புருஷன்,பொண்டாட்டி சண்டை கடவுளுக்கே உண்டுங்க: ஊடலும் கூடலும்..!
அண்ணாமலையார் திருவீதி உலா.
குடும்பம் என்றால் சண்டை சச்சரவுகள் இருக்கத்தான் செய்யும் என்று சொல்வார்கள். அதிலும் கணவனுக்கும், மனைவிக்கும் இடையே நடக்கும் சண்டையை வீட்டுக்கு வீடு வாசல்படி என்று கூறுவது உண்டு. கணவன், மனைவியிடமோ அல்லது மனைவி, கணவனிடமோ சண்டை போடும்போது அது ஒரு எல்லைக்குள், அளவுக்குள் இருந்தால் எந்த பிரச்சினையும் இல்லை. எல்லை மீறும்போது அது சர்ச்சைக்கு வழி வகுத்து விடுகிறது.
கணவன்-மனைவி இடையே சாடலும், மோதலும் அதிகரித்தால் அது தீராத சண்டைக்கு வழிவகுத்து விடும். ஆனால் கணவன்-மனைவி இடையே சாடலுக்கு பதில் ஊடல் இருந்தால் அது இன்பத்தை பெருக்குவதாக அமையும். சாடல் சண்டையை தரும். ஊடல் இன்பத்தை தரும். சரி.... ஊடல் என்றால் என்ன? "செல்ல கோபம்" என்று சொல்வார்களே, அதுதான் ஊடல். அதாவது கணவன் மீது மனைவி ஊடல் கொண்டால் அந்த கணவன் மீது அவளுக்கு வெறுப்போ ஆத்திரமோ வரவே வராது. கணவனை பிரிய வேண்டும் என்ற எண்ணம் தோன்றவே செய்யாது.
என்றாலும் கணவன் மீது சின்ன வருத்தத்தில் இருப்பார்கள் அல்லது வேண்டுமென்றே முகத்தை திருப்பி வைத்துக் கொள்வார்கள். ஊடல் தணிந்த பிறகும் கூட, கணவன் முதலில் வந்து பேசட்டும் என்று பெண்கள் செல்ல கோபத்துடன் இருப்பார்கள். கணவன் வெட்கத்தை விட்டு ஊடலை போக்கும் வகையில் ஒரே ஒரு வார்த்தை பேசி விட்டால்போதும் பெண்கள் சரண் அடைந்து விடுவார்கள். கணவன் பேசும் அந்த ஒரு சமரச வார்த்தையை தொடர்ந்து பெண்கள் 2 மடங்கு அன்பை வெளிப்படுத்துவார்கள்.
இந்த நிகழ்வானது சாதாரண ஏழை-எளியவர்கள் முதல் பணக்கார கோடீசுவரர்கள் வீடு வரை அனைத்து இடங்களிலும் இருக்கும். திருவண்ணாமலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கும் அண்ணாமலையாரும், உண்ணாமுலை அம்மனும் இத்தகைய ஊடலை நடத்தி இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமானது.
அண்ணாமலையார் மீது உண்ணாமுலை அம்மன் ஒரு தடவை கோபம் கொண்டு ஊடலை தழுவினார். பிறகு அவர் சமரசம் ஆனார். இந்த நிகழ்வு திருவண்ணாமலை தலத்தில் ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரிய விழாவாக நடத்தப்படுகிறது. இந்த விழாவுக்கு "திருவூடல் விழா" என்று பெயர்.
தை மாதம் பொங்கல் திருவிழாவுக்கு மறுநாள் இந்த விழா நடத்தப்படுகிறது. திருவண்ணாமலை ஆலயத்தின் அருகில் உள்ள ஒரு தெருவில் இந்த விழா அரங்கேறுகிறது. அதனால் அந்த தெருவுக்கே திருவூடல் வீதி என்று பெயர் ஏற்பட்டுள்ளது.
குடும்பத்தில் கணவன்-மனைவி எப்படி ஒற்றுமையுடன் வாழ வேண்டும். சிறு கருத்து வேறுபாடு வந்தாலும் அவற்றை தவிர்க்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் இந்த திருவூடல் திருவிழா அமைந்து உள்ளது. இந்த விழாவின் பின்னணியில் ஒரு புராண வரலாறு உள்ளது. சிவபக்தர்கள் ஒவ்வொருவரும் அதை தெரிந்துக் கொள்ள வேண்டும்.
தமிழகத்தில் பிருங்கி என்று ஒரு முனிவர் வாழ்ந்து வந்தார். இவர் சிவபெருமான் மீது மிகுந்த பற்றுக்கொண்ட தீவிர சிவபக்தர். சிவபெருமானை தவிர வேறு யாரையும் வழிபட மாட்டார். சிவபெருமானின் மனைவி பார்வதிதேவியை கூட அவர் வழிபடுவதில்லை. அந்த அளவுக்கு தீவிர சிவபக்தர். ஒரு தடவை அவர் சிவனை வழிபடுவதற்கு கைலாய மலைக்கு சென்றார். அப்போது ரிஷப வாகனத்தில் சிவபெருமானும், பார்வதிதேவியும் சேர்ந்து அமர்ந்து இருந்தனர்.
அம்மையும் அப்பனுமாக இருந்த அவர்களை முனிவர்கள், ரிஷிகள் சுற்றி வந்து வழிபட்டு சென்று கொண்டிருந்தனர். அதை பார்த்த பிருங்கி முனிவருக்கு சிவபெருமானை மட்டும் எப்படி சுற்றி வந்து வழிபடுவது என்று யோசித்தார். அப்போது அவருக்கு ஒரு திட்டம் தோன்றியது. அதன்படி அவர் தன்னை வண்டாக உருமாற்றினார். வண்டாக பறந்து சென்ற அவர் சிவனுக்கும், பார்வதிக்கும் இடையில் புகுந்து சிவபெருமானை மட்டும் சுற்றி வந்து வழிபட்டார். மூன்று முறை வண்டாக வந்து சிவபெருமானை சுற்றி விட்டு நகர்ந்தார். வண்டு உருவில் வந்து இருப்பது பிருங்கி முனிவர்தான் என்பதை பார்வதி தேவி தெரிந்து கொண்டார்.
தன்னை வணங்காமல் வேண்டுமென்றே சிவபெருமானை மட்டும் வணங்கி விட்டு சென்ற பிருங்கி முனிவர் மீது பார்வதி தேவிக்கு கடும் கோபம் ஏற்பட்டது. இது தனக்கு ஏற்பட்ட அவமானமாக பார்வதிதேவி கருதினார். உடனடியாக அவர் பிருங்கி முனிவரிடம், "என்னை வழிபடாத உனக்கு தண்டனை உண்டு. எனது சக்தி உன்னிடம் இருந்து இப்போதே அகன்று விடும். அந்த சக்தியை எனக்கே திருப்பி கொடுத்து விடு" என்று பார்வதிதேவி உத்தரவிட்டாள்.
பிருங்கி முனிவரும் அதை கேட்டு கவலைப்படவில்லை. சிவன் மட்டுமே தலைவன் என்று சொல்லி விட்டு சக்தியை கொடுத்து விட்டார். இதனால் சக்தி இழந்த அவர் நிற்க கூட உடம்பில் தெம்பு இல்லாமல் கீழே விழ போனார். இதை கண்டு பதறிய சிவபெருமான் ஓடோடி வந்து கை கொடுத்து பிருங்கி முனிவரை தாங்கி பிடித்தார். பிறகு பிருங்கி முனிவரிடம் என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.
அதற்கு பிருங்கி முனிவர், "மோட்சம் வேண்டும்" என்று கேட்டார். சிவபெருமானும் அவர் கேட்ட வரத்தை வழங்க தயாரானார். அப்போது பார்வதிதேவி அதை தடுத்தார். என்றாலும் தன் பக்தனுக்கு கேட்கும் வரத்தை கொடுக்க வேண்டும் என சிவபெருமான் உறுதியாக இருந்தார். இதனால் சிவபெருமானுக்கும், பார்வதிதேவிக்கும் மோதல் ஏற்பட்டது. சிவபெருமான் மீது பார்வதிக்கு ஊடல் ஏற்பட்டது. சிவபெருமானை பிரிந்து ஆலயத்துக்கு வந்து பார்வதிதேவி கதவை பூட்டிக் கொண்டார்.
பார்வதிதேவியின் ஊடலை தணிக்க நால்வர்களில் ஒருவரான சுந்தரமூர்த்தி நாயன்மாரை சிவபெருமான் தூது அனுப்பினார். ஆனால் அந்த தூது வெற்றி பெறவில்லை. இதனால் சிவபெருமான் இருதலைகொள்ளி எறும்பாக தவித்தார். பக்தனுக்காக பார்ப்பதா? இல்லையென்றால் தாலி கட்டிய மனைவிக்காக பார்ப்பதா? என்று யோசித்தார். இருவருமே வேண்டும் என்று தீர்மானித்த அவர் அன்று இரவு தனியாக இருக்கிறார். மறுநாள் பக்தனுக்கு அருள்பாலித்து விட்டு ஆலயத்துக்கு திரும்பி அன்னையின் கோபத்தை தணிக்கிறார். இதனால் அவர்களது ஊடல் நிறைவுபெறுகிறது.
இந்த நிகழ்ச்சி ஒவ்வொரு ஆண்டும் திருவண்ணாமலை தலத்தில் பொங்கலுக்கு மறுநாள் நடக்கிறது. இந்த நிகழ்ச்சி அன்று காலை மூலவருக்கும், உற்சவருக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படும். பிறகு அண்ணாமலையார், உண்ணாமலையம்மன், சுந்தரர் ஆகிய மூவரும் மண்டபத்தில் எழுந்தருள்வார்கள். அவர்களுக்கு தீபாராதனை காட்டப்படும்.
இதற்கிடையே அன்று மாட்டு பொங்கல் என்பதால் திருவண்ணாமலை தலத்தில் உள்ள நந்திகள் அனைத்துக்கும் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்படும். குறிப்பாக அண்ணாமலையாரை நோக்கி அமர்ந்து இருக்கும் 5 நந்திகளுக்கும் விதவிதமான அலங்காரங்கள் செய்யப்பட்டு இருக்கும். பெரிய நந்திக்கு பழ வகைகள், காய்கறிகள், வடை, அதிரசம், முறுக்கு போன்றவற்றால் மாலைகள் செய்து அலங்காரம் செய்வார்கள்.
இந்த நந்திகளுக்கு அன்று அதிகாலையில் அண்ணாமலையாரும், உண்ணாமலையம்மனும் தரிசனம் கொடுத்து விட்டு திட்டி வாசல் வழியாக வெளிவருவார்கள். அப்போது சூரிய பகவானுக்கும் காட்சி கொடுப்பார்கள். இதையடுத்து மாடவீதிகளில் மூன்று முறை சுற்றி வருவார்கள். சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகியோரை குறிக்கும் வகையில் இந்த மூன்று முறை மாட வீதி உலா வரும் நிகழ்வு நடைபெறும். அப்போது பக்தர்கள் மண்டகப்படி செய்து அண்ணாமலையாருக்கு சிறப்பு செய்வார்கள்.
கணவன்-மனைவி ஒற்றுமையை வலியுறுத்தும் இதுபோன்ற சிறப்பான திருவிழா தமிழ்நாட்டில் எந்த சிவாலயத்திலும் இவ்வளவு சீரும் சிறப்புமாக நடப்பது இல்லை. திருவண்ணாமலையில் மட்டுமே இது நடக்கிறது. எனவே பொங்கலுக்கு மறுநாள் திருவண்ணாமலைக்கு சென்று அண்ணாமலையாரை வணங்கி திருவூடலை கண்டு பலன் பெறுங்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu