பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டிற்கு வருவது ஏன்? ஸ்டாலின் புது தகவல்
பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின்.
தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர தொடங்கியுள்ளார். பேரிடருக்கு சல்லிக்காசு நிவாரணம் தராமல், பதவியைக் காப்பாற்ற இங்கு ஓடி வருபவரை கண்டு தமிழக மக்கள் ஏமாற மாட்டார்கள் என முதலமைச்சர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
லோக்சபா தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ள நிலையில், பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கு மீண்டும் இன்று வந்துள்ளார். சென்னை நந்தனத்தில் பாஜக பொதுக்கூட்டம் மற்றும் கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஈனுலை திட்டத்தை தொடங்கி வைக்கும் நிகழ்வு ஆகியவற்றில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று தமிழ்நாடு வந்து பேசிவிட்டு சென்றுள்ளார். கடந்த 10 நாட்களில் இரண்டாவது முறையாக மோடி தமிழ்நாடு வந்துள்ளார்.
இந்நிலையில், பிரதமர் மோடி அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வருகை தருவதை விமர்சித்துப் பேசியுள்ளார் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான ஸ்டாலின். மயிலாடுதுறையில், இன்று புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை திறந்து வைத்துப் பல்வேறு புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்துப் பேசினார் முதல்வர் ஸ்டாலின்.
மயிலாடுதுறை மாவட்டம், மன்னம்பந்தலில் நடைபெற்ற அரசு விழாவில், 114 கோடியே 48 இலட்சம் ரூபாய் செலவில் மயிலாடுதுறையில் கட்டப்பட்டுள்ள புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் மயிலாடுதுறை, திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 308 கோடியே 88 லட்சம் ரூபாய் செலவில் 70 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, 88 கோடியே 62 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 40 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். மேலும், பல்வேறு துறைகளின் சார்பில் 12,653 பயனாளிகளுக்கு 143 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்.
அதைத்தொடர்ந்து பேசிய முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-
தேர்தல் வருவதால் பிரதமர் மோடி அடிக்கடி தமிழகம் வர தொடங்கியுள்ளார். வாக்கு மட்டும் போதும் என தேர்தல் நேரத்தில் மட்டும் தமிழ்நாட்டுக்கு வருகிறார் பிரதமர் மோடி. வரட்டும் வேண்டாமென்று சொல்லவில்லை. தமிழ்நாட்டு மக்களின் நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிவிட்டு, தமிழ்நாட்டுக்கு நன்மை செய்துவிட்டு, தமிழ்நாட்டுக்கு வரட்டும்.
தேர்தல் நேரத்தில் மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அல்ல நாங்கள். தமிழகத்தில் அண்மையில் ஏற்பட்ட மழை, வெள்ள இயற்கைப் பேரிடருக்கு 1 பைசா கூட பிரதமர் நிவாரணம் தரவில்லை. தமிழ்நாட்டுக்கு நிதி உதவி செய்யமாட்டார்களாம், ஆனால், தங்கள் பதவியைக் காப்பாற்ற ஆதரவு கேட்டு வருவார்களாம். தமிழ்நாட்டு மக்களின் ஓட்டு மட்டும் போதும், வரிப்பணம் மட்டும் போதும் என நினைக்கிறார்கள். இதைப் பார்த்து மக்கள் ஏமாற மாட்டார்கள். திராவிட மாடல் அரசு பக்கம் மக்கள் எப்போதும் துணை நிற்பார்கள்.
இவ்வாறு தமிழக முதல்வர் ஸ்டாலின் பேசியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu