பரமபத விளையாட்டில் மறைந்துள்ள ஜோதிட ரகசியம்..!
பரமபத விளையாட்டை இப்போது மிக அரிதாகவே இதை விளையாடுகிறார்கள். ஆனால் பரம்பத விளையாட்டில் ஒரு ஜோதிட உண்மை ஒளிந்துள்ளது.அது என்ன என்பதை பார்க்கலாம்.
பரமபதம் எனும் விளையாட்டில் ஏணி, பாம்பு, தெய்வங்கள் என்று பல கலவைகள் இருக்கும். இதில் பிரதானமாக இருப்பது பாம்புகளே. இந்த பரமபத விளையாட்டு விளையாடுவதின் வழியே நமது வாழ்வில் ராகு-கேதுவின் தாக்கத்தால் ஏற்படும் விளைவுகளை குறைக்கலாம் என்றால் நம்புவதற்கு கடினமாகவே இருக்கும்.
ஆனால் அதுவே உண்மை. ராகு ஒரு மாயா கிரகம். இந்த பரமபத விளையாட்டும் ஒரு மாயாவே. அதாவது பாம்பு கடித்து அதில் நாம் கீழே வருவது போல் நடப்பது ஒரு மாயையே. இதன் வழியே நாம் செய்த கர்ம பலனை செயற்கையாக அனுபவிப்பது போல் ஆகும்.
இந்த விளையாட்டில் பாம்பு கடித்து நாம் கீழே வருவது கேதுவின் வால் பகுதிக்கே என்பதை நினைவில் கொள்ளுங்கள். ராகு திருத்திக்கொள்ளும் வழியை காட்டும்,கேது கர்மத்தை காட்டும். இதை மறக்க வேண்டாம்.
இந்த விளையாட்டில் ராகு எனும் பாம்பின் தலை வழியே கேது எனும் கர்மத்தில் சிக்குவதை போல் சிக்கி கடைசியில் வெளிவந்து, ஏணியில் ஏறுகிறோம் என்றால் மிகையாகாது. நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. இந்த பரமபதம் தற்காலத்தில் Snakes And Lader ஆகிவிட்டது என்பதுதான் கொடுமை. இந்த விளையாட்டில் தாயகட்டைக்கு பதில் Dice வந்து விட்டது.
அனைத்தும் ராகுவின் வேலை. இந்த விளையாட்டை பாரம்பரிய முறையில் விளையாடும் போதே ராகு, கேதுவால் நமது வாழ்வில் ஏற்படும் இன்னல்களை எதிர்கொள்ள ஆற்றல் பெற இயலும். அதனால் தான் இந்த விளையாட்டின் முடிவில் சொர்க்கம் என்று தெய்வங்களை வரைந்துள்ளார்கள் என்பதையும் நினைவில் கொள்க.
வருடத்துக்கு ஒருமுறை வரும் வைகுண்ட ஏகாதசி அன்று மட்டுமே இந்த பரமபதம் விளையாட்டை விளையாடுவார்கள். ஏன் இப்படி ஒரு விதிமுறை இந்த விளையாட்டுக்கு? இது வெறும் பொழுதுபோக்குக்காக மட்டுமே விளையாடப்படுவது அல்ல.
பகவானின் திருவிளையாடல்களைத் தெரிந்து கொள்ளவும், நமது பாவத்தினைப் போக்கிக் கொள்ளும் வழிமுறைகளை அறிந்து கொண்டு, பரமபதமாகிய மோட்சத்தினை அடைவதற்கு உரிய பக்திப்பாதையினைக் காட்டும் விளையாட்டு என்பதால்தான் இதனை வைகுண்ட ஏகாதசி அன்று மட்டும் விளையாடுகிறார்கள். தாயத்தை உருட்டி விளையாடத்தொடங்கும் இந்த விளையாட்டில், சில சமயம் ஏணியில் ஏறுவதும், சிலசமயம் பாம்பில் அகப்பட்டு கீழே இறங்குவதும் நடக்கும்.
இதுவும் கூட நமது பாவ புண்ணியத்தை அறிந்து கொள்வதற்காகத் தான். இந்த பரம்பத விளையாட்டு தொடர்பான புராணகதை. ஒரு சமயம் நாரதர், நரகத்துக்குச் செல்ல வேண்டும் என்ற விதி இருந்தது. அதனை பகவானிடம் அவர் சொல்லி வருத்தப்பட, நாரதா, முதலில் நரகம் எங்கே இருக்கிறது என்று தெரியுமா என்று கேட்டார், பகவான். நாரதர் விழிக்க, பகவானே சொர்க்கத்தையும் நரகத்தையும் விளக்குவது போல், படம்போல் வரைந்து விட்டு, நாரதரை அந்த இடத்தில் நின்று சுற்றிவந்து பார்க்கச் சொன்னார். அப்படிப் பார்த்த நாரதருக்கு நரகத்தின் காட்சிகள் அனைத்தும் தெரிந்தது.
