கந்தசஷ்டி விரதம் எத்தனை நாட்கள்?
கந்தசஷ்டி விரதம் என்பது ஏழு நாட்கள் கொண்ட விரத நாளாகும். ஐப்பசி மாத பிரதமையில் துவங்கி, சஷ்டி திதிக்கு மறுநாள் சப்தமி அன்று வள்ளி-தெய்வசேனா சமேத முருகப் பெருமானுக்கு திருக்கல்யாணம் நடைபெறும். அன்றைய தினம் தான் கந்தசஷ்டி விரதத்தை நிறைவு செய்ய வேண்டும். பலரும் ஆறு தான் முருகனுக்கு உகந்த எண், பிரதமை துவங்கி சஷ்டி திதி வரை தான் விரதம் இருக்க வேண்டும் என நினைத்து, ஆறாவது நாளான சூரசம்ஹாரம் நிறைவடைந்த பிறகு அன்றைய தினமே விரதத்தை நிறைவு செய்து விடுகிறார்கள். ஆனால் கந்தசஷ்டி விரதம் என்பது ஏழு நாட்கள் கொண்ட விரத நாளாகும்.
கந்த சஷ்டி விரதம் இருப்பதற்கு எந்த விதிமுறைகள், கட்டுப்பாடுகள் என்று எதுவும் கிடையாது. இருந்தாலும் முருகனிடம் தாங்கள் வேண்டியதே பெற்றே தீர வேண்டும் என்பதற்காக தங்களின் பக்தியின், வைராக்கியத்தின் வெளிப்பாடாக பக்தர்கள் பல விதங்களில் இந்த விரதத்தை இருப்பதுண்டு. குழந்தைக்காக விரதம் இருப்பவர்கள் மிளகு மட்டும் சாப்பிட்டும், துளசி மட்டும் சாப்பிட்டும் விரதம் இருப்பார்கள். சிலர் பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். இன்னும் சிலர் ஒரு வேளை மட்டும் சாப்பிட்டு விரதம் இருப்பார்கள். உடல்நிலை ஒத்துழைக்காத சிலர் எளிமையான உணவாக எடுத்துக் கொண்டு சஷ்டி விரதம் இருப்பார்கள். சஷ்டி விரதத்தை பொறுத்த வரை உணவு சாப்பிடுவதும், பட்டினி இருப்பதும் முக்கியமல்ல. முருகன் மீது முழு நம்பிக்கையுடன் தீராத பக்தியை வைக்க வேண்டும் என்பது தான் முக்கியம்.
சஷ்டி விரதம் இருக்கும் முறை: கந்தசஷ்டி விரதம் இருப்பவர்கள் காலை, மாலை இரு வேளையும் குளித்து விட்டு, அருகில் இருக்கும் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட வேண்டும். இரண்டு வேளையும் போக முடியாதவர்கள், ஒரு வேளை மட்டுமாவது செல்ல வேண்டும். அருகில் கோவில் இல்லாதவர்கள், கோவிலுக்கு செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே காலை, மாலை இரு வேளையும் முருகனின் படம் அல்லது விக்ரஹம் அல்லது வேலுக்கு பூப்போட்டு வழிபடலாம். பெண்கள் சஷ்டி விரதம் இருக்கும் நாட்களில் மாதவிலக்கு ஆகி விட்டால், பூஜை அறைக்கு செல்லாமல் வெளியில் இருந்த படி விரதத்தை கடைபிடிக்கலாம்.
விரதத்தை நிறைவு செய்யும் முறை: சூரசம்ஹாரத்திற்கு மறுநாள் முருகப் பெருமானின் திருக்கல்யாணத்தை கண்டு தரிசித்த பிறகு, கோவிலில் தரும் பிரசாதம் அல்லது அன்தானத்தை சாப்பிட்டு விரதத்தை நிறைவு செய்யலாம். திருச்செந்தூர் போன்ற வெளியூரில் இருக்கும் முருகன் தலங்களுக்கு சென்று, அங்கி தங்கி கந்தசஷ்டி விரதம் இருப்பவர்களாக இருந்தால், மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து, வீட்டில் உள்ள முருகன் படத்திற்கு முன் விளக்கேற்றி வைத்து, சர்க்கரை கலந்த பால் நைவேத்தியமாக வைத்து படைத்து, கந்தசஷ்டி கவசம் பாடி முருகனுக்கு நன்றி சொல்லி வழிபட்டு, அந்த நைவேத்திய பாலை குடித்து விரதத்தை நிறைவு செய்யலாம்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu