மனம், புத்தி, சித்தத்தை விட மேலானது ஆன்மா..!
ஆன்மா என்பது என்ன?-கோப்பு படம்
கேள்வி – மனம் வேற புத்தி வேறன்னு சொல்றீங்க, ஓரிடத்தில் மனமும் புத்தியும் ஒண்ணுன்னு சொல்றீங்க, ஒரே குழப்பமா இருக்கு.....!!?? ஒரே மனம் ஏன் இப்படித் தனித்தனியாக இயங்க வேண்டும் ?
பதில்: வீட்டை வீடு என்றுதான் சொல்கிறோம். ஆனால், அதில் அஸ்த்திவாரம், கட்டிடம், மேல் மாடி, மொட்டை மாடி என்று பல நிலைகள் இருக்கின்றனவல்லவா? தேவைப்படும் பொழுது அந்தந்த பெயர்களை, உபயோகப்படுத்துகிறோம். மற்ற வேளைகளில் வீடு என்று தான் சொல்கிறோம்.
அது போல தேகத்தை உடல் என்கிறோம், அதில் தோல், வாய், கண், மூக்கு, செவி, வயிறு, கால், கை என்று பல உறுப்புகளும், இன்னும் நம் உடலில் நாம் கண்டறியாத பல உள்ளுறுப்புகளும் கூட இருக்கின்றன. தேவைப்படும் பொழுதுதான் அவற்றின் பெயர்களைச் சொல்கிறோம்.
மற்ற வேளைகளில் பொதுவாக உடல் என்றோ, உடல் நலமில்லை என்றோதான் சொல்கிறோம். அது போல மனமானது நான்கு நிலைகளில் இயங்குகிறது. அவற்றை மனதின் அந்தகரணம் என்று சொல்கிறோம். பொதுவாகப் பேசும் பொழுது மனம் என்று சொல்லிக் கொள்கிறோம்.
ஒரு பைத்தியக் காரனை மனநிலை தடுமாறியவன், புத்தி பேதலித்தவன், சித்த சுவாதீனம் இல்லாதவன் என்றெல்லாம் கூறுவதும் இப்படித்தான். மனம் இயங்க ஸ்தூல உடலில் தேவைப்படும் கருவி மூளை என்பதால் மூளை கலங்கியவன் என்றும் கூட சொல்வதுண்டு.
மனம் இல்லை என்றால் புலன்களால் இயங்க முடியாது. நம் மனமானது தன்னிச்சையாக இயங்கக் கூடியது. ஆனால், புத்தி அப்படியல்ல. ஒரு வரையரைக்குள் இயங்குவது. மனம் எதையும் ஆராய்ந்து பார்ப்பதில்லை. புத்தி அனைத்தையும் ஆராய்ந்து பார்க்கிறது. மனம் க்ஷண நேரத்தில் தோன்றி மறைந்து விடுகின்றது. புத்தி நிலையாக இருக்கிறது. எனவே மனம் வேறு, புத்தி வேறு என்று சொல்கிறார்கள். ஆனால் மனதின் வேறொரு நிலையே புத்தியாகும்.
கீதை புலன்களை விட மனம் மேலானது. மனதை விட புத்தி மேலானது. புத்தியை விட சித்தம் மேலானது, சித்தத்தை விட ஆன்மா மேலானது என்கிறது. அதாவது சூக்கும நிலையை அடையும் அளவு ஒரு நிலையிலிருந்து ஒரு நிலை வேறுபடுகிறது, வலிமையடைகிறது.
புலன்களை கொண்டு இயங்கும் நிலையில் அது புறமனம் எனப்படுகிறது. புறமனமாகிய தன் செயல் சரியா, தவறா என்று ஆராயும் நிலையில் அது புத்தி எனப்படுகிறது. எனவே மனம் வேறு புத்தி வேறு அல்ல. ஒவ்வொரு நிலையாகப் பரிணமித்து, அவை தனித்தனியே இயங்குகின்றன. ஆனால் அந்தகரணங்கள் அனைத்திற்கும் அடிப்படை ஒன்றுதான். புத்தி மனதின் இரண்டாவது சூக்கும நிலை அவ்வளவுதான்.
புத்தியின் தொடர்பின்றி புறமனம் இயங்கும் பொழுதுதான் தவறுகள் நேர்கின்றன. மனதை ஒரு வாகனமாகக் கொள்வோமேயானால் புத்திதான் அதில் பிரேக். நவீன மனோதத்துவம் மனதை இரண்டு நிலைகளாகவே காண்கிறது.
ஒன்று புறமனம் மற்றது புத்தி. புறப் பொருள்களை மனம் நுகரும். புத்தி அதை ஆராய்ந்து புலன்களுக்கு செயல்பட உத்தரவளிக்கும். பல நேரங்களில் புத்தியின் உத்தரவை எதிர்பார்க்காமலோ அல்லது புத்தியின் உத்தரவு கிட்டாமல் போய்விடும் பொழுதோ மனமே நேரடியாக உத்தரவளித்து விடுவதும் உண்டு. இவ்வாறு புத்தியின் தொடர்பின்றி நடக்கும் செயல்களே துன்பத்திற்கு காரணமாக அமைகின்றன.
இதைத்தான் ‘’புத்தியில்லாம செஞ்சிட்டான்’’ என்பார்கள். இப்படி புத்தியின் தொடர்பின்றி காரியங்களை புறமனமே செய்து விடுவதால், அதுவே பழக்கமாகி, இயல்பாகி விடும் பொழுது, புத்தி வேலை எதுவும் இன்றி மந்த நிலைக்கு ஆளாகி விடுகின்றது.
நம் முன்னோர்கள் சொல்வதென்னவென்றால்,புத்தியின் இந்த மந்த நிலைக்குக் காரணமாக அமைவது புறமனம் மட்டுமல்ல, நம் சித்தத்தில் பதிவாகியுள்ள பழைய வினை வித்துக்கள் மற்றும் அஹங்காரமுமாகும் என்கிறார்கள்.
இதில் புறச் சூழலை தீர்மானிப்பது புறமனமேயாதலால் பழைய வினைகள் கிளர்ந்தெழக் காரணமாக இருப்பது புறமனமேயாகின்றது. ஆனால், இந்த நான் என்கிற அஹங்காரம் மிகக் கொடியது. இது புறமனதிற்கும், புத்திக்குமிடையே வந்து விட்டால் மனிதன் நிலை அதோ கதிதான்.
புத்தியை சார்ந்து புறமனம் செயல்படுமளவு அதாவது புத்தி நிலையில் மனமானது இயங்கும் பொழுது ஒரு மனிதன் வாழ்வு மேம்படும். புத்தியும், மனமும் பிரிந்து தொடர்பற்று கிடக்குமேயானால் அம்மனிதனின் மந்த புத்தி உடையவனாக, புறமனச் சுழலில் அகப்பட்டுத் தவித்துக் கொண்டிருப்பான்.
இப்படிப் பிரிகின்ற சூழலை நான் என்கிற அஹங்காரம் ஏற்படுத்தி விடும். மனதின் புத்தி நிலை கண்ணாடி போன்றது. அது ஆன்மாவின் ஒளியை பிரதிபலிப்பது. ஆனால், பறமனதினால் விளையும் அனுபவங்களும், அஹங்காரமும் ஒரு புகை போல் பரவி புத்திக்கு ஆன்ம ஒளி கிடைக்க விடாமல் செய்கின்றன.
அருள் ஒளி கிடைக்காத புத்தி தன்னுடைய தெய்வத் தன்மையை இழந்து, மந்த நிலைக்கு ஆளாகி ராகத் துவேசங்களால் புறமனதில் இருந்து பிரிக்கப்பட்டு நிற்கும் பொழுது செய்யப்படும் செயல்களனைத்தும் கெடுதல்கள் ஆகி விடுகின்றது.
கோபத்தில் கொலை செய்து விட்டு ஜெயிலுக்குப் போகிறவன் புத்தியோடு தொடர்பற்ற புறமனதின் வயப்பட்டவனாவான். அதாவது ராகத்துவேசங்களால் மந்த மடைந்த புத்தியானது பேசாமல் இருந்திருக்கும் அல்லது கொலை செய்த பிறகு தவறு செய்து விட்டோமே என்று வருந்தியிருக்கும்.
புத்தியோடு புறமனதிற்கு தொடர்பிருந்திருந்தால் கொலை நிகழ்ந்திருக்காது. தடுக்கப்பட்டிருக்கும். இப்படி மனமானது புறமனமென்றும், புத்தியென்றும் இரண்டு நிலைகளில் இயங்கக் காரணமாக இருப்பது அஹங்காரமேயாகும் என்பதே முடிவு.
இதில் சித்தம் என்பது மனதின் மற்றொரு நிலைப்பாடு. அதாவது வினைகளைத் தன்னகத்தே தேக்கி வைத்துக் கொள்வது. எனவே இதுகாறும் பேசிக் கொண்டதிலிருந்து தெரிந்து கொள்வதென்னவென்றால் நான் என்கிற அஹங்காரமே மனம் தோன்றக் காரணமாக இருக்கின்ற மூலமலமாக இருக்கின்றது.
மேலும் புறமனம் என்றும், புத்தி என்றும், சித்தமென்றும் மனம் பிரிந்து கிடப்பதற்குக் காரணமும் நான் என்கிற அஹங்காரமேயாகும். அஹங்காரம் இருக்கும் வரை மனமானது இப்படி தனித்தனியாக பிரிந்து நின்று இயங்கி வினைகளைப் பெருக்கிக் கொண்டே இருக்கும்.
நான் அழிந்து போனால் மனமழிந்து போகும் என்பார்கள். ஆனால் மனம் அழிவதில்லை. அது ஒரே நிலையில் நின்று ஆன்மாவில் லயமாகி விடும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu