பிச்சை எடுத்தாரா? இல்லை. பிச்சை கொடுத்தாரா பெருமாள்

பிச்சை எடுத்தாரா? இல்லை. பிச்சை கொடுத்தாரா பெருமாள்
X
பிச்சை எடுத்தாராம் பெருமாளு, அத புடுங்கி தின்னாராம் அனுமாரு என கிராமங்களில் சொல்வார்கள். அதன் உண்மையான அர்த்தம் பற்றி பார்க்கலாம்.

கிராமங்களில் சொலவடையாக சொல்லப்படும் இந்த பழமொழி பற்றி எல்லோருக்கும் தெரியும். தன்னை வணங்கி பிரார்தனை கேட்கும் வேண்டுதல்கள் மற்றும் கேட்காத வேண்டுதல்களையும் பக்தர்களின் தேவையறிந்து கருணையோடு வழங்கும் இரண்டு தெய்வங்களின் கீர்த்தியை குறைப்பதாக உள்ளதே என, பழமொழிக்கான நிஜ அர்த்தத்தை தேடும் போது கிடைத்த தகவல்கள் உங்கள் பார்வைக்கு இந்த பதிவில்.

பொதுவாக வாழ்க்கை பந்தத்தில் நாம் சிக்கி உழலும் போது சந்தோஷமாக இருக்கும் நேரத்தைக் காட்டிலும், சங்கடமாக இருக்கும் நேரத்தில் கடவுளை நன்றாகவே தேடுவோம், கடவுளை நன்றாகவே வணங்குவோம். நமது தேவைகளை நிறைவேற்றித்தர கடுமையான விரதம் இருந்து கடவுளிடம் நமது வேண்டுதல்களை பிரார்த்தனையாக தெரிவிப்போம்.

'ஐயா.. நாராயண சாமி!! பெருமாளே! ஊருக்கு மேக்கால இருக்க மலங்கரையில (மலையோரம்) நாலு ஏக்கர் தோப்பு விலைக்கு வருது. வாங்கிப் போட ஆசையா இருக்கு. நல்ல முறையில எடவாடு முடிஞ்சு பத்திரம் ஆயிடுச்சுன்னா திருப்பதிக்கு வந்து தல முடியை காணிக்கையா தாரேமுய்யா!' என தான் நினைக்கும் காரியம் வெற்றி அடைய பெருமாளிடம் நேர்ந்து கொள்வார்கள்.

இன்னும் சிலரோ, 'உன்னோட புள்ள தானே நான்! எலி வளைன்னாலும் தனி வளையா இருக்கணுமுன்னு பெரியவங்க சொல்லுவாங்களே. புறாக்கூடு மாதிரியான வாடகை வீட்டுல இருந்து கஷ்டப்படுறேனே. நாம் படுற செரமம் ஒன்னோட கண்ணுக்கு தெரியலையா?

எம்பெருமாளே! ஒம்ம கால புடிச்சு பிச்சையா கையேந்தி கேக்குதேன். என்னையும் கண்ண தொறந்து பாத்து ஒம்மோட கருணையால ஒரு வீட்ட வாங்கி தாரும். நடந்தே திருப்பதிக்கு மலையேறி வந்து கும்பிட்டு போவேன் பெருமாளே!' என பெருமாளிடம் நம்முடைய வேண்டுதல்களை வேண்டி இருப்போம், அல்லது பிறர் வேண்டுவதை கேட்டிருப்போம்.

மகனுக்கு வேலை கிடைக்க வேண்டும். மகளுக்கு திருமணம் ஆக வேண்டும், சொந்த வீடு வேண்டும், கார் வேண்டும் என பெருமாளிடம் கேட்பார்கள். உள்ளன்போடு தன்னிடம் உரிமை கலந்த பக்தியோடு கேட்கும் பக்தர்களின் வேண்டுதல்களை பெருமாள் உடனே கொடுப்பார்.

ஆம்! பக்தர்கள் பெருமாளிடம் பிச்சையாக பணிவு கலந்த பக்தியோடு கண்களில் கண்ணீரோடு மனமுருகி கேட்கும் வேண்டுதல்களை உடனே பெருமாள் நிறைவேற்றிக் கொடுப்பார். தனது பக்தர்கள் அல்லல் படுவதைக் கண்டு மனம் பொறுக்காமல் வாரி வாரி கொடுக்கும் வள்ளல் தன்மை கொண்டவன் வைகுந்த வாசனான பெருமாள்.

பெருமாளின் கருணையால் பணம், பதவி, புகழ் கிடைத்ததும் சிலர் பக்குவமாக நடந்து கொள்வார்கள். பணம், பதவி, புகழ் வந்ததும் பெரும்பான்மையோர் முந்தைய காலத்தில் தாங்கள் சிரமப்பட்ட நிலையை மறந்து மனதை அலை பாய விடுவார்கள்.

சற்று பணம் வந்ததும் சிலர் ஏழ்மை காலத்தில் தன்னுடன் இருந்த பக்தி நெறியை மறந்து கடவுளை வணங்காமல், கடவுளுக்கு பயப்படாமல், கடவுளை மதிக்காமல் நடந்து கொள்வார்கள். குரங்கைப் போல் அங்கும் இங்கும் அலைபாயும் மனதால் தங்களது ஒழுக்கத்தைத் தவற விடுவார்கள். கிளைக்கு கிளை இங்கும், அங்கும் குரங்கு தாவுவதை போல் அவர்களது மனம் அங்கும், இங்கும் அல்ப விஷயங்களுக்கு சபலப்பட்டு அலைபாயும்.

கிராமங்களில் குரங்கினை அனுமார் என்று அழைப்பதும் உண்டு. பெருமாள் பிச்சையாக தந்த பொன், பொருள், புகழ் போன்ற செல்வங்களை அலை பாயும் குரங்கு போன்ற மனதால் மது, மாது, சூது போன்றவற்றில் தொலைத்து விட்டு நிர்கதியாய் நிற்பார்கள் சிலர்.

மனதை குரங்கை போல் அலைபாய விடாமல் இறைவன் மீது மாறாத பக்தி கொண்டு நேர்மையாக நடந்தால் இறைவன் நமக்கு தந்த வீடு,பேறு,புகழ் நம்மை வீட்டு நீங்காமல் இருக்கும்.

பெருமாள் பிச்சையாக தந்தது தான் இந்த செல்வங்கள் என எண்ணாமல் மனதை குரங்கை போல் அலை பாயவிட்டு மனிதன் தான்தோன்றித்தனமாக நடந்தால், அனைத்து செல்வங்களும் வந்த வேகத்தில் காணாமல் சென்று விடும்.

இதை உணர்த்துவதற்காகவே பிச்சை கொடுத்தாராம் பெருமாள் அதைப் பிடுங்கி தின்றாராம் அனுமார்' என சொலவடையாக குறிப்பிட்டு இருக்கின்றனர்.

பேச்சு வழக்கில் 'பிச்சை எடுத்தாராம் பெருமாள் அதைப் பிடுங்கித் தின்றாராம் அனுமார்' என்று திரித்து பழமொழியை தவறாக உச்சரித்து பொருளையும் திரித்து பெருமாளையே பிச்சை எடுக்க வைத்து விட்டனர்.

பிச்சை கொடுத்தாராம் பெருமாள் அதைப் பிடுங்கி தின்றாராம் அனுமார்' என்பது தான் சரியான சொலவடை ஆகும்.

Tags

Next Story
கருணை இல்ல மேம்பாட்டுப் பணி..! பண்ணாரி அம்மன் கோயிலில் முதல்வா் காணொலியில் தொடக்க விழா..!