கு காட்சியளிப்பார்கள்.
பெரும்பாலான ஆலயங்களில் பங்குனி உத்திர திருமண விழா ஒரே நாளில் நடந்து முடிந்து விடும். ஆனால் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ஆலயத்தில் மொத்தம் 6 நாட்கள் இந்த திருமண விழாவை நடத்துவார்கள்.
ஒரு பையனுக்கும் பெண்ணுக்கும் எப்படி பார்த்து, பார்த்து திருமணம் நடத்துவார்களோ, அந்த மாதிரி திருவண்ணாமலை ஆலயத்தில் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். மாலை மாற்றுவது, நலங்கு வைப்பது, பூப்பந்து வீசி விளையாடுவது, மரு வீட்டுக்கு செல்வது, மீண்டும் தாய் வீட்டில் இருந்து வருவது என்று முழுமையான திருமண விழாவாக அந்த கல்யாண உற்சவம் நடைபெறும்.
பொதுவாக பங்குனி உத்திரம் தினத்தன்று ஒவ்வொரு ஆலயத்திலும் ஒரே ஒரு தடவைதான் திருக்கல்யாண உற்சவத்தை நடத்துவார்கள். ஆனால் திருவண்ணாமலை தலத்தில் மட்டும் பங்குனி உத்திரம் தினத்தன்று 2 தடவை திருக்கல்யாணம் நடைபெறும். அதாவது மூலவரான அண்ணாமலையாருக்கு முதலில் திருக்கல்யாணம் நடைபெறும். பிறகு உற்சவரான பெரிய நாயகருக்கு திருக்கல்யாணம் நடத்தப்படும். இது திருவண்ணாமலை ஆலயத் தில் மட்டுமே நிகழும் அதிசயமாகும்.
தமிழ்நாட்டில் எந்த ஒரு சிவாலயத்திலும் இப்படி திருக்கல்யாண உற்சவம் நடத்தப்படுவதில்லை. குறிப்பாக மூலவருக்கு எந்த ஆலயத்திலும் திருக்கல்யாணம் நடத்த மாட்டார்கள். உற்சவருக்கு மட்டுமே திருமணம் நடைபெறும். ஆனால் திருவண்ணாமலையில் மட்டும்தான் கருவறையில் உள்ள மூலவர் திருமண கோலம் காண்கிறார். சிவபெருமானின் உறைவிடமாக கயிலாய மலை கருதப்பட்டாலும் அவர் பூமியில் முதன், முதலில் விரும்பி அமர்ந்த தலம் திருவண்ணாமலையே. அந்த பாரம்பரிய, கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் திருவண்ணாமலையில் மூலவரும் திருமண கொண்டாட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளார்.
முன்னதாக உற்சவர் அம்மன் தனது தாய் வீடாகக் கருதும் குமரகோவிலுக்கு செல்வார். அங்கு உண்ணாமுலை அம்மன் மணப்பெண் போல அலங்கரிக்கப்படுவார். அம்மனுக்கு பட்டுச்சேலை கட்டி, அனைத்து வித அலங்காரங்களும் செய்யப்படும்.பிறகு சீர் வரிசைத் தட்டுக்களை பெண்கள் ஏந்தி செல்ல மணப்பெண்ணாக, உண்ணாமுலை அம்மன் குமர கோவிலில் இருந்து அண்ணாமலையார் ஆலயத்துக்கு அழைத்து வரப்படுவார். மேள-தாளம் முழங்க அவர் வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
பிறகு கொடி மரம் அருகில் வந்து அம்மன் காத்திருப்பார். இதையடுத்து மாப்பிள்ளை அலங்காரத்தில் ஸ்ரீஅண்ணாமலையாரின் உற்சவர் பெரியநாயகர் புறப்பட்டு வருவார். கொடி மரம் அருகில் பெரியநாயகரும், அம்மனும் மாலை மாற்றிக் கொள்வார்கள். பின்னர் அம்மையும் அப்பனும் 3 தடவை பூப்பந்து வீசி விளையாடுவார்கள். அந்த விளையாட்டு முடிந்ததும் பெரிய நாயகரும், அம்மனும் திருக்கல்யாணம் மண்டபத்துக்கு சென்று எழுந்தருள்வார்கள்.இரவு 11 மணிக்கு மேல் திருக்கல்யாண உற்சவம் தொடங்கும். ஹோமம் வளர்ப்பார்கள். சீர்வரிசைத் தட்டுகளை வைப்பார்கள். பிறகு திருமணம் நடத்துவார்கள்.
பிறகு சுவாமியும், அம்மனும் தங்க ரிஷப வாகனத்தில் திருவீதி உலா வருவார்கள். திருமணக் கோலத்தில் அவர்கள் நான்கு மாட வீதிகளையும் சுற்றி வருவார்கள். மணமக்களை பொதுமக்கள் ஆங்காங்கே வரவேற்று வழிபாடு செய்வார்கள். அதிகாலை வரை வீதி உலா நடைபெறும்.மறுநாள் காலைமருவுண்ணல் உற்சவம் நடைபெறும். மருவுண்ணல் என்பது மறு வீட்டுக்கு தம்பதியர் செல்வது போன்றது. திருவண்ணா மலை அருகே உள்ள கீழ்நாத்தூர் கிராமத்தில் மருவுண்ணல் உற்சவம் நடத்தப்படும். அங்கு மண்டகப்படி பூஜை நடைபெறும். இதையடுத்து சுவாமியும் அம்மனும் ஆலயம் திரும்புவார்கள். அதன் பிறகு 3 நாட்களுக்கு நலங்கு ஊஞ்சல் உற்சவம் நடைபெறும்.
திருக்கல்யாணம் மண்டபத்தில் தினமும் இரவு இந்த உற்சவத்தை நடத்துவார்கள். இந்த கல்யாண மண்டபத்தை ஆண்டு தோறும் சில விழாக்களுக்கு மட்டுமே திறப்பார்கள். எனவே நலங்கு உற்சவத்தில் கலந்து கொள்ள செல்பவர்கள், கல்யாண மண்டபத்தின் எழிலையும் கண்டு வரலாம். இறுதி நாளான 6-வது நாள் பாலிகை விடுதல், வீதி உலா உற்சவம் நடைபெறும். அன்று மதியம் 12 மணிக்கு தாமரை குளத்தில் பாலிகை விடுவார்கள். பாலிகை என்பது முளைப்பாரியாகும். சிவாச்சாரியார் குளத்தில் பாலிகையை விடுவார். பிறகு தாமரைக்குளம் ராஜா மண்டபத்தில் சுவாமிக்கும் அம்மனுக்கு அபிஷேகம் நடத்தப்படும். அது முடிந்ததும் அலங்காரம் செய்து பூஜைகள் செய்யப்படும்.
இதையடுத்து அன்று மாலை குமர கோவிலில் மண்டகப்படி செய்யப்படும். அம்மன், பராசக்தியாக எழுந்தருள்வார். பிறகு சுவாமியும், அம்மனும் காமாட்சி அம்மன் கோவில் தெரு வழியாக திருவீதி உலா வருவார்கள். அத்துடன் பங்குனி உத்திர திருக்கல்யாண உற்சவம் நிறைவு பெறும். இந்த திருக்கல்யாண உற்சவம் ஒருபுறம் நடக்கும் நிலையில் மற்றொருபுறம் நூற்றுக்கணக்கான பக்தர்கள் காவடி எடுத்து வருவார்கள். சிறப்பு வாய்ந்த திருக்கல்யாண உற்சவம் நாளை காலை நடைபெற உள்ளது . வாருங்கள் இடபாகம் அளித்த அந்த பெருமானின் ஆசியைப் பெறுங்கள்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu