தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்வது ஏன் தெரியுமா?

தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்வது ஏன் தெரியுமா?
X
தீபாவளியன்று கங்கா ஸ்நானம் செய்வது ஏன்?அதனால் கிடைக்கும் பலன்கள் என்ன? இதோ, உங்களுக்காக.

அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்! ஆவலோடு எதிர்பார்த்த, 2021 தீபாவளி வந்துவிட்டது. கடந்த இரண்டு வருடங்களாக கொரொனா பெருந்தொற்றால் முடங்கிப் போயிருந்தது, நாட்டின் பொருளாதாரமும், மக்களின் இயல்பு வாழ்க்கையும் மட்டுமல்ல, நமது மகிழ்ச்சியும் கூடத்தான். ஆனால், அந்த சோக இருளை அகற்றி, மகிழ்ச்சி மத்தாப்புக்களை தெறிக்கவிட, தீபாவளி அருமருந்தாக வந்துள்ளது.

கங்கா ஸ்நானம் ஆச்சா?

பொதுவாக, தீபாவளியன்று பலரும் கங்கா ஸ்நானம் ஆச்சா என்று கேட்பதுண்டு. அதென்ன கங்கா ஸ்நானம்? தீபாவளி பண்டிகை தொடங்குவதே, கங்கா ஸ்நானத்துடன் தான் எனலாம். தீபாவளி அன்று விடியற்காலை எண்ணெய் குளியலை தான் 'கங்காஸ்நானம்' என்று புனிதமாக சொல்வார்கள். அதிகாலையில் அரைத் தூக்கத்தில் நம்மை எழுப்பி, விடிகாலைக் குளிரில் தலையில் எண்ணை வைத்து கொண்டு குளிக்கச் செய்வது ஏன் தெரியுமா? அதன் பின்னணியை பார்ப்போமா?

முன்பு ஒரு காலத்தில், உலக இருள் அகல, மனித மன இருள் விலக வேண்டி, தீர்க்கதமஸ் என்ற முனிவர் சூரிய வெளிச்சம் புக முடியாத அடர்ந்த காட்டில் தவம் செய்து வந்தார். 'பரப்பிரம்மம் ரஸமானது, அமிர்தமயமானது, ஜோதிமயமானது, சத்தியமானது' எனும் பொருள்படும் மந்திரம் கூறி துயரத்தில் இருந்து மக்களைக் காக்க பரபிரம்மத்தை வழிபட்டுக் கொண்டிருந்தார்.

தம்மை சந்திக்க வந்த சநாதன முனிவரிடம், துன்ப இருளில் இருந்து மக்கள் அனைவரும் விடுபடுவதற்கான வழிமுறைகளை அருளும்படி தீர்க்கதமஸ் முனிவர் கேட்டார். துன்பங்களில் இருந்து அனைவரும் விடுபடுதற்கு, அற்புதமான ஒரு வழிபாட்டை தீர்க்கதமஸ் முனிவருக்கு, சநாதனர் விளக்கினார் .

அதாவது, ''துலா மாதம் கிருஷ்ணபட்ச திரயோதசியில் பிரதோஷ பூஜை செய்து, யம தீபம் ஏற்றி வழிபடவேண்டும். மறுநாள் நரக சதுர்த்தசியன்று எண்ணெய் தேய்த்து நீராடவேண்டும் என்றாராம்.

எண்ணெய் குளியலின் மகிமை

தீபாவளி நாளில், எண்ணெயில் மகாலட்சுமியும், சீயக்காய்ப் பொடியில் சரஸ்வதியும், தண்ணீரில் கங்கையும், சந்தனத்தில் பூமாதேவியும், குங்குமத்தில் கௌரியும், புஷ்பத்தில் யோகினிகளும், புத்தாடைகளில் மகாவிஷ்ணுவும், இனிப்பு மருந்தில் தன்வந்திரியும், இனிப்புப் பலகாரத்தில் அமிர்தமும், தீபத்தில் பரமாத்மாவும், நெருப்புப் பொறியில் ஜீவாத்மாவும் உறைவதாக ஐதீகம்.


ஆகவேதான், அன்றைய தினம் சூரியோதயத்துக்கு முன் இந்தப் பொருள்களை போற்றி வருகிறோம். அத்துடன், சிரஞ்சீவிகளான அஸ்வத்தாமா, மகாபலி, வியாசர், கிருபர், பரசுராமன், அனுமன், விபீஷணன் ஆகியோரையும் வழிபட, அவர்களது ஆசியால் துன்ப இருளில் இருந்து விடுபடலாம்'' என்று கூறி முடித்தார் சநாதன முனிவர்.

அதேபோல், நரக சதுர்த்தசி அன்றிரவு குபேரலட்சுமி பூஜை செய்வதும் மறுநாள் (அமாவாசை) கேதாரகௌரி விரதம் இருப்பதும் சிறப்பு என்றும் சநாதன முனிவர் கூறிச் சென்றார். சநாதன முனிவர் கூறியபடியே தீபாவளித் திருநாளை அனுஷ்டித்து இறைவழிபாடு செய்தால், வாழ்வு வளம் பெறும் என்பது நம்பிக்கை.

கங்கா ஸ்நானம் செய்வது எப்படி?

தீபாவளி அன்று, சூரிய உதயத்துக்கு முன்பாக, அதிகாலையில் 3 மணியில் இருந்து 6 மணிக்குள் நல்லெண்ணெய்யை தலையில் தேய்த்து வெந்நீரில் குளிக்க வேண்டும் என்று சாஸ்திரங்கள் கூறுகின்றன.

கங்கா ஸ்நானத்திற்கு பயன்படுத்தும் நல்லெண்ணெயில், முதல் நாளே மிளகு, சீரகம், இஞ்சி, மஞ்சள் தட்டிப்போட்டு காய்ச்சி தயார் செய்து கொள்ள வேண்டும். மறுநாள் அதிகாலை தலை உடல் எல்லாம் தேய்த்துக் குளிக்க வேண்டும்.


வீட்டுக் கிணற்றின் நீரிலோ அல்லது குழாயில் வரும் நீரிலோகூட தீபாவளியன்று நீராடினால் புனித கங்கையில் நீராடிய பலன் கிட்டும் என்பது ஆன்றோர் வாக்கு. மறக்காமல் தீபாவளி நாளில் கங்கா ஸ்நானம் செய்து, உரிய பலனை பெற்று உவகையோடு வாழ்வோம். புனித நீராடி புத்தாடை உடுத்தி, இறைவனைத் துதித்து, இனிப்பு பண்டங்கள் உண்டு மகிழ்வோம். அக்கம் பக்கத்தில் வசிக்கும் உற்றார் உறவினரிடம், இனிப்பு வழங்கி மகிழ்வை பெருக்குவோம்.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!