தேனி தொகுதியில் டிடிவி தினகரனுக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த மனைவி அனுராதா
லோக்சபா தேர்தலில் தேனி தொகுதியில் போட்டியிடும் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரனுக்கு அவரது மனைவி அனுராதா வாக்கு சேகரித்தார்.
தமிழ்நாட்டில் காலந்தோறும் பெண் அரசியல் தலைவர்கள் வலம் வந்து கொண்டுதான் இருக்கின்றனர். தமிழ்நாட்டின் முதல்வர்களாக விஎன் ஜானகி அம்மையார், ஜெயலலிதா ஆகியோர் பதவி வகித்தனர்.
தற்போது தேமுதிக பொதுச்செயலாளராக பிரேமலதா விஜயகாந்த் இருந்து வருகிறார். பாஜகவுடன் இணைக்கப்பட்ட சமத்துவ மக்கள் கட்சியில் முக்கிய பதவி வகித்தவர் நடிகை ராதிகா சரத்குமார். சீமானின் நாம் தமிழர் கட்சியில் அவரது மனைவி கயல்விழி காளிமுத்துவுக்கும் முக்கியத்துவம் தரப்படுவதாகவும் கூறப்பட்டது. லோக்சபா தேர்தல் களத்தில் பெண்கள் வேட்பாளர்களாக களமிறக்கப்பட்டுள்ளனர். இவர்களில் தருமபுரி தொகுதி பாமக வேட்பாளராக களம் காணும் பாமக தலைவர் அன்புமணியின் மனைவி சவுமியா அன்புமணி அரசியலுக்குப் புதியவர். தற்போதைய லோக்சபா தேர்தல் களத்தில் தூத்துக்குடியில் கனிமொழி கருணாநிதி, தென் சென்னையில் தமிழச்சி தங்க பாண்டியன், தமிழிசை சவுந்தரராஜன், கரூரில் ஜோதிமணி என பெண் தலைவர்கள் அனல் பறக்கும் பிரசாரம் செய்து வருகின்றனர். இவர்களுடன் ஜோதியில் இணைந்திருப்பவர் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரனின் மனைவி அனுராதா.
தேனி தொகுதியில் நேற்று டிடிவி தினகரனுக்காக மக்களிடம் வாக்கு சேகரித்தார் அனுராதா. அப்போது, என்னை யார் என தெரிகிறதா? மக்கள் செல்வர் டிடிவி தினகரனின் மனைவிதான் நான்.. தினகரனின் சின்னம் எது தெரியுமா? என அடுக்கடுக்கா ன கேள்விகளை கேட்டபடியே அனுராதா தினகரன் பிரசாரம் செய்தார். அனுராதா அரசியல் களத்தில் புதியவர் என்றாலும் அவரது பிரசார வியூகம் தேனி வாக்காளர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தேனி தொகுதியில் போட்டியிடும் டிடிவி தினகரனின் அமமுக, பாஜக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. இத்தொகுதியில் டிடிவி தினகரனை எதிர்த்து போட்டியிடுபவர் திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச் செல்வன். டிடிவி தினகரன், அதிமுகவில் கலகக் குரல் எழுப்பிய போது அவருக்கு வலது கரமாக இருந்தவர் தங்க தமிழ்ச் செல்வன். இதே தேனி தொகுதி, பெரியகுளம் தொகுதியாக முன்னர் இருந்த போது டிடிவி தினகரன் எம்பியாக வென்றவர் என்பதும் இங்கோ குறிப்பிடத்தக்கது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu