தேவலோகத்தின் புனித மலர் பவளமல்லி பற்றி தெரியுமா?

தேவலோகத்தின் புனித மலர்  பவளமல்லி பற்றி தெரியுமா?
X

பவளமல்லி 

தேவலோகத்தில் உள்ள ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லிமரமும் ஒன்று என்று புராணங்கள் தெரிவிக்கின்றன.

பவளமல்லி தெய்வீக மலராகக் கருதப்படுகிறது. பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும். இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம். இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது. புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.

அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று. இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும். பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும். இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்து தான் பறிக்கப்படும்.

பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன் படுத்தமாட்டார்கள். ஆனால், இதற்கு பவள மல்லி விதிவிலக்காக உள்ளது. இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன்படுத்துவார்கள்.

பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது. இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம். மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பவளமல்லி சிறுமரமாகக் காணப்படும். இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம். 1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. சுமார் 15 அடி உயரம்வரை வளரும். தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்றுநீண்டு முட்டைவடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.

பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும். கனிகள் வட்டவடிவில் உறைஅமைப்பில் இருக்கும். செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும். அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும். அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது.பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள். ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை. இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள். இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்து தான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.

சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது. இதனால் தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள். தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்று விளக்குவார்கள்.

பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது. பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள்.தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லிமரத்தை கொண்டு வந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம், ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்றுகூறப்படுகிறது.

இத்தகைய பவளமல்லியில் இருந்து நம் முன்னோர்கள் நம் உடல் ஆரோக்கியத்துக்கு தேவையான மருந்துகளையும் கண்டுபிடித்து நமக்கு உணர்த்தி இருக்கிறார்கள். பவளமல்லிமரத்தின் இலை, விதை, பட்டை ஆகியவை மருத்துவ குணம் வாய்ந்தவை. பவளமல்லி சிறுநீரகத்தை காப்பாற்றக்கூடிய மருத்துவத்தன்மை உடையதாக இருக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கும் சிறந்த மருந்து.

கால்மூட்டு வலி, ரத்தப்போக்கு, இடுப்பு வலி ஆகியவற்றிற்கு சிறந்த நிவாரணியாக உள்ளது. பவளமல்லி இலை பித்தத்தால் ஏற்படும் காய்ச்சலை குணப்படுத்தக் கூடியது. பவளமல்லி மரத்தின் வேரை மென்றுதின்றால் பல்லீறுகளில் உருவாகும் வலியை குணப்படுத்தும். விதைகளை பவுடராக்கி சாப்பிட்டு வந்தால் சரும நோய்கள் தீரும். இலைச்சாறு குழந்தைகளுக்கு மலமிளக்கியாகவும் உள்ளது. பவள மல்லிவிதையை பொடி செய்து அதை எண்ணெயில் குழைத்து தலையில் தேய்த்து வந்தால் வழுக்கையும் மறைந்து முடி வளரும்!

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில் உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது.

திருக்களரில் இறைவன் பாரிஜாதவனேஸ்வரராக பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். இவருக்கு களர்முலை நாதேஸ்வரர் என்றும் பெயருண்டு. இறைவியை, இளம்கொம்பன்னாள், அமுதவல்லி என்று பக்தர்கள் போற்றி வணங்குகிறார்கள்.இத்தலம் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே 21 கி.மீ. தொலைவில் உள்ள திருத்துறைப்பூண்டிக்குச் செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ளது.

தில்லையில் பதஞ்சலி முனிவருக்கும், வியாக்ரபாதருக்கும் சிவபெருமான் ஆனந்த தாண்டவ தரிசனம் தந்தருளியதை அறிந்த துர்வாச முனிவர் தானும் அந்த பாக்கியத்தைப் பெற நினைத்தார். இத்தலத்தின் மகிமையை உணர்ந்து தேவலோகத்தின் சிறந்த மலரான பாரிஜாத செடியை இங்கே கொண்டு வந்து வளர்த்து வந்தார். அந்தச் செடியால், நாளடைவில் வளர்ந்து சில நாட்களில் அந்தப் பகுதி முழுவதுமே பாரிஜாத வனமாக மாறியது. அதன்பிறகு ஒரு சிவலிங்கத்தை பாரிஜாத மரத்தடியில் பிரதிஷ்டை செய்து பக்கத்தில் அம்மனையும் ஸ்தாபித்து தேவதச்சன் மூலமாக கோயிலை எழுப்பி வழிபட்டு தவம் செய்து வந்ததாக கோயில் தலவரலாறு தெரிவிக்கிறது.

துர்வாசருக்கு இறைவன் நடராஜர் பிரம்ம தாண்டவ தரிசனம் தந்து அருளினார். திருக்களர் திருத்தலத்தில் வழிபாடு செய்யும் பக்தர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் மோட்சம் கிடைக்கும். கேது தோஷத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் இங்கு வழிபட்டால் தோஷம் நீங்கும் என்பதும் ஐதீகம்.இத்தலத்தில் பாரிஜாதகராக அருள் பாலிக்கும் இறைவனைப்பற்றி திருஞானசம்பந்தர் பாடியிருப்பதாவது:

“பாக்கியம் பல செய்த பத்தர்கள் பாட்டொடும் பல பணிகள் பேணிய தீக்கியல் குணத்தார் சிறந்தாருந் திருக்களருள் வாக்கின் நான்மறை யோதினாயமண் தேரர் சொல்லிய சொற்க ளானபொய் ஆக்கி நின்றவனே அடைந்தார்க் கருளாயே.”

திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணியில் உள்ள புத்திரகாமேட்டீஸ்வரர் திருத்தலத்தில் பவளமல்லி தலவிருட்சமாக வணங்கப்படுகிறது. இத்தலத்தில் குழந்தை இல்லாதோரின் தோஷம் நீக்கும் புத்திரகாமேட்டீஸ்வரராக ஈசன் அருள்பாலித்து வருகிறார். வீட்டிலும் வளரக் கூடிய இந்த பவளமல்லி மரத்தில் பட்டு வீசும் காற்று ஆரோக்யமானது. நம் உடல்நலத்தை பாதுகாக்கக் கூடியது.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!