பிறகு அவரை அங்கிருந்து நகரச் சொன்ன பகவான், இப்போது நீர் நரகத்திற்குச் சென்று வரவேண்டிய விதி நிறைவேறி விட்டது என்றார். பகவான் வரைந்து காட்டிய படம்தான், பரமபத சோபன படம் என்று சொல்வார்கள். இந்த விளையாட்டில் பாம்பின் வாயில் விழுந்தால் பதறாதீர்கள். உங்களுடைய பூர்வ ஜன்ம பாவம் பகவான் அருளால் விலகுகிறது என்பதை உணருங்கள்.
ஏணியில் ஏறிடும்போது உங்கள் புண்ணியக்கணக்கு தொடங்கி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு அமைதியாக இருங்கள். எந்த சமயத்திலும் கர்வமோ, கலக்கமோ இல்லாமல் விளையாடுங்கள். பகவான் திருவிளையாடல்படியே எல்லாம் நடக்கிறது என்று நம்புங்கள். பகவான் உங்கள் பக்கத்தில் இருப்பார். பாவங்களைப் போக்கி புண்ணியத்தைப் பெருகச் செய்வார் என்பதை உணர்த்துவதே பரம்பத விளையாட்டு முறை. பாம்பும் ஏணியும் மாறி மாறி நம் வாழ்க்கையை பதம் பார்க்கும். கஷ்ட நஷ்டங்கள் இணைந்தது தான் வாழ்க்கை என்பதை உணர்த்துவது தான் பரமபதம்.
ஒன்று முதல் 132 கட்டங்கள் கொண்ட இந்த விளையாட்டு அட்டையில் நிறைய சின்ன பாம்புகள் மிகப்பெரிய பாம்பு ஒன்றும் 100வது கட்டத்தை தாண்டிய பிறகும் இருக்கும். அதையும் தாண்டி விட்டால் அப்புறமும் நம்மை கொத்தி கீழ் இறக்க தயாராக சில குட்டி பாம்புகள் இருக்கும். நாம் செய்த புண்ணியங்களின் மூலம் பாம்பின் வாயில் கடிபடாமல் தப்பித்து பரமபதத்தின் இறுதி நிலையான வைகுண்ட வாசலை அடையலாம் என்பதை உணர்த்துகிறது. இந்த விளையாட்டு. தாயக்கட்டையை உருட்டுவதன் மூலம் காய்களை நகர்த்துவதாக இவ்விளையாட்டு அமைகிறது. இரண்டு பேர் விளையாடலாம்.
இதனை விளையாட சிறப்புத் தேர்ச்சிகள் எதுவும் வேண்டியதில்லை. பொதுவாக தொடங்குவதற்கு ஒருவர் "1" இனைத் தாயக்கட்டையில் பெற வேண்டியிருக்கும். பின்னர் மாறிமாறித் தாயக்கட்டைகளை உருட்டிக் கிடைக்கும் எண்ணிக்கைகேற்ப காய் நகர்த்தப்படும்.
காய் நகர்த்தி கொண்டு போகும்போது முதலில் சிறு பாம்பு கடிக்கும். அது கடித்த பின் மீண்டும் கீழே கொண்டு போய் விட்டுவிடும். இதிலிருந்து தப்பித்து மேலே சென்றவுடன் அதை விடப் பெரிய பாம்பு கடித்தவுடன் மேலே இருந்து கீழே வந்து விடுகின்றோம். ஏணியின் அடியை அடையும் காய் ஏணியின் உச்சிக்கும் பாம்பின் வாயை அடையும் காய் பாம்பின் வாலுக்கும் செல்லும். இந்த உலகத்தில் நாம் எத்தனையோ அசுரர்களை தாண்டித்தான் வந்திருக்கிறோம்.
ராவணன், ஹிரண்யகசிபு, துரியோதனன், மகிஷாசூரன், கும்பகர்ணன், கர்கோடகன், சிசுபாலன், சூரபத்மன், மகாபலி இப்படி அரசுரர்களின் பெயர்களை பாம்புக்கு வைத்திருப்பார்கள். இந்த விளையாட்டில் தாயம் விழுவதே கஷ்டம். ஒருவழியாக தாயம் விழுந்து 1ஆம் கட்டத்தில் அமர்ந்து ஆறு, 12 என போட்டு ஏணியில் ஏறி மேலே வந்து விட்டோம். இன்னும் இரண்டே கட்டம் எல்லாவற்றையும் விடப் பெரிய பாம்பு அங்கே இருக்கின்றது.
நம்முடைய பயமே நமக்கு எதிரி பயத்தால் உருட்டிய உடனே தாயம் விழுந்துவிடும். மீண்டும் பாம்பு கடிக்கும். அந்த விஷமான நிலைகள் பட்டவுடனே சர்ர்ர் என்று கீழே இங்கே கொண்டு வந்து நம்மை விட்டு விடும். எனவே பயப்படாமல் இருந்தால் அந்த தாயக்கட்டை கூட நாம் சொல்வதைக் கேட்கும். இதில் உள்ள தடைகளைத் தாண்டி கடைசிக் கட்டத்தை அடையும் காய் வெற்றியடையும்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu