செல்வ வளம் தரும் மகா சிவராத்திரி: திருவண்ணாமலையில் கோலாகலம்

செல்வ வளம் தரும் மகா சிவராத்திரி: திருவண்ணாமலையில் கோலாகலம்
X

லிங்கோத்பவர்

மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்

மாதம் தோறும் சிவராத்திரி வந்தாலும் கூட மாசி மாதத்தில் தேய்பிறை சதுர்த்தசி நாளில் வரும் மகா சிவராத்திரிக்கு சிறப்புகள் பல உண்டு. அந்த வகையில் மகா சிவராத்திரியை பற்றிய சில சுவாரஸ்ய தகவல்களை இங்கு பார்ப்போம் வாருங்கள்.

பகவான் விஷ்ணுவின் கையில் உள்ள சக்ராயுதத்திற்கு எவ்வளவு சக்தி உண்டு என்பது நாம் அறிந்ததே. சிவனை நோக்கி சிவராத்திரி அன்று பகவான் விஷ்ணு கடும் தவம் இருந்து அதன் பலனாக அந்த சக்ராயுதத்தை பெற்றார் என்று கூறப்படுகிறது.

பிரம்மாவும், விஷ்ணுவும் சிவபெருமானின் அடி முடியை தேடி செல்கையில் சிவபெருமான் நெருப்பு பிழம்பாய் விஸ்வரூபம் எடுத்து நின்றதும் மகா சிவராத்திரி அன்று தான் என்று கூறப்படுகிறது. ஊழிக்காலத்தால் உலகம் அழிந்துவிட, மீண்டும் இந்த உலகம் இயங்க வேண்டும் என்ற நல் எண்ணம் கொண்ட அன்னை பரமேஸ்வரி, சிவபெருமானை நோக்கி கடும் விரதம் இருந்து அவர் உடலில் சரிபாதியை பெற்றது மகா சிவராத்திரி அன்று தான் என்று புராணம் கூறுகிறது.

தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை கடைந்த சமயத்தில் அதில் இருந்து வெளிப்பட்ட நஞ்சினை சிவபெருமான் உண்டு இந்த உலகை காத்த கதை நாம் அறிந்ததே. இதன் காரணமாக தேவர்கள் சதுர்த்தசியன்று அன்று சிவனை வணங்கி அவருக்கான பூஜையை செய்தனர். அந்த நன்னாளே மகா சிவராத்திரி என்று சிலர் கூறுவதுண்டு.

சிவராத்திரியை முன்னிட்டு நாடுமுழுவதும் சிவ ஆலயங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. சிவராத்திரி நாளில் விரதம் இருந்து சிவனை வழிபட்டால் மூவேழு தலைமுறைக்கும் புண்ணியம் சேரும் என்கின்றன புராணங்கள்.

சிவபெருமான் அடி முடி காணாத ஜோதிப்பிழம்பாக காட்சியளித்த திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி விழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான திருவிழா, இன்று அதிகாலை தொடங்கியது.

சிவராத்திரியை ஒட்டி அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு ஸ்ரீஅருணாசலேஸ்வரர், ஸ்ரீஉண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெற்றன. அதிகாலை 5 மணி முதல் மூலவர் சந்நிதியில் லட்சார்ச்சனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு கோயில் வளாகம் முழுவதும் லட்ச தீபங்கள் ஏற்றி பக்தர்கள் வழிபடுகின்றனர்.

மாசிமாதம் கிருஷ்ணபட்சம் சதுர்த்தியன்று அமாவாசைக்கு முதல் நாள் சிவராத்திரி விரதம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் சிவபெருமானை நினைத்து விரதமிருந்து வழிபட்டால் கவலைகள் அனைத்தும் தீரும். காரிய வெற்றியும் ஏற்படும் என்கின்றன புராணங்கள்.

சிவராத்திரியின் விரத மகிமை பற்றி தெரிந்து கொள்ளுங்களேன்.

பிரம்மதேவன், திருமால், குபேரன், இந்திரன், சூரியன், சந்திரன், அக்கினி பகவான் உள்ளிட்ட தேவர்கள் பலரும் சிவராத்திரி விரதத்தைக் கடைபிடித்து உயர்ந்த நிலையை அடைந்தார்கள் என்று புராண கதைகள் கூறுகின்றன.

சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும்.

அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

மகா சிவராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிடவேண்டும் என்கின்றனர் முன்னோர்கள்.

மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும்.

சிவராத்திரியன்று நள்ளிரவு 11.30 மணிமுதல் 1 மணிவரை 'லிங்கோத்பவர்' காலமாகும். அந்த நேரத்தில் வழிபாடு செய்தால் நற்பலன்கள் நமக்கு கிடைக்கும்.

அந்த நேரத்தில் வலம்புரிச்சங்கால் அபிஷேகம் செய்து, வில்வ இலையால் அர்ச்சனை செய்து, சுத்தமான அன்னத்தை நைவேத்தியமாக வைத்து, சிவனுக்குரிய பாடல்களைப் பாடி பஞ்சாட்சரங்களை பலநூறு முறை சொன்னால் பாவங்கள் விலகும். யோகங்கள் சேரும் என்கின்றனர்.

சிவராத்திரி தினத்தன்று இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும்.

மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம். இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் மூவேழு தலை முறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!