மோட்சம் அளிக்கும் வாஞ்சிநாதர்..! எம வாதனை நீங்கும்..!

மோட்சம் அளிக்கும் வாஞ்சிநாதர்..! எம வாதனை நீங்கும்..!
X
Srivanjiyam Temple History in Tamil-எமனுக்கு சந்நிதி உள்ள ஒரே தலம் திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் ஸ்வாமி கோவில்

Srivanjiyam Temple History in Tamil

திருவாஞ்சியம் வாஞ்சிநாதசுவாமி கோவில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் சோழ நாடு காவிரி தென்கரைத் தலங்களில் அமைந்துள்ள 70வது சிவத்தலமாகும். சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவரது தேவாரப் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் ஸ்ரீவாஞ்சியம் என்ற ஊரில் அமைந்துள்ளது.

"காசியைவிட வீசம் அதிகம்" என்று காசியைக் காட்டிலும் சிறப்பான சிவத்தலமாக புகழ்ந்து கூறப்படுகிறது, இந்த திருவாஞ்சியம் வாஞ்சிநாதர் கோவில்.

இந்த கோவிலில் திருமால் சிவனை வழிபட்டு லட்சுமி தன்னிடம் வாஞ்சையுடன் இருக்குமாறு வரம் பெற்றார் என்பது தொன்மையான நம்பிக்கை. எமன் வழிபட்ட தலம் என்றும் போற்றப்படுகிறது. இத்தலத்தில் இறப்பவருக்கு எமன் எந்த துன்பம் செய்யாமல் உயிரை எடுப்பான் என்பது பழமையாம நம்பிக்கையாகும். திருமகள், எமன், பிரமன், இந்திரன், பராசரர், அத்திரி முதலியோர் வழிபட்ட தலம் என்று போற்றப்பட்டு வருகிறது.

வாஞ்சியம் திருக்கோவிலில், சர்வதாரி வருடம் பங்குனி மாதம் 26 ம் நாள் (ஆங்கில வருடம் 8.4.2009) திருக்குடமுழக்கு நன்னீராட்டுப் பெருவிழா நடைபெற்றது

தலவரலாறு

எமன் தான் உயிரை எடுக்கும் பணியைச் செய்து வருவதால் அவன் மற்றவர்களால் வெறுக்கப்படுவதையும், தமது பணி காரணமாக தமக்கு ஏற்பட்டுள்ள அவமான தோஷத்தால் மன அமைதி இழந்து தவிப்பதையும் திருவாரூர் தியாகராஜரிடம் சென்று எமன் முறையிட்டார். தியாகராஜர், திருவாஞ்சியம் சென்று வழிபடச் சொன்னார். அதன்படி எமனும் திருவாஞ்சியம் சென்று அங்கு தவம் இருந்தார். தவத்திற்கிறங்கி வந்த சிவபெருமானிடம் தமது குறைகளைக் கூற, அவரும் அருளி, இத்தலத்து க்ஷேத்திர பாலகனாக எமனை நியமித்தார். மேலும் ஏதேனும் புண்ணியம் செய்தோர் மட்டுமே திருவாஞ்சியத்திற்கு வரும்படி பார்த்துக்கொள்ளச் சொன்னார்.

இங்கு வழிபட்டுச் செல்லும் பக்தர்களுக்கு மறுபிறப்பு இல்லாமையையும், இறக்கும் தறுவாயான இறுதிக்காலத்தில் அமைதியான நிலையை வழங்குமாறு உத்தரவிட்டார். இந்த கோவிலில் வழிபடுவோருக்கு இறுதிக்காலத்தில் எமனின் வாதனை இருக்காது என்பது நம்பிக்கை. மேலும் இத்தலத்தில் எமனை வழிபட்ட பின்னரே,சிவபெருமானை தரிசனம் செய்தல் மரபாக உள்ளது. இதனால் மரண பயம் போகும் என்பது நம்பிக்கை.

கோவிலின் அமைப்பு

ராஜகோபுரத்தை அடுத்து கோவிலுக்குள் செல்லும்போது வலது புறத்தில் எமதர்மராஜா சந்நிதி உள்ளது. சந்நிதியின் முன்புறம் பலி பீடமும், நந்தியும் உள்ளன. அடுத்து இருக்கும் வாயிலைக் கடந்து உள்ளே செல்லும்போது வலது புறம் அபயங்கர விநாயகரும், இடது புறம் பாலமுருகனும் உள்ளனர். இடது புறத்தில் அம்மன் சந்நிதி உள்ளது. கொடி பலி பீடம், நந்தியை கடந்து உள்ளே செல்லும்போது அடுத்த வாயிலின் வலது புறம் விநாயகரும், இடது புறம் சுப்பிரமணியரும் உள்ளனர். மூலவர் சந்நிதிக்கு முன்பாக நந்தியும், பலிபீடமும் உள்ளன. அந்த மண்டபத்தைக் கடந்து உள்ளே செல்லும்போது மூலவரின் கருவறைக்கு முன்பாக இரு புறமும் துவாரபாலகர்கள் உள்ளனர். இடது புறம் நடராஜர் சந்நிதி உள்ளது.

திருச்சுற்றில் தட்சிணாமூர்த்தி, சோமாஸ்கந்தர், சண்டிகேஸ்வரர், மகிஷாசுரமர்த்தி ஆகியோருக்கான சந்நிதிகள் உள்ளன. திருச்சுற்றின் பின்புறம் சந்திரமௌலீஸ்வரர், கன்னி விநாயகர், சட்ட நாதர், மீனாட்சி, சுந்தரேஸ்வரர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், மகாலட்சுமி, துர்க்கை ஆகியோர் உள்ளனர். அதே வரிசையில் தேயலிங்கம், ஆகாய லிங்கம், திருவெண்காடு லிங்கம், திருவிடைமருதூர் லிங்கம், மயிலாடுதுறை லிங்கம், சாயாவனம் லிங்கம், ஷேத்ரலிங்கம் ஆகியவை உள்ளன. கருவறையின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி,லிங்கோத்பவர், பிரம்மா, துர்க்கை ஆகியோர் உள்ளனர்.திருச்சுற்றில் குளம் உள்ளது.

கோவிலின் சிறப்பு

இங்கு எமனுக்குத் தனிக்கோவில் உள்ளது சிறப்பாகும்.இத்தலத்தில் எம வாகனத்தில் சிவபெருமான் மாசி மாதம் பரணி நட்சத்திரத்தில் ஊர்வலம் செல்கிறார். எமன், பைரவர் இருவருக்கும் அதிகாரமில்லாத தலம் என்றும் காசியை விடவும் நூறு மடங்கு உயர்ந்த தலமாகவும் முனிவர்களால் கூறப்பட்டுள்ளது.காசிக்கு நிகராக ஆறு திருத்தலங்கள் சொல்லப்படுகின்றன. அவற்றுள் இத்தலமும் ஒன்று.

கிரகண சமயங்களில் மற்ற அனைத்து கோவில்களும் நடையடைக்கப்படுவது வழக்கம். ஆனால் வாஞ்சியம் திருக்கோவிலில் விதிவிலக்காக கிரகண சமயத்தில் திறந்து இறைவனாருக்கு சிறப்பு அபிஷேகமும் வழிபாடும் நடத்தப்படுகின்றது.

கோவிலின் தனித்தன்மை

இக் கோவிலில் இந்து கடவுளான எமனுக்கு தனிச் சந்நிதி உள்ளது. எமதர்மன் இறப்பு மற்றும் மனிதர்களின் பாவ புண்ணியங்களை பரிசீலிக்கும் இந்துக் கடவுளாவார். மற்ற அனைத்துக் கோவில்களிலும் பிள்ளையார் சந்நிதி முதலில் காணப்படும். ஆனால் இங்கு முதலில் எமனின் சந்நிதி காணப்படுகிறது. இக் கோவிலின் வழக்கப்படி இங்கு தரிசனம் செய்ய வருபவர்கள் முதலில் எமனை தரிசனம் செய்துவிட்டு பின்னரே மற்ற சந்நிதிகளுக்குச் செல்கின்றனர். மேலும், இங்கு இரண்டு நந்தி சிலைகள் உள்ளன. ஒன்று கோவிலின் கிழக்கு திசையிலும் மற்றொன்று மேற்கிலும் அமைந்துள்ளது.

இந்த திருக்கோவில் காசிக்கு சமமாக கருதப்படும் ஆறு சிவன் கோவில்களில் ஒன்றாகும். காசி விசுவநாதர் கோவிலுக்கு சமமான காவிரி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கோவில்கள் குறிப்பிடப்பட்டுள்ளன :

திருவையாறு

திருவிடைமருதூர்

மயிலாடுதுறை மயூரநாதர் சுவாமி கோவில்

சாயாவனேசுவரர் கோவில், சாயாவனம். (பூம்புகார் அருகில் உள்ளது)

திருவெண்காடு

திருவாஞ்சியம்

கோவில்களின் மகிமை

காவிரி ஆற்றங்கரையில் உள்ள மேற்கண்ட சிவன் கோவில்களுக்கு வருகை தருவது சிவ பக்தர்களின் பாவங்கள் மட்டுமல்லாது, அவரது மூதாதையர்களின் பாவங்களையும் தீர்க்கும் என்று கூறப்படுகிறது. திருவாஞ்சியத்தில் எம தீர்த்தம் மற்றும் குப்த கங்கை ஆகியவை கோவில் தீர்த்தங்களாக உள்ளன. இந்த இடத்தில் பித்ரு தர்ப்பணம் செய்தால், அது புறப்பட்ட ஆத்மாக்களுக்கு இரட்சிப்பைக் கொடுக்கும் என்று தல வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. ஸ்ரீவாஞ்சியத்தின் மண்ணில் புறப்படும் ஆத்மாக்களுக்கு வாஞ்சிநாத பகவான் மோட்சத்தை அளிப்பதால் இந்த இடத்தில் மரணம் புனிதமாகவும், இந்த இடம் காசிக்கு சமமாகவும் கருதப்படுகிறது.

இந்த கோவில் சூரிய மற்றும் சந்திர கிரகணத்தின் போது கூட திறந்திருக்கும் (இது கிரகணங்களின் போது மூடப்படும் அனைத்து கோவில்களுக்கும் முரணானதாகும்). பொதுவாக, கிராமத்தில் மரணம் ஏற்படும் போது அங்குள்ள கோவிலை மூடுவது வழக்கம். ஆனால், இந்த கிராமத்தில் யார் இறந்தாலும் வாஞ்சிநாதர் கோவில் மூடப்படாமல் திறந்திருக்கும். காசியில் உள்ள கங்கையை விட இங்குள்ள குப்தா கங்கை தீர்த்தம் மிகவும் புனிதமானதாக கருதப்படுகிறது.

எங்கு உள்ளது?

மயிலாடுதுறையிலிருந்து 25 கி.மீ தொலைவில் உள்ள நன்னிலத்திலிருந்து எட்டு கி.மீ தொலைவில் உள்ளது.திருவாரூர்-குடவாசல் சாலையிலும் வரலாம்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
குடும்ப அட்டைதாரர்களுக்கு டோக்கன் வழங்கும் பணி ஈரோட்டில் தொடக்கம்