ராஜஸ்தானில் பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? பிரதமர் மோடி கேள்வி

ராஜஸ்தானில் பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? பிரதமர் மோடி கேள்வி

ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி.

ராஜஸ்தான் மாநிலத்தில் பெட்ரோல் விலையை குறைக்காதது ஏன்? என தேர்தல் பிரச்சாரத்தில் பிரதமர் மோடி கேள்வி எழுப்பி உள்ளார்.

ராஜஸ்தான் மாநில சட்டமன்ற தேர்தலில் வருகிற 30ந்தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அங்கு தற்போது அசோக் கெலாட் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆட்சியை தக்க வைக்க காங்கிரஸ் கட்சியும், காங்கிரஸ் ஆட்சியை தேர்தல் மூலம் நீக்கிவிட்டு பாஜக ஆட்சி அமைக்க பிரதமர் மோடி மற்றும் பாரதீய ஜனதா கட்சி தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். தேர்தலுக்கு இன்னும் 10 நாட்களே இருப்பதால் தலைவர்கள் அனல் பறக்க பிரச்சாரம் செய்து வருகிறார்கள்.

அந்த வகையில் இன்று ராஜஸ்தான் மாநிலம் பாலி பகுதியில் நடைபெற்ற ஒரு தேர்தல் பிரச்சார கூட்டத்தில் காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக சாடினார், பிரதமர் மோடி. அப்போது அவர் பேசியதாவது:-

காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் சனாதனத்தை ஒழிக்க துடிக்கின்றன. சனாதனத்தை ஒழிப்பது என்றால் ராஜஸ்தானின் கலாச்சாரத்தையே ஒழிப்பதாகும்.

காங்கிரஸ் கட்சி பெண்களுக்கு எதிரான மன நிலையில் இருக்கின்றது, பட்டியலின மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடைபெறும் போது கண்மூடி கொண்டிருக்கின்றது. பெண்களுக்கு எதிரான குற்றங்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது.

மத்திய அரசு பெட்ரோல் டீசல் விலையை குறைக்க நடவடிக்கை எடுத்தது. அதே போல் மாநில அரசுகள் தங்களது உற்பத்தி வரியை குறைக்க வேண்டும் என வேண்டுகோள் விடப்பட்டது. இதனை ஏற்று பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், ராஜஸ்தானில் மட்டும் விலை குறைக்கப்படவில்லை.

ராஜஸ்தானில் பா.ஜ.க. ஆட்சி அமைந்தவுடன் பெட்ரோல், டீசல் விலை குறைய நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Tags

Next Story