வாழ்நாளில் ஒருமுறையாவது வழிபட வேண்டிய கோயில்..!
சங்கரநாராயணன்
ஒரு வருடம் பழமும், ஒரு வருடம் சருகும், ஒரு வருடம் தண்ணீரும், ஒரு வருடம் அதுவும் கூட இல்லாமல் விரதமிருந்தார்கள் அந்தக் கால ரிஷிகள். ஆனால் தமிழ்நாட்டில் ஒரு சிவஸ்தலம் இருக்கிறது. எதுவுமே இங்கு தேவையில்லை. ஒரே ஒரு வேளை பட்டினி இருந்து இத்தலத்து இறைவனை வணங்கினாலே போதும். பல நூறு யாகங்கள் செய்த பலன் கிடைத்து விடும்.
இங்கு ஒரு நாள் தங்கினால் முற்பிறவியில் செய்த பாவமும், இரண்டு நாள் தங்கினால் இப்பிறப்பில் செய்த பாவமும், மூன்று நாள் தங்கினால் மறுபிறவியில் பாவமே செய்ய இயலாத மன நிலையும் ஏற்படும்.
ஞாயிறன்று இங்கு சூரியனை நினைத்து விரதமிருப்பவர்கள் கண் வியாதியின்றி இருப்பார்கள். திங்கள் கிழமையில் சந்திரனை நினைத்து விரதமிருப்பவர்கள் வாழ்வுக்குப் பின் சிவலோகம் அடைவர். செவ்வாய்க்கிழமையில் விரதமிருந்தால் நோய் நீங்கும். சனிதோஷ பாதிப்பும் நிவர்த்தியாகும். புதன் கிழமையில் விரதமிருப்பவர்கள் கல்வியில் சிறப்பாக திகழ்வார்கள்.
வியாழக்கிழமையில் விரதமிருந்தால் ஆசிரியர் பதவி கிடைக்கப் பெறும். வெள்ளியன்று விரதமிருந்தால் இந்திரனைப் போன்று செல்வ வளத்துடன் வாழ்வர். சனிக்கிழமை தோறும் விரதமிருப்பவர்கள் பொறாமை குணங்கள் நீங்கப் பெறுவார்கள். இந்தக் கோயிலுக்கு வந்தாலே போதும் கொடிய பாவங்கள் யாவும் நீங்கப்பெறுவார்கள்.
இந்த ஸ்தலத்திற்கு வந்தால் போதும் கொடிய பாவங்கள் நீங்கி விடும். அப்படி என்ன கோயில்?... எங்கிருக்கிறது என்று கேட்கிறீர்களா?
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோயில் என்ற ஊரில் உள்ள கோயில் சங்கரநாராயணர் கோயில். இந்தக் கோயிலில் சங்கரலிங்கம் (சங்கரநாராயணர்) மூலவராக காட்சி தருகிறார். கோமதி அம்மன் தாயார் பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறாள். சங்கராகிய சிவனும், நாராயணனாகிய திருமாலும் இணைந்திருக்கும் கோயில் தான் இது.
இந்தக் கோயிலில் புற்றுமண்ணே பிரசாதமாக வழங்கப்படுகிறது. இதை இறைவனே தருகிறார் என்ற பெருமைக்குரிது இத்தலம். இதற்கு புன்னைவனம் சீரரசை என்றும் பெயருண்டு. இந்தக் கோயிலில் ஒரு சிவனடியாருக்கு தானம் செய்தால், மற்ற கோயில்களில் லட்சம் சிவனடியார்களுக்கு சேவை செய்த பலன் கிடைக்கும். இங்குள்ள குளத்தில் நீராடினால் குழந்தை பாக்கியம் உண்டு. இங்கே தன் மகளுக்கு திருமணம் முடித்தால் கூட ஆயிரம் கன்னிகா தானம் செய்த பாக்கியம் கிடைக்கும்.
இவற்றை வேதவாக்கியமென நம்புவோர் மோட்சம் அடைவர் என்று புராணக்கதைகளை உலகுக்கு அளித்த சூதமுனிவர் கூறுகிறார். சென்று வாருங்கள். புண்ணியம் பெறுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu