மார்கழி மாதத்தின் மகத்துவங்கள்

மார்கழி மாதத்தின் மகத்துவங்கள்
X

திருப்பாவை அருளிய ஆண்டாள் மற்றும் திருவெம்பாவை அருளிய மாணிக்கவாசகர்

மார்கழி மாதத்தில் அதிகாலை எழுவதன் காரணம் மற்றும் நீராடலின் மகத்துவம்

மாதங்களில் நான் மார்கழி மாதமாக இருக்கின்றேன் என்று கண்ணபிரான் பகவத்கீதையில் அருளினார்.

அவரது திருவாய்மொழி மார்கழியின் சிறப்புகளை உயர்த்திப் பேசும் புண்ணிய மாதமாக அமைந்து விட்டது. மார்கழி மாதத்தை சிலர் பீடை மாதம் என்பார்கள். அது தவறு ''பீடு'' என்ற சொல்லுக்கு 'பெருமை' என்று பொருள். பீடுடைய மாதம், அதாவது பன்னிரு மாதங்களில் மார்கழி மிக்க பெருமையுடைய மாதம்.

தட்சிணாயணத்தின் ஆறாவது மாதம், அதாவது மார்கழி மாதம் தேவர்களின் இரவு காலம் முடிந்து வைகறை பொழுதாக அமைகிறது. இதை 'உஷா காலம்' என்றும், 'வைகறை பொழுது' என்றும் கூறுவதுண்டு.

விடியற்காலை 4 மணி முதல் 6 மணி வரையுள்ள காலம் பிரம்மமுகூர்த்தம் எனப்படுகிறது. பனி விழும் அவ்வேளையிலான அதிகாலை வழிபாடு, உடல் சுறுசுறுப்புக்கும், உள்ளத்தெளிவுக்கும் எப்போதும் சிறந்தது.

இந்த மாதம் முழுவதும் பகவானை தியானிப்பதும், அவனை நினைப்பதும் சகல சுகத்தையும் அளிக்கிறது.

சைவ, வைணவ ஒற்றுமையை வலியுறுத்தும் இம்மாதத்தில் ஆண்களும், பெண்களும் திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடி பரவசம் அடைவர்.

வீட்டு வாசலில் சாணத்தை பிடித்து வைப்பது ஏன்?

மார்கழி மாதம் பிறந்தவுடன் பெண்கள் வீட்டு வாசலை சுத்தமாக மெழுகி கோலமிடுவார்கள். பின்னர் அதில் சாணத்தை பிள்ளையாராக பிடித்து வைத்து, அதன் மேல் பூசணிப்பூவை அழகு படவைப்பார்கள்.

30 நாட்களும் இவ்வாறு செய்தபின் அதைச்சேகரித்து வீட்டு முற்றத்தில் பொங்கலிட்டு வழிபடுவர். இதனைச் சிறு வீட்டு பொங்கல் என அழைப்பார்கள். மார்கழி வழிபாடு நிறைவடைந்ததும், சேகரித்த சாண உருண்டைகளை நீர்நிலைகளில் சேர்ப்பர்.

மார்கழி நீராடலின் மகத்துவம்

பனி விழும் மாதம் மார்கழி. இம்மாதத்தில் ஆண்கள் அதிகாலையில் எழுந்து ஆறு, குளத்திற்கு சென்று நீராடிவிட்டு பகவானின் நாமத்தை கூறிக்கொண்டும், திருவெம்பாவை, திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல்களை பாடிக்கொண்டு வீதிகளில் செல்வார்கள். கோவிலுக்கு சென்றும் வழிபடுவர். அந்த நேரத்தில் பெண்கள் வெளியில் செல்ல முடியாததால், வீட்டில் குளித்துவிட்டு வீட்டின் வாசலை தெளித்து பெருக்கி, பெரியகோலங்கள் போடுவார்கள். மார்கழி மாதத்தில் அதிகாலை நேரத்தில் ஓசோன் வாயு கீழே வெளிப்படுகிறது. அது வியாதிகளை கட்டுப்படுத்தும் தன்மைகொண்டது. அந்த நேரத்தில் ஓசோன் நம் மீது பட்டு உடல் ஆரோக்கியம் பெறுகிறது என்பது ஆராய்ச்சியாளர்களின் கருத்து. இதனால் தான் மார்கழி மாதத்தில் பொழுது விடியும் நேரத்தில் நீராடி நோன்பு நோற்கும் முறை உருவானது.

'மார்கழி திங்கள், மதிநிறைந்த நன்னாள், நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்' என்று திருப்பாவை பாடிய ஆண்டாள், விடியற்காலையில் அனைவரையும் அழைத்து பாவை நோன்பு கடைப்பிடிக்க வலியுறுத்துவது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!