விதியை வெல்லும் இரகசியம்...!

விதியை வெல்லும் இரகசியம்...!
X

காட்டுக்குச் செல்லும் ராமன். உடன் சீதையும் லக்ஷ்மணனும் 

நம் கட்டுப்பாட்டுக்கு அப்பாற்பட்டு நடப்பது விதி.

நமக்கு எப்படிபட்ட விதியோ அதன்படி தான் நம் செயல்களும் அமையும். அதன்படிதான் நம் வாழ்வும் அமையும்.

உதாரணமாக இராமனுக்கு முடிச்சூட்டல் நாளை காலை என்னும் போது கைகேயின் வேண்டுதலால் இராமன் பதினான்கு ஆண்டுகள் காட்டுக்குச் செல்கிறார். பரதன் அயோத்தியை ஆளவும் சூழ்நிலை மாறுகிறது. இராமனை தன் மகனாக பாசமாக நினைத்த கைகேயி எப்படி இப்படி ஒரு வேண்டுதலை தசரதன் முன் வைக்க மனம் வந்தது? அங்கு தான் விதி வேலை செய்கிறது.

கூனி என்னும் பெண், அவள் மனத்தை தன் வாதத் திறமையினால் கொஞ்சம் கொஞ்சமாக நஞ்சாக மாற்றுகிறாள். அதற்கு ஏற்றாற்போல் முன்பு தசரதன் கைகேயிக்குக் கொடுத்த இரண்டு வரங்கள் அவள் உதவிக்கு வருகின்றன. கைகேயின் எண்ணத்தை முறியடிக்க தசரதன் எவ்வளவோ முயன்றும் முடியவில்லை. அவன் தன் மதியால் எத்தனையோ வாதங்களை அவள் முன் வைத்தான். எதுவும் அவள் மனத்தை மாற்றவில்லை.

இங்கே இராமன் காட்டுக்குப் போகவேண்டும் என்பது விதி. போகாவிட்டால் பின்னால் இலங்கையில் இராவண வதமே நடந்திருக்காது. இராமனின் அவதாரக் காரணமே நிறைவேறி இருக்காது. மேலும் தசரதனின் வாழ்க்கையை பின்னோக்கிப் பார்த்தால் அவன் கண் தெரியாத கணவன் மனைவி இருவரின் மகனை தெரியாமல் கொன்று அவர்களின் சாபத்துக்கு ஆளாகியிருப்பார்.

தசரதன் இறக்கும் தருவாயில் அவருடன் எந்தப் பிள்ளையும் உடன் இருக்கமாட்டார்கள் என்பதே அவரின் சாபம். அன்று அவர் செய்த செயல் பின்னாளில் இவ்வாறு விதியாக மாறியது. இவ்வாறு ஒவ்வொரு செயலுக்குப் பின்னாலும் ஒரு காரணம் இருக்கும், ஒவ்வொரு செயலுக்கும் வரும் நாட்களிலும் ஒரு வினை உண்டாகும், அதுவே விதி.

தீதும் நன்றும் பிறர்தர வாரா - நாம் இதற்கு முன்பு செய்த வினைப்பயன்களே இப்போது தொடர்கின்றன. விதியை வெல்ல நீங்கள் ஒன்றும் செய்ய வேண்டியதில்லை. எப்போதும் கடவுளிடம் எனக்கு இதை கொடு..!அதை கொடு..! என வேண்டினால் உங்களுக்கு சோதனைகளையும், கஷ்டங்களையும்தான் கடவுள் கொடுப்பார்.

எனவே இறைவன் திருவடியை இறுக பற்றிக்கொண்டு ‘ இறைவா நீ எதை வேண்டுமானாலும் செய்!, எப்பொழுது வேண்டுமானாலும் செய்!. ஆனாலும் என்னைக் கைவிட்டு விடாதே. ‘ என்ற ஒரு பரிபூரண பக்தியின் அடிப்படையில் உள்ள பூரண சரணாகதிக்கு நீங்கள் வந்துவிட்டாலே உங்களை இறைவன் எப்போதும் கைவிடமாட்டார். இறைவன் நினைத்தால் ஒரு நொடியில் நம் வாழ்வை தலை கீழாக மாற்ற முடியும். குப்பையில் இருப்பவரையும் கோடீஸ்வரராக மாற்ற முடியும்.

Tags

Next Story