விரதம் இருப்பதன் காரணம் என்ன?

விரதம் இருப்பதன் காரணம் என்ன?
X

கோப்புப்படம்

அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்பதற்காகவே விரதம் இருக்க சொல்லியிருக்கின்றனர்.

ஆன்மிகம் மற்றும் அறிவியல் கூறும் விரதம் இருப்பதன் நன்மைகள் பற்றி பார்க்கலாம். விரதம் என்ற ஒன்றை நம் முன்னோர் உருவாக்கியது ஆன்மிக நன்மைகள் கருதி மட்டுமல்ல. உடல் ரீதியாகவும் விரதங்கள் நமக்கு நன்மை செய்கின்றன.

அன்னத்தை அடக்கியவன் ஐந்தும் அடக்குவான் என்று ஒரு பழமொழி உண்டு. ஐந்து என்பது கண், காது, மூக்கு, வாய், உடல் ஆகிய ஐந்தையும் குறிக்கும். இந்த உறுப்புகள் ஒடுங்கும் போது, மனம் மோட்சத்தைத் தேடி, ஞானத்தை தேடி புறப்படுகிறது.

வறுமையால் உணவு இல்லை, சூழ்நிலை காரணமாக உணவில்லை என்ற நிலை வரும் போது கிடக்கும் பட்டினி விரதம் ஆகாது. நம் கண்முன் பாலும், பழமும், இனிப்பும், சித்ரான்னங்களும், பிற வகை உணவுகளும் குவிந்து கிடக்கும்போது, மனதை அடக்கி பசித்திருக்கிறோமோ, அது தான் உண்மையான விரதம்.

இன்றைய உலகில், உணவுக்கட்டுப்பாடு பற்றி மருத்துவர்களே நமக்கு அறிவுறுத்துகிறார்கள். டயட்டீசியன்களுக்கு இப்போது நிறையவே வேலை. எந்த வகை உணவு உண்ணலாம், எது கூடாது என்று இருதயவியல் நிபுணர்கள் நமக்கு ஆலோசனை வழங்குகிறார்கள்.

இதைத் தான், நமது முன்னோர் விரதம் என்றார்கள். ஆயுர்வேதம் என்பது அதர்வண வேதத்தின் உபவேதமாகும். இதில் லங்ஙனம் பரம ஒளஷதம் என்று சொல்லப்பட்டுள்ளது. லங்ஙனம் என்றால் பட்டினி. ஒளஷதம் என்றால் மருந்து. பட்டினியே சிறந்த மருந்து என்பது வேதவாக்காகும்.

உபவாசம் என்னும் சொல் இறைவனின் அருகே வசித்தல் என்ற பொருளைத் தரும். மேலும் ஒரு தினம் அல்லது பல தினங்கள் உணவு வகை எதனையும் விடுத்து இறை தியானத்தில் இருக்கும் நிலையே உபவாசம்.

இந்து மதத்தில் மட்டுமல்லாமல் கிருஸ்துவம், இஸ்லாமிய மதத்தினரும் பல விரதங்களை கடைப்பிடிக்கின்றனர். விரதம் இருப்பதால் மனம், புத்தி, உடல் முதலியவை தூய்மை அடையும் என்பது பெரியோர்கள் கூறுகின்றனர்.

மனம் பொறிவழி போகாது நிற்றற் பொருட்டு,

உணவை விடுத்தேனுஞ் சுருக்கியேனும் மனம்,

வாக்கு, காயம் என்னும் மூன்றினாலும்

கடவுளை மெய்யன்போடு விதிப்படி வழிபடுதல் விரதமாகும்.

நமது வயிறு 15 நாட்களுக்கு ஒருமுறையாவது காலியாக இருக்க வேண்டும். அதனால் தான் அமாவாசை, பௌர்ணமி, வெள்ளி, சஷ்டி என்றெல்லாம் விரதங்களை வகுத்தார்கள்.

விரதமிருப்பதால் வயிறு சுத்தமாகிறது. சுருங்கி விரியும் தன்மை சீராகிறது. மலஜலம் சரியாக வெளியேறுகிறது. ஆரோக்கியமாக வாழவே விரதங்களை நம் முன்னோர் வகுத்தனர்.நமது தர்மம் பல உண்மையான அர்த்தங்களை உள்ளடக்கியது.இது மதம் அல்ல ஒரு அற்புதமான வாழ்க்கை முறை

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!