புண்ணியம் சேர்க்கும் பூசம்: இன்று என்னென்ன சுபகாரியம் தொடங்கலாம்?
சூரிய பகவான், தட்சிணாயனம் எனப்படும் தனது தென் திசை நோக்கிய பயணத்தை முடித்துக் கொண்டு, உத்தராயணம் எனப்படும் வடக்கு திசையை நோக்கி தனது பயணத்தை தொடங்கும் மாதமே , தை ஆகும். தை மாதத்தில் வரும் பூசம், விசேஷமானது.
பூசம் என்றாலே, பழநி முருகன் கோவில் நினைவுக்கு வரும். புகழ் பெற்ற காவடிச் சிந்து பாடல்களை பாடியபடி, பாதயாத்திரையாக பழநிக்கு காவடி சுமந்து செல்வர். முருகனுக்கு பால் குடம் எடுத்தல், காவடி சுமந்து செல்லுதல், அலகு குத்தி கொள்ளுதல் போன்ற நேர்த்திக்கடன்களை பக்தர்கள் செலுத்துவதுண்டு. இந்தாண்டு கொரோனா கட்டுப்பாடுகளால், பூசவிழா கட்டுப்பாடுகளுடன் நடைபெறுகிறது.
ஆண்டி கோலத்தில் பழனி மலை மீது நின்றிருக்கும் முருகனுக்கு ஞான வேல் வழங்கிய இந்த தைப்பூச திருநாளில் தான். எனவே தான், மற்ற முருகனின் ஆறுபடை வீடுகளைக்களை காட்டிலும் பழனியில் மிக கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.
தை பூச நன்னாளில், அதிகாலை எழுந்து நீராடிக் நெற்றியில் விபூதி பூசிக்கொண்டு, ருத்ராட்சம் அணிந்து, தேவாரம், திருவாசகம் போன்றவற்றை படித்து சிவபெருமானையும், எம்பெருமான் முருகனையும் வழிபட வேண்டும். முருகனை வழிபட விரும்புபவர்கள், முடிந்தால் காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உட்கொள்ளாமல் விரதம் இருக்கலாம்; அல்லது பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் இருக்கலாம்.
முருகப்பெருமான் வள்ளியை மணந்ததால் தெய்வயானை அம்மை ஊடல் கொள்ள, அதை முருகப்பெருமான் தீர்த்த நன்னாள் இது என்பதால், திருவூடல் விழா இந்நாளில் முருகப்பெருமான் ஆலயங்களில் நடைபெறும்.
தமிழகத்தில் மட்டுமின்றி, சிங்கப்பூர், மலேசியா, இலங்கை, மொரிசியஸ், சுமத்திரா போன்ற தென் கிழக்கு ஆசியப் பகுதிகளிலும் தைப்பூசம் பிரசித்தி பெற்றது. மலேசியாவில் உள்ள பத்து மலை முருகன் கோயிலில் உள்ள பிரமாண்ட முருகப்பெருமான் சிலைக்கு வான் வழியே ஹெலிகாப்டர் மூலமாக செய்யப்படும் புஷ்ப அபிஷேகம் குறிப்பிடத்தக்கது. அதேபோல், ஆஸ்திரேலியா, பிஜி, தென்னாப்பிரிக்கா போன்ற பகுதிகளிலும் விமர்சையாக தைப்பூச விழா கொண்டாடப்படுகிறது.
புதிய தொழில் வியாபார ஒப்பந்தங்கள், திருமணம் தொடர்பான பேச்சுவார்த்தை, சுப காரியங்களை தைப்பூச நன்னாளில் சிவபெருமான், முருகனை வணங்கி தொடங்கினால் அவை நிச்சயமான வெற்றி தரும். தைப்பூசம் தினத்தன்று குழந்தைகளுக்கு காது குத்துவது, கல்வி கற்க தொடங்குதல், கிரகபிரவேசம் செய்வது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.
தைப்பூச நாளில் நினைவுகூறப்படுபவர், வாடிய பயிரை கண்டபோதெல்லாம் வாடிய வடலூர் ராமலிங்க சுவாமிகள். அவர், ஒளி ரூபமாக இறைவனோடு கலந்த வடலூர் மேட்டுக்குப்பத்தில், தைப்பூச நாளில் லட்சக்கணக்கானோர் கூடி வள்ளலார் விழாவைக் கொண்டாடுகிறார்கள். இங்கு நடைபெறும் அன்னதானம் சிறப்பு வாய்ந்தது.
தைப்பூச நன்னாளில் தான் உலகில் முதன் முதலில் நீரும், அதிலிருந்து உலகும் உயிரினங்களும் தோன்றியதாகப் புராணங்கள் கூறுகின்றன. தில்லை நடராசருக்கும் இந்தப் பூச நன்னாள் உகந்தது. இவர் பார்வதியுடன் நடத்திய ஆனந்த நடனத்தை தில்லை சிதம்பரத்தில், பதஞ்சலி முனிவர், வியாக்ர பாதர், தில்லை வாழ் அந்தணர்கள், தேவர்கள் முன்னிலையில் தைப்பூச நன்னாளில்தான் ஆனந்த நடனம் கண்டு களித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu