காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதி ஒதுக்கப்பட்டதன் பின்னணி இது தானா?

காங்கிரஸ் கட்சிக்கு திருநெல்வேலி தொகுதி  ஒதுக்கப்பட்டதன் பின்னணி இது தானா?
X
திருநெல்வேலி மாவட்ட திமுகவில் தொடர்ச்சியாக உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், திருநெல்வேலி தொகுதியை காங்கிரசுக்கு திமுக ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

திமுக கூட்டணியில் காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட 10 தொகுதிகளின் பெயர்களை திமுக தலைமை வெளியிட்டுள்ளது. அதன்படி சிவகங்கை, விருதுநகர், திருவள்ளூர் (தனித் தொகுதி) மற்றும் திருநெல்வேலி உள்பட காங்கிரஸ் போட்டியிடும் 10 தொகுதிகள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

இதில், திருநெல்வேலி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரையில் பாஜக சார்பில் அக்கட்சியின் சட்டமன்ற குழு தலைவரும் தற்போதைய திருநெல்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான நயினார் நாகேந்திரன் போட்டியிடப் போவதாகத் தொடர்ந்து தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

வலுவான வேட்பாளர்கள்: சமீபத்தில் பாஜகவில் தனது கட்சியை இணைத்துக் கொண்ட நடிகர் சரத்குமார் மற்றும் தமிழிசை சௌந்தர்ராஜன் உள்ளிட்டோரும் நெல்லை தொகுதியில் களமிறங்க வாய்ப்பு கேட்பதாகவும் கூறப்படுகிறது. எனவே திருநெல்வேலியில் பாஜகவுக்கு எதிராக வலுமையான வேட்பாளர்களைக் களம் இறக்க திமுக கூட்டணி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

அதிலும் குறிப்பாக, நயினார் நாகேந்திரன் கடந்த சட்டமன்ற தேர்தலில் தாமரை சின்னத்தில் போட்டியிட்டு முப்பதாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். எனவே இந்த முறை அவர் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து திமுக சார்பில் வலுவான வேட்பாளர்களைக் களம் இறக்குவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது

திருநெல்வேலி தொகுதியில் தற்போதைய எம்பியாக திமுகவின் ஞான திரவியம் உள்ளார். ஞான திரவியம் செயல்பாடு சரியில்லை என்று நெல்லையில் இருந்தே திமுக தலைமைக்கு புகார் பறந்தது. அதுமட்டும் இன்றி தென்னிந்திய திருச்சபையின் திருநெல்வேலி திருமண்டல பொறுப்பில் இருந்த ஞான திரவியம் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்தன.

குறிப்பாக மதபோதகர் தாக்கப்பட்ட விவகாரத்தில், ஞானதிரவியம் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பின்னர் இவ்விவகாரம் தொடர்பாக ஞானதிரவியத்திடம் இருந்து திமுக தலைமை விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது. இப்படி அடுக்கடுக்கான புகார்கள் எழுந்த நிலையில், அவருக்கு மீண்டும் சீட் கொடுக்க திமுக தலைமை விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது.

அதேசமயம் திமுகவில் தற்போதைய சட்டப்பேரவை தலைவரும் ராதாபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான அப்பாவு தனது மகன் அலெக்ஸ் அப்பாவுக்கு எம்.பி சீட்டு கேட்டு திமுக தலைமைக்கு அழுத்தம் கொடுத்ததாகவும், அதேபோல வள்ளியூர் பகுதியைச் சேர்ந்த பிரபல தனியார் கல்விக் குழுமத்தின் நிறுவனரும் திமுகவின் கிழக்கு மாவட்ட அவை தலைவருமான கிரகாம்பெல் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஏற்கனவே திருநெல்வேலி மாவட்ட திமுகவில் தொடர்ச்சியாக உட்கட்சி பூசல் நிலவி வரும் நிலையில், திருநெல்வேலி தொகுதியை திமுகவிற்கு வழங்கினால் உட்கட்சி பூசல் காரணமாக வெற்றி பாதிக்கப்படும் என்பதால் தற்போது திருநெல்வேலி தொகுதியை காங்கிரசுக்கு திமுக தலைமை ஒதுக்கியதாகக் கூறப்படுகிறது.

காங்கிரஸ் சார்பில் திருநெல்வேலியில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பும் தற்போது அதிகரித்துள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் சார்பில் தற்போதைய சிறுபான்மையினர் நல வாரிய தலைவரான பீட்டர் அல்போன்ஸ் போட்டியிட விருப்பம் தெரிவிப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினர் ரூபி மனோகரனும் திருநெல்வேலி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிடக் கட்சித் தலைமையிடம் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இவர் ஏற்கனவே காங்கிரஸ் கட்சியில் பொருளாளராகவும் பதவி வகித்து வருகிறார். இதுமட்டும் அல்லாது, ரூபி மனோகரன் மாவட்டத்தில் ஓரளவுக்கு மக்கள் மத்தியில் அறியப்பட்டவராக இருந்து வருகிறார். ஆகவே, ரூபி மனோகரனுக்கே காங்கிரஸ் வாய்ப்பு வழங்கும் என கூறப்படுகிறது.

Tags

Next Story
ரயில் முன்பதிவில் மோசடி: பாதுகாப்பு படையினர் தீவிர விசாரணை!