சாஸ்தா முதல் தரிசனம் தந்த சொரிமுத்து ஐயனார் கோயில்..!
சொரிமுத்து ஐயனார் கோயிலில் பொங்கல் வைக்கும் பக்தர்கள்.
முருகப்பெருமானுக்கு ஆறுபடை வீடுகள் இருப்பதை போல ஐயப்பனுக்கும் சொரிமுத்து ஐயனார் கோயில், அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழை, பந்தளம், சபரிமலை என அறுபடைவீடு இருப்பதாகக் கூறுவர். சபரிமலையிலேயே ஐயப்பன் முதலில் அமர்ந்தார் என்பர். ஆனால் அதற்கு முன்னதாகவே இந்தக் கோயிலில் சாஸ்தா அமர்ந்தாராம்.
இங்கு மூலவராக சொரிமுத்து ஐயனார், மகாலிங்கம் உள்ளனர். இக்கோவிலின் தல விருட்சம் இலுப்பை மரம். தீர்த்தம் பாண தீர்த்தம். இக்கோயில் திருநெல்வேலி மாவட்டம் காரையார் என்ற இடத்தில் உள்ளது. இக்கோயிலில் ஆடி மாதம், தைமாதம் அமாவாசைகள், கடைசி வெள்ளிக்கிழமை, மற்றும் பங்குனி உத்திரம் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
பொதிகை மலையில் விழும் மிகப் பெரிய அருவியே பாணதீர்த்தம். கோடை காலத்திலும் வற்றாத அருவியிது. இந்த புண்ணிய அருவியில் "ஆடி அமாவாசை" அன்று நீராடினால் பாவங்கள் விலகும். தாமிரபரணி ஆறு, பொதிகையிலிருந்து ஓடிவரும் போது 122 அடி உயரத்தில் இருந்து அருவியாக விழுகிறது. இத் தீர்த்தம் உடலின் அழுக்கை மட்டுமல்ல, நமது உள்ளத்து மாசுகளையும் போக்குகிறது. பொதிகை மலையிலேயே காரையார் உள்ளது. பாணதீர்த்தத்தின் அருகே சொரிமுத்து ஐயனார் கோவில் இருக்கிறது.
இங்குள்ள சாஸ்தா இடதுகாலை மட்டும் குத்துக்காலிட்டு, வலது காலை தொங்கவிட்டபடி சற்றே இடப்புறமாக திரும்பியிருக்கிறார். இவருக்கு எதிரே ஒரே பீடத்தில் நந்தி, யானை, குதிரை வாகனங்கள் உள்ளன. இவரது சந்நிதியில் சப்தகன்னியர்கள் உள்ளனர். இவருக்கு முன்னால் உள்ள மண்டபத்தில் நாய் வாகனத்தோடு பைரவர் இருக்கிறார். இக்கோயிலில் காவல் தெய்வங்களாகச் சங்கிலி பூதத்தார், பிரம்ம ராட்சசி, தளவாய் மாடன், தூசி மாடன், பட்டவராயர், பேச்சியம்மன், சுடலைமாடன், இருளப்பன், இருளம்மன், கரடி மாடசாமி, மொட்டடையர், பாதாள கண்டிகை, கும்பாமணி ஆகிய காவல் தெய்வங்கள் உள்ளன.
இக்கோயிலில் பிரார்த்தனையாக பக்தர்கள் இங்குள்ள இலுப்பை மரத்தில் மணியைக் கட்டுகின்றனர். அந்த மரம் மணியை விழுங்கி விடுவதைப் போல மரத்தினுள்ளேயே மணிகள் பதிந்து விடுகின்றன. எனவே இதனை "மணி விழுங்கி மரம்' என்கின்றனர். பொதிகை மலையில் உள்ள இக்கோயிலில் ஆடி அமாவாசை விழா மிகவும் விசேஷமானது. இங்கு சாஸ்தா சொரிமுத்து ஐயனார் என்ற பெயரில் பூரணா, புஷ்கலா தேவியருடன் அருள் செய்கிறார். சாஸ்தாவின் அவதாரமே ஐயப்பன் என்பதால் "சபரிமலை ஐயப்பன்" கோயிலுக்கு முந்தியது இக்கோயில். சபரிமலை செல்பவர்கள் சாஸ்தாவின் முதல் கோயிலான இங்கு வந்து மாலை அணிகின்றனர்.
பட்டவராயர்: இப்பகுதியில் வசித்த பிராமணரான முத்துப்பட்டன் என்பவர் தாழ்த்தப்பட்ட குலத்தில் வந்த இரு பெண்களைக் காதல் திருமணம் செய்து கொண்டாராம். இவர் பசுக்களைப் பாதுகாக்கும் ஒரு போரில் பங்கேற்று மரணமடைந்தாராம். அவரே "பட்டவராயர்" என இந்த கோயிலின் ஒரு பகுதியில் சந்நிதியில் வீற்றிருக்கிறார். பொம்மக்கா, திம்மக்கா என்ற தம் இரு மனைவியருடன் பட்டவராயர் சாமி வீற்றிருக்கிறார். இவரது சந்நிதியில் பக்தர்கள் செருப்பைக் காணிக்கையாகக் கட்டுகின்றனர்.
முதலாண்டில் கட்டப்படும் செருப்பு மறு ஆண்டு பார்க்கும் பொழுது அது தேய்ந்திருக்குமாம். இரவில் பட்டவராயர் இந்த செருப்புகளை அணிந்து கொண்டு ஊர்வலம் செல்கிறார்! என்பது மக்களின் நம்பிக்கை. இது வனப்பகுதி என்பதால் வெளியாட்கள் இங்கே அதிகம் வருவதில்லை. இறைவனுக்கு காணிக்கை ஆக்கியிருக்கும் செருப்புகளை யாரும் தொடுவதில்லை. அப்படியிருந்தும் செருப்புகள் தேய்வது, இறைவனின் அதிசயமாகக் கருதப்படுகிறது.
கைலாயத்தில் சிவபெருமான், பார்வதி தேவியின் திருமணத்தின் போது பூமியைச் சமன்ப்படுத்த அகத்திய மாமுனிவரைப் பொதிகை மலைக்கு அனுப்பினார் சிவபெருமான். அகத்தியர் பொதிகையில் தங்கியிருந்த வேளையில் சிவலிங்கப் பூஜை செய்தார். காலப்போக்கில் அந்த சிவலிங்கம் மண்ணால் மூடப்பட்டு விட்டது. பிற்காலத்தில் இவ்வழியாக மாடு மேய்ப்பவர்கள் மாடுகளை ஓட்டிச் செல்லும்போது, தொடர்ந்து இந்த இடத்தில் பசுக்கள் தானே பாலை சொரிந்தன.
எனவே அங்கே மக்கள் தோண்டிப் பார்த்தபோது அதனுள் சிவலிங்கம் இருப்பதை கண்டெடுத்து கோயில் எழுப்பினார். இத்தலத்திலேயே தர்மசாஸ்தாவின் சந்நிதி கட்டப்பட்டுள்ளது. சாஸ்தாவை கிராமப்புறங்களில் ஐயனார் என்பர். ஐயன் என்றால் தலைவன் என்று பொருள்; மரியாதைக்காக "ஆர்" விகுதியைச் சேர்த்து "ஐயனார்" என்கின்றனர் பக்தர்கள். "மழை பொழிவதைப் போல பக்தர்களுக்குக் கணக்கின்றி அருள்புரிபவர்" என்பதும், இவரை வழிபட்டால் சொரியும் முத்தென மழை பொழியும்! என்பதாலும், இவர் சொரிமுத்து ஐயனார் எனப்பட்டார்.
காலத்தே மழைபெய்ய வேண்டுமென இவரை மக்கள் வேண்டுகின்றனர். இதனால் கிராம மக்களின் வருகை இங்கு அதிகமாக இருக்கிறது. மழை இல்லாத காலங்களில் இந்த ஐயனாருக்குப் பூஜை செய்தால் மழை பொழியும்! என்பது மக்களின் நம்பிக்கை. ஆடி அமாவாசை திருநாளில் பாணதீர்த்தத்தில் நீராடி பாவத்தை போக்குவதோடு மட்டுமல்ல. ஊருக்கெல்லாம் மழை பொழிந்து பயிர்கள் நன்கு விளைந்திட வேண்டுமென வேண்டிக்கொண்டால் அனைவருக்கும் ஐயனாரின் கருணைமழை கிடைக்கும். அதற்கு ஏற்ற நன்னாளே ஆடி அமாவாசை திருநாள்.
ஒரு நாள் அகத்தியர் தாமிரபரணி கரையில் தவம் மேற்கொண்டிருந்த போது அசரிரீ ஒன்று, இப்போது வானில் ஒரு ஜோதி தோன்றும்! அதை கவனி! என்றது. அகத்தியரும் கண் விழித்துப்பார்த்தார். அப்பொழுது சிவபெருமானுக்கும் பார்வதி தேவிக்கும், விநாயகர், முருகன், தர்மசாஸ்தா (சொரிமுத்து ஐயனார்) ஆகியோர் பூஜை செய்த காட்சி அகத்தியருக்குத் தெரிந்தது. அப்படி தெரிந்த நாளே "ஆடி அமாவாசை" நாளாகும். புறத்தே இருட்டாக இருந்தாலும் மனம் வெளிச்சமாக இருந்தால் புற இருள் பெரிதாக தெரியாது.
இந்த அரிய தத்துவத்தை விளக்கும் வகையிலேயே சொரிமுத்தையனார் கோவிலில் அமாவாசை நாளான இருட்டு நாளில் ஒளி விழா நடக்கிறது. அவர் கண்ட காட்சி வெளியேயும் உள்ளேயும், வெளியேயும் எங்கும் ஒளிமயமாக தெரிந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த அகத்தியர் இந்த தலத்தில் ஆடி அமாவாசையன்று யார் வந்து பாணதீர்த்தத்தில் நீராடி இங்கிருக்கும் சொரிமுத்து ஐயனாரை வழிபடுகிறார்களோ, அவர்களுக்குச் சகல நலங்களும் கிட்டும்! என்று ஆசீர்வதித்தார். எனவே ஆடி அமாவாசையான இருட்டு நாளில் இங்கே "ஒளிவிழாவாக" பக்தர்கள் கொண்டாடுகின்றனர். அதனால் தான் ஆடி அமாவாசை இக்கோயிலில் மிகவும் விசேஷமாக கொண்டாடப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu