200 சீட்களில் வெற்றி: திருச்சி தெற்கு மாவட்ட திமுக கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி தெற்கு மாவட்ட திமுக பொது உறுப்பினர்கள் கூட்டத்தில் பேசும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி.
திருச்சி தெற்கு மாவட்ட திமுகவின் இரண்டாவது பொது உறுப்பினர்கள் கூட்டம் இன்று 01.09.2024 ஞாயிற்றுக்கிழமை திருச்சி காவேரி பாலம் சிந்தாமணி அருகில் உள்ள தேசிய பள்ளி மைதானத்தின் கலைஞர் அரங்கில் நடைபெற்றது.
மாநகர திமுக செயலாளர் மதிவாணன் வரவேற்று பேசினார். மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜன் தலைமை தாங்கினார்.
திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் கழக முதன்மை செயலாளரும், தமிழக நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே.என்.நேரு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
கூட்டத்தில் திருச்சி கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வண்ணை அரங்கநாதன், சேகரன், சபியுல்லா ,கவிஞர் சல்மா, செந்தில், திவ்யா, மாவட்டத் துணைச் செயலாளர்கள் செங்குட்டுவன், லீலாவேலு, குணசேகரன் பகுதி கழகச் செயலாளர் மோகன் மற்றும் மாநில, மாவட்ட, மாநகர நிர்வாகிகள், தலைமை செயற்குழு - பொதுக்குழு உறுப்பினர்கள், பகுதி, ஒன்றிய, நகர, பேரூர், வட்ட, வார்டு, கிளை கழக செயலாளர்கள்- நிர்வாகிகள், அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், மாவட்ட பிரதிநிதிகள், கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலாளர் மூக்கன் நன்றி கூறினார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:-
தமிழ்நாடு முதலமைச்சர்-கழகத் தலைவரின் சீர்மிகு நல்லாட்சியில் சுமார் ஒன்னேகால் கோடி குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 'கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கி பெண்களின் வாழ்வாதார முன்னேற்றத்திற்கு செயல்வடிவம் கொடுத்து இந்திய ஒன்றியத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தியும், தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக மாநில முதலமைச்சர்களில் முதல் இடத்தை தக்க வைத்தும் முன்மாதிரி முதலமைச்சராகத் திகழும் கழகத் தலைவர்- மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அரசியல் ஆசானாகவும், திராவிட இயக்கத்தின் தீரராகவும், தமிழ்நாடு மக்களின் முன்னேற்றத்திற்கு தனது வாழ்நாள் முழுவதும் தமிழ்க் கொடி ஏந்தி போராடியவராகவும், தமிழ்நாடு முதலமைச்சராக ஐந்து முறை பொறுப்பு வகித்தவராகவும், தமிழ்நாட்டை செதுக்கிய நவீன சிற்பியாகவும், அடித்தட்டு மக்களை முன்னேற்றமடைய உழைத்தவருமான முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்கிட ஒன்றிய அரசை வலியுறுத்தி ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித் திட்டத்தில் 2024-25ஆம் கல்வியாண்டின் பங்குத்தொகையான ரூ.2152 கோடியை தமிழ்நாடு அரசுக்கு வழங்க மறுத்துள்ளது ஒன்றிய அரசு. அதே வேளையில் தேசிய கல்விக்கொள்கையை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொண்டால்தான் நிதியை விடுவிக்க முடியும் என நிர்பந்தித்து சுமார் பதினைந்தாயிரம் ஆசிரியப் பெருமக்களுக்கும் மேல் மாத ஊதியம் வழங்கிட முடியாத நிலையையும், தமிழ்நாட்டு மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியாத அளவிற்கான சிக்கலையும் ஒன்றிய அரசு உருவாக்க முயற்சிக்கின்றது. எனவே ஒன்றிய அரசு உடனே நிதியினை விடுவிக்க வலியுறுத்தியும், ஒன்றிய பாரதிய ஜனதா ஆட்சியின் இந்த மாநில உரிமைகளைப் பறிக்கும் போக்கை கண்டிப்பது.
தலைமைக் கழகத்தின் அறிவிப்பின்படி முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு 111 நிகழ்ச்சிகள் நடத்தியதற்காகவும், அதில் முத்தாய்ப்பாக திருச்சி தெற்கு மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்றத் தொகுதிகளிலும் டாக்டர் கலைஞர் அவர்களின் திருவுருவச் சிலையினை நிறுவியமைக்காகவும் கழகத் தலைவர் அவர்களின் தலைமையில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் 16.08.2024 அன்று நடைபெற்ற மாவட்டக் கழகச் செயலாளர்கள் கூட்டத்தில் கழக தலைவர் அவர்களால் நமது மாவட்டக் கழகச் செயலாளர் அவர்கள் பாராட்டப்பட்டார். கழகத்தின் மாவட்டச் செயலாளர் என்றால் மாவட்ட ஆட்சியருக்கு சமம்' என்ற புரவலர் அன்பில் அவர்களின் முழக்கத்தை மேற்கோள் காட்டி மாவட்டக் கழகச் செயலாளர் மாண்புமிகு அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களைப்பாராட்டிய கழகத் தலைவர் அவர்களுக்கு நன்றி தெரிவிப்பது.
திருவெறும்பூர் தொகுதியில் ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திற்கு கட்டடம், சிப்காட் தொழிற்கூடம், ஒலிம்பிக் அகாடமி, மாதிரிப்பள்ளி, புதிய பேருந்து நிலையம் புதிய மத்திய சிறைச்சாலை, சூரியூர் ஊராட்சியில் ஜல்லிக்கட்டு மைதானம், தீயணைப்பு நிலையம், பெரிய பாலங்கள், புதிய அரசுக் கட்டடங்கள், புதிய ஆரம்ப சுகாதார நிலையங்கள். புதிய பேருந்து மற்றும் வழித்தடங்கள் நீர்நிலைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் அரசு கலை அறிவியல் கல்லூரி, சிப்காட் தொழிற்கூடம், புதிய கூட்டு குடிநீர் திட்டம், புதிதாக மழைநீர் வடிகால் அமைத்தல், நாற்பது ஆண்டுகால கோரிக்கைகளான இரு பாலங்கள், மணப்பாறை நகரத்தில் சுற்று வட்ட சாலை அமைத்தல், அரசு தொழிற்பயிலகம். புத்தாநத்தம் புதிய சுற்றுவட்ட சாலை, புதிய பேருந்து மற்றும் வழித்தடங்கள், நீர்நிலைகள் தூர்வாருதல் உள்ளிட்ட பணிகளை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது.
திருச்சி கிழக்கு தொகுதியில் புதிய பாதாள சாக்கடை திட்டப்பணிகள் மற்றும் சாலை திட்டங்கள், சார்பதிவாளர் அலுவலகம், காவல் நிலையம், தாலுக்கா அலுவலகம், மாநகராட்சி மண்டல அலுவலகம் என பல்வேறு புதியகட்டடங்கள். புதிய பேருந்துகள் மற்றும் வழித்தடங்கள். சாலை வசதிகள். புதியநகர்புற நலவாழ்வு மையங்கள். புதிய நியாய விலை கடைகள் உள்ளிட்ட எண்ணற்றப் பணிகள் நடந்து வருகிறது.
இந்த மூன்று தொகுதிகளுக்கும் அரசுத் திட்டங்களை வாரி வழங்கிய கழகத் தலைவர், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் இக்கூட்டம் நன்றி தெரிவிக்கின்றது.
மதுரை, கோவை போன்ற பெரு நகரங்களுக்கு அடுத்ததாக திருச்சியில் முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு நூலகம் மற்றும் அறிவுசார் மையம் அமைக்க ஒப்புதல் வழங்கி, திருச்சி மாவட்ட மக்களின்-இளைஞர்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றிக் கொடுத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கும், பரிந்துரை செய்து பெற்றுக்கொடுத்த விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும். இந்நூலகம் அமைவதற்கு முதன்முதலில் முன்னெடுப்பை தொடங்கிய மாவட்டக் கழகச் செயலாளர் துறை சார்ந்த அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்வது.
தனது திராவிட மாடல் ஆட்சியில் புரிந்த சாதனைகளால் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் 100 சதவீதம் வெற்றியைப் பெற்றுக்கொடுத்த கழகத் தலைவர் அவர்களுக்கும், தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தனது ஓயாத உழைப்பினாலும் வழிகாட்டுதலினாலும் நாற்பதுக்கு நாற்பது எனும் வெற்றியை உறுதி செய்த கழக இளைஞரணிச் செயலாளர்-மாண்புமிகு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும், திருச்சி நாடாளுமன்றத் தொகுதி வெற்றிக்கு திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளிலும், கரூர் நாடாளுமன்ற தொகுதி வெற்றிக்கு மணப்பாறை சட்டமன்றத் தொகுதியிலும் பெருவாரியான வாக்குகளைப் பெற்று கொடுத்தமைக்காக திருச்சி தெற்கு மாவட்டக் கழக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும், வாக்காளப் பெருமக்களுக்கும் நன்றி தெரிவித்து கொள்வது.
கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில், கழக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் வழிகாட்டுதலில் 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்று, 'தமிழ்நாடு முழுவதும் 200 தொகுதிகளில் வெற்றி' எனும் கழகத் தலைவர் அவர்களின் இலக்கிற்கு துணை நிற்போம் என உறுதியேற்பது.
மேற்கண்டவை உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu