அயோத்தி ராமர் கோவிலுக்கு சிலை வடிக்கும் முஸ்லிம் சிற்பி: இது தான் இந்தியா
அயோத்தி ராமர் கோவிலில் வைப்பதற்காக விநாயகர் சிலை வடிக்கும் முஸ்லிம் சிற்பி ஜலாலுதீன்.
அயோத்தி ராமர் கோவில் அடுத்த மாதம் திறக்கப்பட உள்ளது. இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலை அலங்கரிக்கும் வகையில் ராமர் சிலைகளை மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் என முஸ்லிம் சிற்பிகள் உருவாக்கி உள்ள தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில வழக்கு பல ஆண்டுகளாக நடந்து வந்தது. கடந்த 2019ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அயோத்தியில் ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
இதையடுத்து அயோத்தியில் 2.7 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதற்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
இதையடுத்து பணிகள் விரைவாக தொடங்கின. ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. கலைநுட்பத்துடன் சிற்ப வேலைப்பாடுகள் கொண்ட தூண்கள், கற்கள், இந்தியாவின் பல்வேறு இடங்களில் இருந்து காணிக்கையாக பெறப்பட்ட செங்கற்கள் பயன்படுத்தி கோவில் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்நிலையில் தான் ராமர் கோவிலின் முதற்கட்ட பணிகள் முடிந்துள்ளன. இதையடுத்து ராமர் கோவில் கும்பாபிஷேகம் 2024 ஜனவரி மாதம் 22ம் தேதி நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
இந்த விழாவை பிரமாண்டமாக நடத்த ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் திறப்பு விழாவையொட்டி அயோத்தி கோவில் வளாகத்தில் நிறுவப்பட உள்ள ராமர் சிலைகளை உருவாக்கும் பணியில் மேற்குவங்க மாநிலத்தை சேர்ந்த தந்தை-மகன் என 2 முஸ்லிம்கள் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது. அதாவது மேற்கு வங்க மாநிலம் வடக்கு 24 பர்கானாஸ் மாவட்டத்தை சேர்ந்த முகமது ஜமாலுதீன் மற்றும் அவரது மகன் பிட்டு ஆகியோர் கோவில் வளாகத்தை அலங்கரிக்கும் வகையிலான ராமர் சிலைகளை வடிவமைத்துள்ளனர்.
இவர்கள் களிமண்ணில் விநாயகர் உள்ளிட்ட பல்வேறு சாமி சிலைகளை வடிக்கும் சிற்பிகளாக உள்ளனர். இவர்கள் பற்றி அறிந்த அயோத்தி ராமர் கோவில் அறக்கட்டளையினர் ஆன்லைனில் விபரங்கள் சேகரித்து முகமது ஜமாலுதீனை தொடர்பு கொண்டு பேசி ராமர் சிலைக்கான ஆர்டரை வழங்கி உள்ளனர். அதன்படி இவர்கள் பைபர் ராமர் சிலைகளை வடிவமைத்து வழங்கி உள்ளனர்.
இதுபற்றி முகமது ஜமாலுதீன் கூறுகையில், ‛‛மண்ணில் வடிக்கப்படும் சிலைகளை காட்டிலும் பைபர் பயன்படுத்தி உருவாக்கப்படும் சிலைகள் நீடித்து உழைக்கும். இதனால் தான் கோவிலின் வெளிப்புறத்தில் இந்த சிலைகளை நிறுவ அறக்கட்டளை முடிவு செய்துள்ளது. பைபர் சிலை வடிப்பதில் நிறைய நுணுக்கம் தேவை. இதனால் ஒரு சிலையின் விலை என்பது ரூ.2.8 லட்சம் வரை இருக்கிறது.
ராமர் மட்டுமின்றி துர்கா மற்றும் ஜெகதாத்ரியின் பிரமாண்ட சிற்பங்களை நான் உருவாக்கி உள்ளேன். ராமர் சிலைகளை வடித்து கொடுப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். சகோதரத்துவ பாசத்தை வெளிப்படுத்தும் கலைஞனாக நான் இதை கூறுகிறேன். என்னை பொறுத்தவரை மதம் என்பது ஒவ்வொருவரின் தனிப்பட்ட விஷயம். நாட்டில் பல்வேறு மதங்களை பின்பற்றும் மக்கள் உள்ளனர். இருப்பினும் வகுப்புவாத கலவரங்கள் இன்றி நாம் அனைவரும் ஒன்றிணைந்து இருக்க வேண்டும்'' என்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu