திருத்தணி முருகன் கோவிலில் ஆடி பரணி விழா கோலாகல கொண்டாட்டம்

திருத்தணி முருகன் கோயிலில் ஆடி பரணி விழா கோலாகலமாக நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் காவடிகளுடன் மலைக் கோயிலில் குவிந்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் உள்ளது ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக போற்றப்படும் திருத்தணி முருகன் கோயில். இக் கோயிலில் ஆடிக்கிருத்திகை விழா நேற்று ஆடி அஸ்வினியுடன் துவங்கியது.
இன்று ஆடிபரணியைமுன்னிட்டு அதிகாலை மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்று தங்க கவசம், வைரக்கல் முத்து, மரகத மாலை அணிவிக்கப்பட்டது. மேலும் உற்சவருக்கு சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து காவடிகளுடன் பக்தர்கள் திருத்தணிக்கு வந்து கொண்டிருந்ததால், நகரில் காவடிகள் ஓசை கலை கட்டியது. ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு ரயில்வே நிர்வாகம் கூடுதலாக 3 மின்சார ரயில் இயக்க உள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சிறப்பு 480 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதால், அதிக அளவில் பக்தர்கள் வரக்கூடும் என்பதால் திருவள்ளூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பா.சிபாஸ் கல்யாண் தலைமையில் 1500 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
பக்தர்கள் திருத்தணி மலையில் குவிந்து வருகின்றனர். நேர்த்திக்கடன் செலுத்தும் வகையில் பக்தர்கள் மொட்டையடித்து சரவணபொய்கை, நல்லாங்குளம் ஆகிய திருக்குளங்களில் நீராடி கோயில் படிகள் மற்றும் மலைப் பாதை வழியாக மலைக்கோயில் வந்தடைந்தனர். பின்னர் பலமணி நேரம் காத்திருந்து முருகப்பெருமானை வழிபட்டு காவடிகள் செலுத்தினர்.
பக்தர்கள் கூட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், நகரில் பேருந்துகள், லாரிகள். ஆட்டோக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் குற்றவாளிகளை எளிதில் அடையாளம் காட்டும் நவீன காமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது. ஆடிக்கிருத்திகை நாளை கொண்டாடப்பட உள்ள நிலையில் மேலும் பக்தர்கள் கூட்டம் அதிகரிக்கும் என்ற எதிர்பார்க்கப்படுகிறது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu