அயோத்தி ராமர் கோவிலில் 11 நாட்களில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம்
அயோத்தி ராமர் கோவிலில் குவிந்துள்ள பக்தர்கள் கூட்டம்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் முடிந்து தினமும் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். இந்நிலையில் தான் கடந்த 11 நாளில் அயோத்தி ராமர் கோவிலில் எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர் எவ்வளவு நன்கொடை வசூலாகி உள்ளது? என்பது பற்றிய முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.
2019ல் உச்சநீதிமன்றம் உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட அனுமதி வழங்கி தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து 2020ல் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இதையடுத்து பணிகள் வேகமாக நடந்து வந்தன. மொத்தம் 3 அடுக்குகளாக கோவில் கட்ட திட்டமிடப்பட்ட நிலையில் தற்போது தரைதளம் முழுவதுமாக கட்டி முடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து கடந்த மாதம் 22ம் தேதி அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடந்தது. கோவில் கருவறையில் நிறுவப்பட்டு இருந்த 5 வயது நிரம்பிய பால ராமர் சிலைக்கு பிரதமர் மோடி சடங்குகள் செய்தார். அதன்பிறகு சிலையின் கண் திறக்கப்பட்டது.
இந்த கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த மாதம் 23ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் கோவிலில் தரிசனம் செய்து வருகின்றனர். அயோத்தி ராமர் கோவிலில் தினமும் காலை 7 மணி முதல் 11.30 மணி வரையும், மதியம் 2 மணி முதல் இரவு 7 மணி வரையும் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். மேலும் காலை 6.30, மதியம் 12 மணி, இரவு 7.30 மணிக்கு என 3 வேளை ஆரத்தி நிகழ்வுகள் நடைபெற உள்ளது. ஆரத்தி நிகழ்வுகளில் மக்கள் பாஸ் பெற்று பங்கேற்று வருகின்றனர். தற்போது கோவிலில் கூட்டம் அலைமோதி வருகிறது. அதிகாலை முதல் பக்தர்கள் கோவில் வளாகத்தில் திரண்டு தரிசனம் மேற்கொண்டு வருகின்றனர். தற்போது அயோத்தியில் குளிர் நிலவினாலும் கூட அதனை பொருட்படுத்தாமல் பக்தர்கள் ராமரை தரிசித்து வருகின்றனர். அதிகளவில் பக்தர்கள் கூடுவதால் அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது
இந்நிலையில் தான் அயோத்தி ராமர் கோவிலில் கடந்த 11 நாளில் எத்தனை பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். நன்கொடையாக எவ்வளவு பணம் கோவிலுக்கு கிடைத்துள்ளது என்ற முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. இதுபற்றி கோவில் அறக்கட்டளையின் அலுவலக பொறுப்பாளர் பிரகாஷ் குப்தா கூறியுள்ளதாவது:-
கடந்த 11 நாளில் கோவிலில் 25 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். மேலும் நன்கொடையாக மொத்தம் 11.50 கோடி கிடைத்துள்ளது. இதில் ரூ.8 கோடி கோவில் உண்டியல் காணிக்கையாக ரூ.3.50 கோடி காசோலை மற்றும் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை மூலமாகவும் கிடைத்துள்ளது. கோவில் கருவறைக்கு வெளியே பக்தர்கள் தரிசிக்கும் இடத்தில் 4 பெரிய உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளது. அதில் பக்தர்கள் காணிக்கைகளை செலுத்தி வருகின்றனர். மேலும் கம்ப்யூட்டர்கள் அடங்கிய 10 நன்கொடை கவுண்ட்டர்களும் திறக்கப்பட்டுள்ளது.
இந்த கவுண்ட்டர்கள் வழியாக செலுத்தப்படும் நன்கொடைகளும் தினமும் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு வருகிறது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மொத்தம் 14 பேர் ஈடுபடுகின்றனர். இதில் 11 பேர் வங்கி ஊழியர்கள். 3 பேர் கோவில் அறக்கட்டளை நிர்வாகிகளாக உள்ளனர். இந்த காணிக்கை எண்ணும் பணி என்பது கண்காணிப்பு கேமராக்களால் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu