மகன் உன் வீட்டிற்கு வரணுமா? எம்.ஜி.ஆர்., போட்டி கண்டிசன்..!
பெரியவா.
இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனின் மகனை வீட்டிற்கு வரவழைக்க எம்.ஜி.ஆர்., போட்ட கண்டிசன், அது நிறைவேறிய அற்புதத்தை பற்றி படிங்க.
அந்தக் காலத்தில் மெல்லிசை மன்னர் என்றால் எம்.எஸ் விஸ்வநாதன் திரை இசைத் திலகம் என்றால் கே.வி மகாதேவன். சினிமா உலகில் இசையமைப்பாளர்களாக இருவரும் கொடிகட்டிப் பறந்தார்கள்.
இருவர் பெயரிலும் என்ன ஒரு பொருத்தம் பாருங்கள்! இரண்டு பேருக்குமே சிவபெருமானுடைய பெயர் தான். இவர்களில் கே.வி.மகாதேவன் வாழ்க்கையில் சாட்சாத் மகாதேவனின் அம்சமாகவே திகழ்ந்த மகாபெரியவர் நடத்திய மகத்தான அற்புதத்தைத்தான் இப்போது நாம் பார்க்கப் போகிறோம். கே.வி.மகாதேவன் மகன், அந்தக் காலத்தில் பிரபலமாக இருந்த ஹிப்பி கலாசாரத்தால் ஈர்க்கப்பட்டு, ஒரு கட்டத்தில் சொல்லாமல்,கொள்ளாமல் வீட்டைவிட்டே வெளியேறி எங்கோ சென்று விட்டான்.
துன்பத்தைத் துடைத்துக் கொள்ள கே.வி.எம்.க்கு இசை கொஞ்சம் கை கொடுத்தது. ஆனால் அவரது மனைவியோ, என்ன செய்வதென்றே புரியாத நிலையில் இருந்தார். அவரிடம் பேசிய மக்கள் திலகம் எம்.ஜி.ஆர்., நான் சொல்வதை கேட்டால் உங்கள் மகன் வீடு திரும்புவான் என ஒரு கண்டிசன் போட்டார்.
கே.வி.எம்., மனைவியோ என்ன வேண்டுமானாலும் செய்கிறேன் சொல்லுங்கள் என கூறினார். அதன் பின்னர் எம்.ஜி.ஆர்., நீங்கள், ‘காஞ்சி மகா பெரியவாளை தரிசனம் செய்தால் நற்பலன் கிடைக்கும். உங்க பிள்ளை கண்டிப்பா மனம் மாறித் திரும்பி வருவான்!" என சொன்னார். அதோடு அவரே,'காஞ்சிப் பெரியவரை தரிசிக்க உங்களுக்கு 'வாலி' உதவுவார்!" என்றும் சொன்னார்.
மறுநாளே வீட்டுக்கு வந்த கவிஞர் வாலியிடம், கே.வி.எம்., மனைவி விஷயத்தைச் சொல்ல, "அடடே காஞ்சிப் பெரியவரைப் பார்க்கப் போவதென்பது கரும்பு தின்பது மாதிரி. எனக்கென்ன கசக்குமா? நாளைக்கே புறப்படுங்கள்.சென்று வருவோம்!" என்றார் கவிஞர்.
மறுநாள், தேனம்பாக்கம் எனும் இடத்தில் மகா பெரியவா இருப்பதை அறிந்து அங்கே சென்றார்கள்.எல்லோரும் மகாபெரியவாளை தரிசித்து அவரை நமஸ்காரம் செய்து எல்லாவற்றையும் சொன்னார்கள்.
அனைத்தையும் கேட்டுக் கொண்ட அந்த மகான், பதில் எதுவும் சொல்லாமல், கே.வி.எம். மனைவியை மட்டும் அழுத்தமாக தீட்சண்யமாக ஒரு பார்வை பார்த்து ,கொஞ்சம் குங்குமத்தை வழங்கிவிட்டு , உள்ளே சென்று விட்டார்.
மகான் ஆறுதல் சொல்வார், அனுகிரஹம் செய்வார் என்று எதிர்பார்த்தால், அவர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே... ஒருவேளை நம் மகன் திரும்ப வரமாட்டானோ என்ற வருத்தத்தோடு திரும்பினார்கள் அவர்கள்
வழியில் வாலி அவர்களுக்கு ஆறுதல் சொன்னார்." அந்த மகானின் பார்வை மட்டுமே போதும். அந்த தீட்சண்யமே உங்கள் மகனை திரும்ப வரவழைத்து விடும்......கவலைப்படாமல் வாருங்கள்!" என்றார்.
அவர்கள் வீட்டை நெருங்கியபோது கிட்டத்தட்ட நள்ளிரவை நெருங்கியிருந்தது. வீட்டின் வாசலில் இருட்டில் யாரோ நிற்பது தெரிந்தது. அழுக்கு உடை, பரதேசிக் கோலம் என்று நிழலாகத் தெரிந்தது. ஹிப்பிகளோடு சேர்ந்து விட்ட தங்கள் மகனும் இப்படித்தானே இருப்பான். ஒருவேளை அவன்தான் மனம் மாறி திரும்பி வந்திருப்பானோ....மனதுக்குள் பதைபதைப்போடு காரில் இருந்து இறங்கி அவனை நெருங்கிய கே.வி.எம். மனைவி அப்படியே சிலிர்த்துப் போனார். ஆமாம் அவர்கள் மகன்தான் திரும்ப வந்திருந்தான். கண்களில் நீர் தளும்ப மகனை அணைத்துக்கொண்டு தேம்பினார், தாய்
இன்னிக்கு காலைல ஒரு பத்து பதினொரு மணி இருக்கும். அப்போதுல இருந்தே, 'இந்த ஹிப்பி சகவாசம் சரிப்பட்டு வராது. உடனே வீட்டுக்குத் திரும்பிடணும்'னு மனசுக்கு உள்ளே கட்டளை மாதிரி ஒரு குரல் கேட்டுண்டே இருந்தது. நானும் யோசிச்சேன். அது சொல்றதுதான் சரின்னு தோணித்து. அதனால திரும்பி வந்துட்டேன்!" என்று சொன்னான் அவர்களின் மகன்
மகன் தனக்குள் கேட்டதாகச் சொல்லும் அந்தக் குரல், காஞ்சி மகானின் குரல்....இல்லை இல்லை அந்தக் கடவுளின் குரல் என்றே தோன்றியது, திருமதி கே.வி.எம்.க்கு. அங்கேயே நின்று உரக்கச் சொல்லத் தொடங்கினார், 'ஜயஜய சங்கர..ஹரஹர சங்கர’
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu