திருப்பதிக்கு இணையாக உருவெடுத்த திருச்செந்தூர்..!
திருச்செந்தூர் காணிக்கை எண்ணும் பணி -கோப்பு படம்
திருச்செந்தூரில் பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கும் அதேவேளையில் மற்றொரு பக்கம் உண்டியல் காணிக்கை அட்சயம் போல குவிந்து கொண்டிருக்கிறது.
திருப்பதியும் சபரிமலையும் தமிழகத்திலிருந்து பிரிந்து போய் விட்டது என்ற வருத்தத்தை தீர்க்கும் வகையில் திருச்செந்தூர் திருப்பதி மற்றும் சபரிமலைக்கு இணையாக அசுர வளர்ச்சியடைந்து வருகிறது.
பத்து வருடங்களுக்கு முன்பு இருந்த திருச்செந்தூர் வேறு, இப்போது நாம் காணும் திருச்செந்தூர் வேறு. அப்போதெல்லாம் வேலை நாட்களில் முருகன் சன்னதி முன்பு காத்தாடும். இப்போதோ காலை நான்கு மணி முதல் இரவு 8.30 வரையிலும் எல்லா நாட்களிலும் கூட்டம் அள்ளுகிறது.
விசேஷ நாட்களில் கேட்கவே வேண்டாம் அதுவும் புதிதாக பவுர்ணமி நாட்களில் சஷ்டிக்கு இணையான மக்கள் வெள்ளம் கடற்கரையில் இரவு முழுவதும் குவிந்து கிடக்கிறது. இந்துக்களிடம் பக்தி உணர்வு பெருக்கெடுத்து ஓடுவது நல்ல விஷயம், நடக்கட்டும்...
ஏன் இந்த திடீர் பக்தி?
ஒண்ணுமில்ல, நான்கு யூடியூப் ஜோதிடர்கள் திருச்செந்தூர் முருகனுக்காகவே ஓவர்டைம் போட்டு வேலை பார்க்கிறாங்க. தொழில் சிறக்கணுமா, செந்தூர் போ, செல்வம் வேண்டுமா செந்திலாண்டவனை தேடி செல், கிள்ளி கொடுத்தால், அள்ளி கொடுப்பான் செந்தூர் குமரன், இப்படி சினிமா பன்ச் டயலாக் மாதிரி கவர்ச்சி வசனம் பேசி திருச்செந்தூர் செல்ல வழிகாட்டுகிறார்கள்.
எப்படியோ மக்கள் முருகனை தேடி குவிகிறார்கள். ஆனால் இந்த கூட்டம் உண்மையான பக்தியில் செல்லவில்லை. அது மட்டும் நிச்சயம். நிஜமான பக்தி பேரம் பேசாது, கோரிக்கை வைக்காது, கண்டிப்பாக உண்டியலில் காசு போடாது. ஆனால் இந்த யூடியூப் ஜோதிடர்கள் கிட்டத்தட்ட முருகனை டீலிங் பேசும் பிசினஸ் மேனாகவே சித்தரித்து வருகிறார்கள். இந்த பக்தியால் எந்த பயனுமில்லை.
எது எப்படியோ திருச்செந்தூர் இந்திய அளவிலான பிரசித்தி பெற்ற ஆன்மீக தலங்கள் வரிசையில் முக்கிய இடத்தை நோக்கி முன்னேறி கொண்டிருப்பது நல்ல விஷயம், தமிழகத்திற்கும் பெருமையே.
ஆனால் இப்படி அசுர வளர்ச்சி பெற்று வரும் திருச்செந்தூர் முருகன் கோயில் நிர்வாகம் அந்த அளவிற்கு வசதி வாய்ப்புகளை பெருக்கியிருக்கிறதா என்றால் கண்ணை மூடிக் கொண்டே இல்லை என்று சொல்லிவிடலாம். ஆம், கண்ணை மூடி கொண்டே ஊருக்குள் நுழைந்தாலும், ஊரின் சாக்கடை மற்றும் குப்பை நாற்றமே நாம் திருச்செந்தூருக்குள் நுழைந்து விட்டதை பறை சாற்றிவிடும். அவ்வளவு அசுத்தம்.
கோயில் நிர்வாகம் கேட்கவே வேண்டாம். அறநிலையத்துறையின் நிர்வாகம் ஏறத்தாழ ஸ்தம்பித்து நிற்கிறது என்றே சொல்லலாம். வசூலில் காட்டும் அக்கறையில் ஒரு சதவீதம் கூட அதன் கட்டமைப்பை சீரமைப்பதில் காட்டவில்லை.
அடுத்த ஆண்டு மகா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ள நிலையில் கோயில் புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. ஆனால் அதை செய்வது அறநிலையத்துறை என்று நீங்கள் நினைத்தால் ஏமாந்து போவீர்கள்.
200 கோடி ரூபாய் மதிப்பில் அதை செய்து வருபவர் HCL நிறுவனர் ஷிவ் நாடார். விழா ஏற்பாடுகளுக்கான செலவாக வெறும் சில கோடிகளை மட்டுமே அறநிலையத்துறை தன் பங்காக கோவில் பணத்தில் வழங்குகிறது. அந்த மனிதர் மட்டும் கோயில் பணிகளை மேற்கொள்ளவில்லை என்றால் கோயில் நிலைமையை யோசித்து பாருங்கள். திருச்செந்தூர் முருகன் கோயிலின் சராசரி மாத வருமானம் பணமாக மட்டுமே ஐந்து கோடி.
அதுபோக தங்கம் வெள்ளி தனி. இவ்வளவு வருமானத்தை கொட்டும் கோயிலுக்கு அரசு என்ன செய்திருக்கிறது இது வரையிலும். அழுக்கு படிந்த சுவர்கள், வவ்வால் குடியேறிய மண்டப மேற்கூரைகள், புறா எச்சத்தால் நாறி கிடக்கும் கோபுர மாடங்கள்... அறுபடை வீடுகளில் மோசமான நிர்வாகம் என்றால் அது திருச்சந்தூர் தான். பழனி கோயில் நிர்வாகம் ஓரளவுக்கு பரவாயில்லை என்றே சொல்ல வேண்டும். ஊருக்குள் எப்போதும் நடமாடி கொண்டிருக்கும் இலவச பேட்டரி வண்டிகள், பஸ் சர்வீஸ் என்று எவ்வளவோ பரவாயில்லை. கோயிலும் சரி, ஊரும் சரி சுத்தமாகவே இருக்கிறது.
திருச்செந்தூரில் தான் மிக மிக மட்டமான நிர்வாகம். குவியும் பக்தர்கள் கூட்டத்திற்கு இணையாக கோயில் நிர்வாகம் மாற்றியமைக்கப்பட்டே தீர வேண்டும் என்பது அவசர அவசியம். சரியான பஸ் வசதி கூட இல்லாமல், அதுவும் அரசு பேருந்துகள் சில கிலோமீட்டருக்கு அப்பால் இறக்கி விட்டு விட பிள்ளை குட்டிகள், வயதானவர்கள், நோயாளிகள் கையில் மூட்டை முடிச்சோடு நடந்தே செல்வது பரிதாபம்.
பழனியில் கார் இறங்கின இடம் முதல் பேட்டரி கார் சர்வீஸ், மூத்த குடிமக்களுக்கு ரோப் கார் பயணத்தில் முன்னுரிமை, தரிசனத்தில் முன்னுரிமை என்று மிக எளிதாக அம்மா அப்பாவை கூட்டி சென்று வந்தோம்.
திருச்செந்தூர் அவலம் சொல்லி மாளாது. சில கிலோமீட்டர்க்கு அப்பால் பார்க்கிங். அதுவும் கார் டோரை திறந்து காலை கீழே வைக்க முடியாது, சிறுநீர் மற்றும் மனித கழிவுகள் நாற்றம். ஏதோ பிரகாரத்தில் மட்டும் பெயருக்கு ஒன்றிரண்டு பேட்டரி வண்டிகள், அதுவும் எப்போதும் ரெஸ்ட்ல தான் இருக்கு. கோயில் அருகில் ஆட்டோ கூட போக முடியாத அளவிற்கு கட்டிடங்கள் விரிவாக்கம், கடைகள் ஆக்கிரமிப்பு.
இந்த அனுபவம் நிறைய பேருக்கு இருந்திருக்க வாய்ப்புண்டு. பக்தர்கள் எளிதாக போக கூட முடியாதவாறு கோயில் நிர்வாகம் இருக்கிறது என்றால் என்ன லட்சணதில் அறநிலையத்துறை இயங்குகிறது? பெருகி வரும் பக்தர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப நடவடிக்கை மேற்கொள்ளமல் இனியும் அரசு இப்படியே அலட்சியமாக இருப்பது சரியல்ல.
இதை சரி செய்ய இரண்டே வழிகள் தான் உள்ளது. திருச்செந்தூர் முருகன் கோயில் அறநிலையத்துறையின் சராசரி நிர்வாகத்திலிருந்து பிரித்து தனி அமைப்பாக உருவாக்கப்பட வேண்டும். ஓய்வுபெற்ற நீதிபதி, மற்றும் ஐஏஎஸ் அதிகாரிகள் கொண்ட குழு அமைத்து கோயில் நிர்வாகம் மறுநிர்ணயம் செய்யப்பட வேண்டும். திருப்பதி, சபரிமலை போன்று தரிசனம் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்யப்பட வேண்டும்.
திருச்செந்தூர் ஊர் ஒட்டு மொத்தமும் ஆன்மீக நகரமாக அறிவித்து ஊரின் மொத்த கட்டமைப்பும் மாற்றி அமைக்கப்படவேண்டும். தற்போதைய நிலையில் முருகன் கோயில் மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால் முருகன் கோயிலுக்கு முன்பாக வழிபட கொழுந்தீஸ்வரர் ஆலயம் உண்டு.
சிவன் கோயிலே பிர தானம். அதை சுற்றியே ரத வீதிகள் அன்றைய காலத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. அதிலிருந்துதான் ஆயிரம் கால் மண்டபம் தொடங்கும். திருவிழா மற்றும் எந்த ஒரு வழிபாட்டு நிகழ்வுகளும் சிவன் கோயிலுடன் தொடர்போடேயே நடைபெறும். சிவனை தொழுது, ஆயிரம் கால் மண்டபம் வழியாக நடந்து சென்று, வழியில் முருகனுக்கு அண்ணனான முதற்கடவுளாம் தூண்டிகை விநாயகரை வழிபட்டு பின்னரே கடல் நீராடி, நாழி கிணற்றில் குளித்து முருகனை தொழ வேண்டும் என்பதே பண்டைய முறை.
இன்று கொழுந்தீஸ்வரர் ஆலயம் மறக்கடிக்கப் பட்டே விட்டது. சமீபத்தில் நெல்லையப்பர் கோயில் தேரோட்டத்திற்கு மாற்று வடம் கொண்டு வரப்பட்டது இங்கிருந்து தான். இப்போது எல்லா முறைகளும் மாறி முருகன் கோயில் மட்டுமே வியாபார தலம் போல இயங்கி வருகிறது.
பழைய முறைகள் மீண்டும் மீட்டெடுக்கப்பட வேண்டும். ஊர் முழுமையாக ஆன்மீக தலமாக அறிவிக்கப்பட்டு, முருகன் கோயிலுடன் தொடர்புடைய கோயில்களான கொழுந்தீஸ்வரர் ஆலயமும், வெயிலுகந்தமன் ஆலயமும், தூண்டிகை விநாயகர் சன்னதியும் மறுமலர்ச்சி பெற வேண்டும். காசி மீண்டது போல திருச்செந்தூர் ஆலயங்களும் மீள வேண்டும். மீளும் என நம்புவோம்.
இதையெல்லாம் செய்ய ஒருவரால் முடியும். ஆம் திருச்செந்தூர் முருகன் மேல் தீரா பற்று கொண்டு நாள் முழுவதும் அன்னதானம் அளித்து வருபவரும் , தற்போது மகா கும்பாபிஷேகத்தை ஒட்டி கோயில் பராமரிப்பு பணிகளை செய்து வருபவருமான ஷிவ் நாடாரே அவர்... தனக்கான தேவையை நிறைவேற்றி கொள்ள எங்கிருந்தோ அவரை தொழிலில் வெற்றி பெற செய்து, தன்னை தேடி வர செய்த முருகன் அதற்கான நேரம் வரும்போது அதையும் செய்வான்... கந்தனிருக்க கவலை எதற்கு... வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா...
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu