மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடும் ரங்கநாதர்

மாப்பிள்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடும் ரங்கநாதர்
X

மதுரையை சேர்ந்த ஆன்மீக பற்றாளர் மற்றும் சொற்பொழிவாளர் என்.வெங்கடேசன்.

இன்று திருச்சி ரங்கநாதர் மாப்பி்ளை மிடுக்கோடு தீபாவளி கொண்டாடுவதை பற்றி பார்க்கலாம்.

மதுரையை சேர்ந்த ஆன்மீகவாதி, இந்து சமய சொற்பொழிவாளர் என்.வெங்கடேசன் கூறியதாவது:

திருவரங்கத்தில் அரங்கநாதன் ஒவ்வொரு வருடமும் தீபாவளிப் பண்டிகையைக் கோலாகலமாகக் கொண்டாடி வருகிறார். தீபாவளிக்கு முந்தைய நாள் மாலை, மேள தாளங்கள் முழங்க, மூலவரான பெரிய பெருமாள் எண்ணெய் அலங்காரம் செய்து கொள்வார்.

கோயிலில் கைங்கரியம் செய்வோர்களுக்கும் அன்று பெருமாளின் சார்பாக எண்ணெய், சீகைக்காய் உள்ளிட்டவை வழங்கப்படும். அன்று இரவு, உற்சவரான நம்பெருமாளுக்கும் எண்ணெய் காப்பு அலங்காரம் செய்யப்படும்.

அதன்பின், கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஆழ்வார்கள், ஆச்சாரியார்கள் ஆகியோரின் சந்நதிகளுக்கெல்லாம் எண்ணெய், சீகைக்காய், மஞ்சள் உள்ளிட்டவற்றைப் பெருமாள் அர்ச்சகர் மூலம் அனுப்பி வைப்பார். அவ்வாறே ரங்கநாயகித் தாயார் சந்நதிக்கும் எண்ணெய் அனுப்பி வைக்கப்படும்.

தீபாவளித் திருநாளன்று அதிகாலையில் ரங்கநாயகித் தாயாருக்கும், ஆழ்வார் ஆச்சாரியார்களுக்கும் எண்ணெய் அலங்காரம் செய்யப்படும். அனைவரும் புத்தாடையும் மலர் மாலைகளும் அணிந்து கொள்வார்கள். அதன் பின், ஆழ்வார்களும் ஆசார்யார்களும் தத்தம் சந்நதிகளில் இருந்து புறப்பட்டு, கருவறைக்கு முன்னிருக்கும் சந்தனு மண்டபத்துக்கு எதிரிலுள்ள கிளி மண்டபத்துக்கு வந்து நம்பெருமாளின் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

காலை பத்து மணியளவில் சந்நிதியில் இருந்து புறப்படும் நம்பெருமாள், சந்தனு மண்டபத்தில் எழுந்தருளித் திருமஞ்சனம் கண்டருள்வார். அதன்பின் சிறப்பு அலங்காரத்தோடு பக்தர்களுக்கு அருள்புரிவார். தீபாவளி என்றால், மாமனார் மாப்பிள்ளைக்குச் சீர் செய்வது வழக்கமல்லவா?

அந்த வகையில், சூடிக் கொடுத்த சுடர்கொடியாள் ஆண்டாளை அமுதனாம் அரங்கனுக்கே மணம் முடித்துத் தந்து, அரங்கனுக்கு மாமனார் ஆனவர் விஷ்ணுசித்தரான பெரியாழ்வார். குருவுக்குச் செலுத்தப்படும் அதே மரியாதையை மாமனாருக்கும் செலுத்த வேண்டும் என்பது மரபு. அந்த வகையில், ஒவ்வொரு வருடமும் நம்பெருமாள் பெரியாழ்வாருக்கு மரியாதை செய்து, அவரிடமிருந்து தீபாவளிச் சீரைப் பெற்றுக் கொள்கிறார். இந்நிகழ்ச்சி சந்தனு மண்டபத்தில் நடைபெறும். பெரியாழ்வாரின் சார்பில் அரையர்கள் பெருமாளின் திருவடிகளைச் சுற்றி நாணய மூட்டைகளைச் சீராக வைப்பார்கள். வேத பாராயணமும் மங்கல வாத்தியங்களும் முழங்க இந்த வைபவம் நடைபெறும். நாணய மூட்டைகளுக்குச் சாளி என்று பெயர். நாணய மூட்டைகளை தீபாவளிச் சீராகப் பெரியாழ்வார் சமர்ப்பிப்பதால், ‘சாளி உற்சவம்’ என்று அழைக்கப்பட்ட இந்த உற்சவம், நாளடைவில் ‘ஜாலி உற்சவம்’ என்றாகி விட்டது.

தனது மாமனாரான பெரியாழ்வார் தனக்கு அளித்த இந்த தீபாவளிச் சீரை அனைவருக்கும் காட்டி, மாமனாரின் பெருமையைப் பறைசாற்றுவதற்காக அந்த நாணய மூட்டைகளோடு இரண்டாம் பிராகாரத்தில் அரங்கன் வலம் வருவார். மாலையில் கிளி மண்டபத்துக்கு எழுந்தருளும் நம்பெருமாள் அங்கே காலைமுதல் காத்திருக்கும் ஆழ்வார் ஆச்சாரியார்களை ஒவ்வொருவராக அழைத்து, அவர்களுக்குப் புத்தாடை, சந்தனம், வெற்றிலைப் பாக்கு, புஷ்பங்கள், பழங்கள் உள்ளிட்டவற்றைத் தீபாவளிப் பரிசாகத் தந்து கௌரவிப்பார்.

தீபாவளி என்றாலே மாப்பிள்ளை களுக்குக் கொண்டாட்டம் தான். அதுவும் புது மாப்பிள்ளை என்றால் கேட்கவே வேண்டாம். அப்படியிருக்க ஒருவர் என்றும் அழகான, இளமையான,புது மாப்பிள்ளையாக இருந்தால் கொள்ளை இன்பம்.அதுவும் இந்த மாப்பிள்ளை மற்ற மாப்பிள்ளைகளைப் போலன்றி தாம் எதையும் பெற்றுக் கொள்ள மாட்டார். ஆனால் அனைவருக்கும் வேண்டியதைக் கொடுப்பவர்.யார் இவர்?

இவர் பெயரே அழகிய மணவாளன் (மாப்பிள்ளை). பூலோக வைகுண்டம் என்று போற்றப் படும் ஸ்ரீரங்கத்தில், எழுந்தருளியிருக்கும் பெரிய பெருமாள் ஸ்ரீரங்கநாதர்/அழகிய மணவாளன்/நம்பெருமாள்.இவர் பெரியாழ்வாரின் மாப்பிள்ளை. ஒவ்வொரு வருடமும் ஸ்ரீரங்கநாதர் தீபாவளி கொண்டாடும் விதம் அலாதியானது. தீபாவளியை முன்னிட்டு முதல் நாள் மாலை எண்ணெய் அலங்காரம், மேளதாளத்தோடு பெரிய பெருமாளுக்கு கண்டருளப் பண்ணுவார்கள். மேலும் கோயில் சிப்பந்திகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய் தூள் ஆகியவற்றை பெருமாள் சார்பாக வழங்குவார்கள். தீபாவளிக்கு முந்தைய இரவு உற்சவர் நம்பெருமாளுக்கும் எண்ணெய் அலங்காரம் நடைபெறும். அதைத் தொடர்ந்து கோயிலில் அருள்பாலிக்கும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளுக்கு நல்லெண்ணெய், சீகைக்காய்த் தூள்,விரலிமஞ்சள் ஆகியவை பெருமாள் சார்பாக அந்தந்த சந்நிதிகளில் உள்ள அர்ச்சகர் மூலம் அனுப்பி வைக்கப்படும். தீபாவளியன்று அதிகாலை தாயார் மற்றும் ஆழ்வார், ஆசார்யர் சந்நிதிகளில் எண்ணெய் அலங்காரம் செய்யப்பட்டு திருமஞ்சனம் நடைபெறும்.அதைத் தொடர்ந்து மூலவர் மற்றும் உற்சவர்களுக்குப் புத்தாடை, மலர் மாலை அணிவித்து அலங்காரம் செய்வார்கள். அலங்காரம் முடிந்ததும் ஆழ்வார்கள், ஆசார்யர்களின் உற்சவமூர்த்திகள் அனைவரும் புறப்பட்டு, பெரியபெருமாள் மூலஸ்தானத்துக்குக்கிழக்கில் உள்ள கிளிமண்டபத்துக்கு வந்து பெருமாள் வருகைக்காகக் காத்திருப்பார்கள்.

அப்போது பெருமாளின் மாமனார்- பெரியாழ்வாரும் மாப்பிள்ளை (பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை,ஆண்டாளை மணம் புரிந்ததால்) ஸ்ரீரங்கநாதருக்காக தீபாவளி சீர் தருவதற்காகக் காத்திருப்பார். உற்சவர் நம்பெருமாள் காலை பத்து மணியளவில் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு, சந்தனு மண்டபத்திற்கு எழுந்தருள்வார். அங்கு அவருக்கு திருமஞ்சனம் நடைபெற்றதும், சிறப்பு அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்புரிவார்.

இந்த நிகழ்ச்சியெல்லாம் முடிந்தபின் ஸ்ரீரங்கநாதரை மாப்பிள்ளையாக அடைந்த பெரியாழ்வார் தீபாவளி சீர் தரும் நிகழ்ச்சி நடைபெறும். பெரியாழ்வாரின் பிரதிநிதிகளாக அரையர்கள் சீர் வழங்கும் வழக்கம் இன்றுவரை மிகச்சிறப்பாகக் கடைப்பிடிக்கப்படுகிறது. நம்பெருமாள் திருவடிகளைச் சுற்றி சீர்வரிசையான நாணய மூட்டைகள் வைக்கப்படும். அப்போது வேதபாராயணங்கள் முழங்க, மங்கள வாத்தியம் வாசிக்கப்படும். இதை ஜாலி (சாளி) அலங்காரம் என்பர். ஜாலி அலங்காரம் என்பது, ஆயிரம் ஒரு ரூபாய் நாணயங்களை இரண்டு புது கைலிகளில் மூட்டையாகக் கட்டி, பெருமாள் திருவடிகளில் சமர்ப்பிப்பது. இந்த நிகழ்ச்சி நடைபெற்றதும், பெருமாள் கோவிலின் இரண்டாம் பிராகாரத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு சேவை சாதிப்பார். மீண்டும் சந்தனு மண்டபம் திரும்பி, மாலை ஆறு மணி முதல்எட்டு மணி வரை பக்தர்களுக்குக் காட்சி கொடுத்து அருள்வார். அதன்பின், கிளி மண்டபத்தில் காத்திருக்கும் ஆழ்வார்கள், ஆசார்யர்கள் அனைவரும் ஒவ்வொருவராக பெருமாள்முன் எழுந்தருளி, பெயர் சொல்லி அழைக்கப்படுவார்கள். அப்போது பெருமாள், அவர்களுக்குப் புதுவஸ்திரம், சந்தனம், தாம்பூலம், மலர், பழங்கள் ஆகியவற்றை தீபாவளிப் பரிசாகக் கொடுத்துக் கௌரவிப்பார்.

பெருமாளிடம் தீபாவளிப் பரிசு பெற்ற ஆழ்வார்கள் மற்றும் ஆசார்யர்கள், பெருமாளிடம் விடை பெற்றுக் கொண்டு, தங்கள் சந்நிதிக்குத் திரும்புவார்கள். இந்தத் திருக்காட்சியை தீபாவளித் திருநாளில் தரிசித்தால் ஆடை களுக்கும் பணவரவுக்கும் தட்டுப்பாடு உண்டாகாது என்பது நம்பிக்கை. இவ்வாறு கூறினார்.

Tags

Next Story