வராக அவதாரத்தின் அற்புதத்தை பார்க்கலாம்..!
வராக அவதாரம் (கோப்பு படம்)
வராகத்தின் ஆச்சரியமூட்டும் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.:
விஷ்ணுவின் மூன்றாவது அவதாரம் வராஹம். இதனை 'பன்றி' என்று பொத்தாம் பொதுவாக கூறிவிடமுடியாது. இது ஒரு வகை காட்டுப்பன்றி. மகாவிஷ்ணு முதலில் தண்ணீரில் மட்டுமே வாழும் மச்ச(மீன்) அவதாரம் செய்தார். பிறகு தண்ணீர் மற்றும் நிலத்தில் சமமாக வாழும் கூர்மம்(ஆமை) என அவதாரம் செய்தார். அடுத்து நிலத்தில் அதிகமாகவும் தண்ணீரை விட்டுக்கொடுக்காத உயிரினமாகவும், அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சியை குறிக்கும் வராகமாக அவதாரம் செய்தார்.
அறிவியல்:
வராகம் என்கிற காட்டுப்பன்றி , அறிவியல் படி 16 துணை இனங்களைக் கொண்டது. இதில் இந்திய துணை கண்டத்து இந்திய காட்டுப்பன்றி, மிகவும் அழகானதும், ஆக்ரோஷமானதும், வலிமையானதும் ஆகும். நாளடைவில் காட்டுப்பன்றிகள் வீட்டு பிராணிகளாக வளர்க்கப்பட்ட போது, அதன் வாழ்விடம் மாற்றம் கண்டு இன்றுள்ள பன்றியாக மாறிவிட்டது.
ஒப்பீடு:
ஒரு காலத்தில் பார்க்கும் இடமெல்லாம் இருந்த இந்த காட்டு மிருகம், தற்போது அவ்வளவு எளிதில் காணமுடியவில்லை என்பதனால் வராகத்தை பன்றியுடன் ஒப்பிட்டு விடுகிறோம். நம்மை கண்டால், பன்றி ஓடும்; ஆனால் உண்மையில் காட்டுப்பன்றியைக் கண்டால் நாம் தான் ஓடவேண்டும், அவ்வளவு வலிமையானது. மனிதன் வராகத்தின் திறனைக் கண்டு அஞ்சியதால் தான், அதனைக் கடவுளாக பாவித்தான் என்பதே நிதர்சனம்.
பெயர்க் காரணம்:
'வராஹம்' என்ற சமஸ்கிருத பெயர் நேரடியாக காட்டுப்பன்றியைத் தான் குறிக்கிறது. எனினும் இதற்கு 'சுகரன்' என்று மற்றொரு பெயர் உள்ளது. அது இந்த மிருகம் மூச்செரிக்கும் ஒரு வினோதமான பயமுறுத்தும் ஒலியை குறிக்கும் பெயர். மேலும் வராஹம் பிரம்மாவின் மூச்சுக் காற்றிலிருந்து பிறந்ததாக புராணங்கள் கூறுவதால் இப்பெயர் பெற்றதாக அறியப்படுகிறது.
புராணம்:
விஷ்ணுவின் வராக அவதாரம், கடலில் மூழ்கிய பூமாதேவியைக் காப்பாற்றும் விதமாகவே பல புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு பல காரணங்கள் உள்ளன.
பூமி நீருக்குள் அழுந்திய காரணம், பூமி சுமைப்பட்டிருந்ததே. இதனால், பாதாள லோகத்தில் இரசாதளம் எனும் பகுதி வரை பூமி அழுந்தியதாக புராணங்கள் கூறுகின்றன. இதற்கு ஓரளவு அறிவியல் சான்றுகளும் உண்டு. இதில் இரசாதளம் அசுரர்கள் வாழும் இடம் ஆதலால், அசுரன் ஹிரண்யாக்ஷன் பூமியை தண்ணீரில் மறைத்தான் என்ற புராண கதை தோன்றியது.
வராகம் இயல்பாகவே தண்ணீரில் விளையாடும் குணமும், பூமியை கிளறும் தன்மையும் கொண்டிருந்ததால், பாதாளத்தில் மறைந்திருந்த பூமியை தண்ணீரில் விளையாடி கிளர்ந்து மேல் கொண்டு வந்ததான புராணக் கதைகள் வந்தன.
முதலில் சிருஷ்டித் தொழிலை மையப்படுத்தி, படைக்கும் கடவுளான பிரம்மாவே வராக ரூபம் எடுத்து வந்து தாமரை இலையின் கீழே இருந்த பூமியை தண்ணீரில் மிதக்க விட்டு உயிர்கள் உண்டாக்கினார் என்று புராணங்கள் கூற, பிறகு இது காக்கும் கடவுளான விஷ்ணுவின் அவதாரமாக மாறியது. தண்ணீரில் மிதந்த பூமியை, மறுமுறை அமிழ்ந்த முடியாத படி அஷ்ட நாகங்கள், யானைகள், மேருகள் கொண்டு பூமிக்கு தளம் கொடுத்தார் என்று புராணங்கள் விவரிக்கின்றன.
வராகர் பூமாதேவியிடம் பேசும் விதமாக அமைந்த 'வராக புராணம்' இந்து மதத்தின் சிறப்புமிக்க 18 புராணங்களுள் ஒன்று.
வராகி:
மேலும், தானே அந்த பூமியை என்றும் காக்கும் பொருட்டு, பூமியை பெண்ணாக உருவகப்படுத்தி மணந்துக்கொண்டதாக புராணங்கள் கூறின. வராகத்திற்கு இணையான பெண் சக்தி வராகி என்றும்; இவள் பூமி தேவி என்று வைணவமும், சக்தியின் பிரத்தியேக சேனை கடவுளென சாக்த மரபும் கூறலாயிற்று.
கொம்பு:
வராகத்தின் கொம்பே அதன் முழு பலம். வாயிலிருந்து இருபுறமும் வெளியே துருத்திக் கொண்டிருக்கும் இதன் மூலமாகவே இது பூமியைக் கிளறும் தண்மையைப் பெற்றது. மனித உடல் கொண்ட வராகர், இந்த கொம்பின் நடுவில் பூமியை வைத்து நிற்கும் உருவத்தை நாம் அனைவரும் கண்டிருப்போம். சில புராணங்கள், விஷ்ணு வராக ரூபம் எடுத்தபோது அவர் ஒற்றைக் கொம்பைக் கொண்டிருந்தார் என்று கூறுகின்றன. இதனால் வராகம் என்பது 'காண்டாமிருகம்' ஆக இருக்கலாம் என்பது சிலரது கருத்து. எனினும் பெரும்பாலாக ஏற்கப்பட்டது காட்டுப்பன்றி தான்.
மயிர்:
வராகத்தின் மற்றொரு தனித்தன்மை அதன் பிடரி மயிர். சிங்கத்திற்கு பிறகு பயமுறுத்தும் பிடரி மயிர் கொண்டது வராகம். வராகர் பூமிதேவியிடம் பேசுவதாக கூறப்பட்டிருக்கும் 'வராக புராணம்'; விஷ்ணு 100 யோஜனை அகலமும், 1000 யோஜனை உயரமும் கொண்ட பிரம்மாண்ட வராகமாக தோன்றியே பூமா தேவியை மீட்டார் என்கிறது (1 யோஜனை - 15 கிமீ). அப்போது, அவரது பிடரி மயிரைக் கண்டு கடல் அரசனான வருணனே பயந்தான் என்றும், அதனால் அவன் பொருட்டு அதை சுருக்கிக்கொண்டார் என்றும் கூறப்படுகிறது.
உணவு முறை:
வராகமோ கிழங்கு, கீரை போன்றவற்றை மட்டுமே உண்ணும். இது தொடர்பாக, ஸ்ரீமுஷ்ணம் பூவராக சுவாமி கோயில் வராகரான பெருமாளுக்கு 'முஸ்தா சூரணம்' எனும் இனிப்பால் செய்த கோரைக்கிழங்கு மசியலை நைவேத்தியமாகப் படைக்கின்றனர், பிரசாதமாகவும் தருகின்றனர்.
அசுரர்கள் ஒரு சமயம் தேவர்களின் செல்வத்தை கவர்ந்து பாதாள லோகத்தில் வைத்திருந்தபோது, யாவரும் வேள்வி நடத்தினர். அப்போது வேள்வியின் மொத்த உருவமாக விஷ்ணு வராகமாக தோன்றினார். அசுரர்களின் பாதாள லோகத்தில் இருந்த செல்வங்களை கிளறி எடுத்து வந்து, ஏழு மலைத் தாண்டி பதுக்கி வைத்தார்.
அப்போது இந்திரன் ஏழு மலைகளை உடைத்து, வராகத்தையும் அழித்தான். அப்போது விஷ்ணு தானே தோன்றி அந்த செல்வங்களை தேவர்களுக்கு பரிசளித்தார். வேள்வியின் ஆகுதியாகவும்(வராகம்); வேள்வியின் பயனாகவும்(விஷ்ணு) அவரே தோன்றியதால் விஷ்ணுவை யக்ஞ வராகர் என்று போற்றினர். ஸ்ரீ முஷ்னம் பூவராகரின் உற்சவர் 'யக்ஞ வராகர்' என்றே அழைக்கப்படுகிறார். அன்றிலிருந்து யக்ஞத்தில் யக்ஞ வராகராக விஷ்ணு எழுந்தருளும் வழக்கம், வைணவத்தில் தோன்றியது.
திருமலை
இந்த கதையின் மற்றொரு அங்கமாக, வராகர் ஏழுமலைகள் தாண்டி செல்வம் பதுக்கிய இடமே இன்றைய திருப்பதி. திருப்பதியின் தல புராணம், திருப்பதி முதலில் வராகரின் இடமாக இருந்ததாகவும், அங்கே வேங்கடவன் தங்க இடம் கேட்டதையும் விளக்குகிறது. இன்றும் அங்குள்ள வராகருக்கே முதல் பூஜை. திருப்பதி மலையில் வராகங்கள் உலவுவதை இப்போதும் காணலாம்.
கல்பம்
இந்து மத நம்பிக்கையில் காலம் ஒரு மிக பெரிய சுழற்சி. அது கல்பம், மன்வந்திரம், யுகம், ஆண்டு என்று பல தரப்பட்ட படிநிலைகளை சுழலாகக் கொண்டது. அதில் கல்பம் என்கிற பல கோடி ஆண்டுகள் கொண்ட பெரும் பகுதி, தற்போதும் 'சங்கல்பம்' என்னும் நாம் இருக்கும் கால நிர்ணயத்தை கூறும் மந்திரத்தில் சொல்லபடுகிறது. அதில் நாம் தற்போது 'ஸ்வேத வராக கல்பம்' எனப்படும் கல்பத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது இந்த கல்பத்தின் ஆரம்பத்தில் தான் மகாவிஷ்ணு 'வெள்ளை வராகமாக' அவதாரம் செய்து பூமாதேவியை பாதாளத்திலிருந்து மீட்டார் என்று சொல்லப்படுகிறது.
சிவன்
இவ்வளவு பெரிய சாகசங்களை செய்த வராகம், சைவ வைணவ சர்ச்சைகளில் சிக்காமல் இல்லை. சைவ சிந்தனையில் வராக அவதாரம் எடுத்த பிறகு விஷ்ணு அதன் போக்கில் சென்றதாகவும், பல அசுர கன்னிகளுடன் புணர்ந்து அசுரர்களை உருவாக்கியதாகவும், இதனால் விஷ்ணுவின் வேண்டுதலுக்கிணங்கி சிவ பெருமான் சரப ரூபம் கொண்டு வராகரை அழித்ததாகவும் சொல்லப்படுகிறது.
மேலும் அருணாச்சல மஹாத்மியம் கூறுகையில், ஏழு பாதாள லோகங்களையும் உலகங்களையும் கிளறிய வராகம் எனும் விஷ்ணுவால், எத்தனை லோகங்களை மண்ணால் கிளறியும் லிங்கோத்பவராக தோன்றிய சிவபெருமானின் அந்தத்தை காண முடியவில்லை என்று சிவபெருமானின் பெருமையை கூறுகிறது.
நாணயம்
இந்திய கண்டத்தில் வராகம் மிகப்பெரிய வீரத்தின் அடையாளமாக கருதப்பட்டது. மன்னர்கள், அதன் வலிமையில் மயங்கி அதனை தங்கள் சின்னங்களாக அறிவித்தனர். குப்தர்கள், பின் சாளுக்கியர்கள், சோழர்கள் என அந்த பாரம்பரியம் நீண்டது. தங்களது நாணயத்தில் வராகரை பொறித்து அதனை நடைமுறையில் பிரபலப்படுத்தியவர்கள் விஜய் நகர மன்னர்கள். அவர்களுக்கு பிறகே பொற்காசுகள் 'வராகன்' என்று அழைக்கப்பட்டது. வராகன் என்பது 3 3/4 கிராம் அதாவது அரை பவுன் கொண்ட தங்க காசு.
முகலாயர்
அதுவரை மிக பிரபலமாக இருந்த வராகம், முகலாயப் படையெடுப்பிற்கு பிறகு புகழ் மங்கியது. காரணம் உலகறிந்ததே. அரேபிய நாடுகளில் நிகழ்ந்த மிகப்பெரிய நோய் தொற்று பன்றியின் மூலமாக நிகழ்ந்ததையடுத்து, இஸ்லாமியர்கள் பன்றியை மிக அசுத்தமாக கருதினர். அதனை தங்கள் மதத்திலிருந்து முற்றிலுமாக புறக்கணித்தனர். வராகம் பன்றியாக பார்க்கப்பட்டதால், முகலாயர்கள் காலத்திற்கு பிறகு இந்தியாவில் வராகத்தின் பெருமை முற்றிலுமாக மழுங்கடிக்கப்பட்டது.
இதுவரையிலும் சிற்பமாக பல கோயில்களில் நீங்கள் வராகத்தைப் பார்த்திருந்தாலும், அதனை நேரில் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் சிறந்தது. வராகம் என்பது பன்றி இல்லை. அதனை ஒத்த உருவம் கொண்ட மிக அழகிய, ஒழுக்கமான மிருகம் என்பதனை நீங்கள் அப்போது அறிந்துக்கொள்வீர்கள்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu