/* */

கர்மாபடி தான் வாழ்க்கை எனில் ஏன் கடவுளை வணங்க வேண்டும்..?

கர்மாவின் படி நமது நிகழ்காலம் எதிர்காலம் இருக்குமேயானால் நாம் ஏன் கடவுளை கும்பிட வேண்டும்?

HIGHLIGHTS

கர்மாபடி தான் வாழ்க்கை எனில்  ஏன் கடவுளை வணங்க வேண்டும்..?
X

கர்மாவின் படிதான் வாழ்க்கையா?(கோப்பு படம்)

கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் என்று சில பெரியோர்கள் கூறுகிறார்கள், கர்மாவை குறைக்க இயலுமா?பரிகாரங்களால் கர்மாவை குறைக்க இயலுமா?

அய்யா கடவுளின் மேல் எனக்கு அதிக பக்தி உண்டு, ஆயினும் ஏன் கஷ்டங்களை அனுபவகிக்கிறேன்? இனி பாவம் செய்யாமல் தவிர்ப்பது எப்படி?

தாயை சார்ந்து தான் குழந்தை இருக்க வேண்டும். ஏனெனில் குழந்தையின் செயல்களில் எது சரி, எது தவறு என்று அந்தக் குழந்தையை விட அவளுக்குத்தான் நன்றாகத் தெரியும்.

அவளையும் மீறி, அவள் கண்காணிப்பை விட்டு விலகி குழந்தை தவறான செயலைச் செய்து விட்டாலும் கூட, அவள் அதனால் ஏற்படும் துன்பங்களில் இருந்து விடுபடுவதற்கு முயற்சி செய்து குழந்தையைக் காப்பாள்.

பெரும்பாலும் தாயின் கட்டுப்பாட்டில் இருக்கும் குழந்தை தவறான செயல்களைச் செய்வதில்லை. அது போலவே கடவுள் மேல் அளவு கடந்த பக்தி செலுத்துபவன் தவறான செயல்களைச் செய்ய அஞ்சுவான். அது அவனது எதிர் காலத்தை துன்பமற்றதாக அமைத்துத் தரும். நீங்கள் கேட்ட கேள்வியின் படி நிகழ்காலம் கடந்த கால கர்மாவின் விளைவாக இருக்கிறது.

இதே நிகழ் காலத்தில் உங்கள் கர்மாதான் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. அது மனத் தூய்மையோடு கூடிய நல்ல கர்மாவாக இருக்க வேண்டும் என்பதற்காகவே கடவுளை வணங்கச் சொல்கிறார்கள்.

கர்மாவை அனுபவித்தே ஆக வேண்டும் என்பது மாற்ற முடியாத விதி. ஆனால், அறிவைக் கொண்டு அதன் தாக்கத்தைக் குறைத்துக் கொள்ள முடியும். பரிகாரங்கள் நம்பிக்கை ஊட்டுவதற்கான உபாயங்களாகும். தன்னம்பிக்கை உடையவன் எத்தகைய சூழலையும் தைரியமாக எதிர் கொள்வான். நீங்கள் கொள்ளும் பக்தி என்பது தற்போதைய நிலை.

முன்பு செய்த வினைகளின் விளைவுகளை எதிர் கொள்ளத்தானே வேண்டும் ? ஆயினும் பக்தி உண்மையானதாக இருந்தால் துன்பங்கள் மனதைத் தொடுவதில்லை. பாவம் செய்யாமல் இருக்க எதுவுமே செய்யாமல் இருக்க வேண்டும். அது முடியாது. எனவே நல்ல செயல்களை மட்டுமே செய்து வரப் பழக வேண்டும்.

பிறப்பு இறப்பு என்பது ஓயாமல் நடக்கும் வினைப்பயனே ஆகும். இரவும் பகலும் மாறி மாறி வருவது போல, உடலை எடுப்பதும் பின் உகுப்பதும் மாறி மாறி நடந்து கொண்டேயிருக்கின்றது. ஒவ்வொரு ஜீவனுக்கும் எண்ணமே வினைக்கு மூலமாக இருக்கிறது. ஒரு காலத்திற்கு உதவுகிற எண்ணம், இன்னொரு காலத்திற்கு உதவாமல் போய் விடுகிறது.

குழந்தையாக இருக்கும் பொழுது உயர்வாகத் தோன்றிய எண்ணங்கள் வளரும் பொழுது பொருளற்றதாகப் போய் விடுகின்றன. குழந்தை தன் எண்ணத்தின் மூலம் தனது சூழ்நிலையை அமைத்துக் கொள்கிறது.

வயது முதிரும் பொழுது அந்த எண்ணமும் சூழலும் பொருளற்றதாகத், தீமை செய்வது போலத் தோன்றுகிறது. அதாவது வேண்டப்படாத எண்ணமும், அதன் விளைவுகளும் தீவினையாக ஒதுக்கித் தள்ளப்படுகின்றன.

ஆக ஒரு காலத்தில் நன்மையாகத் தோன்றுவது பிறகு தீவினையாகப் போய் விடுகின்றது. புதிய எண்ணங்களின் மூலம் தனது வாழ்வை ஓயாது புதுப்பித்து, அமைத்துக் கொள்வதையே ஜனனமரணம் என்கிறோம். கர்மாவுக்குக் காரணமான இந்த எண்ணங்கள் அறிவில் இருந்து உதிக்கின்றன.

அறிவு ஆன்மாவிடமிருந்து வந்தது. ஒளிக்கதிர்கள் எல்லாம் சூரியனிடமிருந்து வந்தது போல, ஜீவன்கள் அனைத்தும் பரம்பொருளிடம் இருந்து வந்தவைகளே. எனவே ஜீவர்கள் எண்ணுகிற எண்ணங்களும் ஒரு விதத்தில் பரம்பொருளிடம் இருந்து வந்தவைகளே.

ஆயினும் அவரவர்கள் பெற்றுள்ள அறிவுக்குத் தக்கவாறு எண்ணங்களில் வேற்றுமை ஏற்படுகிறது. அந்த வேற்றுமைக்குத் தக்கவாறு செயல்களும், செயல் விளைவுகளான வாழ்க்கையும் அமைகிறது. எனவே எண்ணங்களைத் திருத்தி அமைப்பதே வாழ்வின் இலட்சியமாக இருக்கிறது.

அதன் மூலம் செயல்களைத் திருத்திக் கொள்ளும் பொழுது பாவம் செய்யாமல் அவற்றில் இருந்து விடுபட முடியும். கர்மா என்றால் நல்லது கெட்டது என்று இரண்டாகச் சொல்வார்கள். இவை இரண்டின் விளைவுகளையும் அதைச் செய்தவன் அனுபவிக்கிறான். இதில் இருந்து விடுபட விரும்புபவன் முதலில் நல்ல கர்மாக்களைச் செய்ய வேண்டும்.

இதனால் பாவ கர்மாக்களில் இருந்து விடுபட முடியும். ஆனால், நல்ல கர்மா மட்டுமே செய்வதாலும் கூட அதன் விளைவுகளும் பிறவிகளை நீட்டிக்கும்தானே ? அதற்கு என்ன செய்வது ? அதற்கு சத் கர்மாக்களை செய்ய வேண்டும். சத் கர்மா என்றவுடன் வேதம், வேதாந்தம் என்றெல்லாம் யோசிக்க வேண்டாம். பரம்பொருளை அடைவதற்கான முயற்சியே சத் கர்மாவாகும்.

Updated On: 21 April 2024 5:57 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    காக்கும் கடவுள் கணேசனை நினை... கவலைகள் அகல அவன் அருள் துணை!
  2. கல்வி
    தமிழ்நாடு 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் : 91.55% பேர் தேர்ச்சி!...
  3. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் இன்றைய காய்கறி விலை
  4. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  5. ஆரணி
    ஆரணியில் பள்ளி வாகனங்கள் ஆய்வு
  6. திருவண்ணாமலை
    ஆட்டோ ஓட்டுனர் நலச்சங்கம் சார்பில் தண்ணீர் பந்தல் திறப்பு
  7. திருவண்ணாமலை
    லாரியின் முன் விழுந்த சுகாதார ஆய்வாளர் உயிரிழப்பு
  8. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  9. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  10. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்