யார் இந்த துரை வைகோ? திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் பற்றி தெரிஞ்சுக்கோங்க

யார் இந்த துரை வைகோ? திருச்சி தொகுதி மதிமுக வேட்பாளர் பற்றி தெரிஞ்சுக்கோங்க
X

திருச்சி நாடாளுமன்ற தொகுதி ம.தி.மு.க. வேட்பாளர் துரை வைகோ


திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள துரை வைகோ யார் என்பது பற்றி தெரிய வேண்டுமா? தொடர்ந்து படியுங்கள்.

திமுக கூட்டணியில் திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டு உள்ளது. இதற்கான ஒப்பந்தத்தில் நேற்று திமுக தலைவர் முக ஸ்டாலினும், மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் கையெழுத்திட்டுள்ளனர்.


திருச்சி துரை வைகோ

திருச்சி நாடாளுமன்ற தொகுதி மதிமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்ற அறிவிப்பு வெளியானதும் அதன் வேட்பாளர் பெயரும் வெளியே வந்து விட்டது. ஏனென்றால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியை மதிமுகவிற்கு கேட்டு பெறுவதில் கடந்த சில மாதங்களாகவே காய் நகர்த்தி வந்தது என்றால் அதற்கு காரணம் வைகோவின் மகனும் மதிமுக முதன்மை செயலாளருமான துரை வைகோ தான் இங்கு வேட்பாளராக நிற்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு தான் காரணம். இதற்காகவே திருச்சிக்கு துரை வைகோ இரண்டு முறை வந்து தொண்டர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகளின் கருத்துக்களை கேட்டு விட்டு சென்றார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் திமுகவே இன்னும் வேட்பாளர் பட்டியலை வெளியிடாத நிலையில் மதிமுக தனது ஒரே தொகுதிக்கான வேட்பாளரை அறிவித்து இருப்பதால் திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட போகும் முதல் அதிகாரப்பூர்வ வேட்பாளர் என்ற பெருமையையும் துரை வைகோ பெற்று உள்ளார்.


வாரிசு அரசியலா?

துரை வைகோ , மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன், மதிமுகவின் முதன்மை செயலாளர் என்பது தான் எல்லோருக்கும் தெரியும். அவரது அரசியல் பிரவசேம், குடும்ப வாழ்க்கை, அவரது தொழில் பற்றி தெரிய வேண்டுமானால் தொடர்ந்து படிக்கலாம்.

இன்றைய சூழ்நிலையில் லோக்சபா தேர்தலில் போட்டியிடும் பெரும்பாலானவர்கள் அரசியல் தலைவர்களின் வாரிசுகள்தான். அந்த வகையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் லோக்சபா தேர்தலில் தனது வாரிசை களமிறக்கி உள்ளார்.

1972ஆம் ஆண்டு வைகோ- ரோணுகாதேவி தம்பதியின் மகனாக பிறந்தவர் தான் இந்த துரை வைகோ. சென்னையில் பள்ளிப்படிப்பையும் கல்லூரி படிப்பையும் முடித்துள்ளார். எம்பிவும் படித்து உள்ளார்.இவருக்கு கீதா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

தொழில் அதிபர்

ஐடிசி நிறுவனத்தில் புகையிலை பொருட்களை ஏஜென்சி எடுத்து தொழில் செய்து வருகிறார். அதற்கு பலரும் விமர்சனங்களை முன் வைத்த நிலையில், ஆமாம். உண்மை தான். அவர் தான் சொந்தத் திறமையில் அங்கே தொழில் செய்து கொண்டிருக்கின்றார். எனக்கும் அதற்கும் தொடர்பு இல்லை என்று கூறினார் வைகோ.

வி ரியாலிட்டி எல்எல்பி என்றொரு நிறுவனத்தை நடத்தி வருகிறார் துரை வைகோ. கட்டுமானத்துறை தொடர்பான பிசினஸ் செய்து கொண்டிருக்கின்றார். பரம்பரை சொத்துக்கள் அதிகம் உண்டு. பிறந்ததிலிருந்தே தங்க ஸ்பூன் என்று சொல்லக்கூடிய வகையில் வசதியாக வளர்ந்த இளைஞர் அதன் காரணமாகவே அரசியல் ஆர்வம் இன்றி இருந்தார். என் மகன் அரசியலுக்கு வருவதை நான் துளியும் விரும்பவில்லை. ஆனால் தொண்டர்கள்தான் இயக்கம்.. அவர்கள் விரும்பும் முடிவுக்கு கட்டுப்படுவேன் என்றார். இதையடுத்து மதிமுகவின் பல்வேறு மாவட்ட அமைப்புகளில் துரை வையாபுரி என்கிற துரை வைகோவுக்கு கட்சியில் பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இது கட்சியினர் விருப்பம்

தமிழக அரசியல் வரலாற்றில் மகனுக்கு பட்டாபிஷேகம் என்ற வார்த்தையை பல்லாயிரம் முறை பிரயோகித்தவர் வைகோ. கருணாநிதியின் வாரிசு அரசியலுக்கு எதிராகவே மதிமுக என்கிற தனி அரசியல் கட்சியை தொடங்கியவர் வைகோ. என் குடும்பத்தினர் அரசியலுக்கே வரமாட்டார்கள்; மதிமுகவின் தலைமையகமான தாயகத்தின் பக்கம் கூட வரமாட்டார்கள் என்று சொன்னவர் வைகோ. அவர் சொன்னது போலவே துரை வைகோவும் தாயகம் பக்கம் அடிக்கடி சென்றதில்லை. கடந்த 2016ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் மறைமுகமாகச் செயல்பட்டாலும், மதிமுகவின் இணைய அணியில் இருந்தாலும் முழுமையான ஈடுபாடு காட்டாத அளவுக்குத்தான் இவரின் அரசியல் ஆர்வம் இருந்தது. துரை வையாபுரியாக இருந்தவர் படிப்படியாக துரை வைகோவாக மாறினார். அரசியல் எண்ணம் படிப்படியாக துளிர் விட்டது. மதிமுகவில் ஒரு அரசியல் பதவி தர வேண்டும் என்று தென் மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

அரசியல் பணி

இந்திய நாட்டின் அரசியல் வரலாற்றில் தியாக தழும்புகளை ஏற்று மிசா, தடா போன்ற அடக்குமுறை சட்டங்களை சந்தித்து குடும்ப சுகபோகங்களை மறந்து தமிழினம், தமிழ் மொழிக்காக அல்லும் பகலும் உழைத்து வரும் திராவிட இயக்கத்து போர் வாள் வைகோவின் புதல்வர் துரை வைகோ அவர்களை உரிய இடத்தில் வைத்து மதிமுகவில் பணியாற்றிட வாய்ப்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கொரோனா பேரிடர் காலத்தில் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க நண்பர்கள் குழுவுடன் இணைந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை தங்களது வாகனங்களில் அழைத்துச் சென்றது,கொரோனா 2வது அலையின்போது அவசர சிகிச்சை மையத்துக்கு மருத்துவக் குழுவை அழைத்து சென்றது என மக்களின் உயிர்காக்கும் பணியில் அர்ப்பணித்து கொண்ட துரை.வைகோ, மக்களிடம் எளிதாக அறிமுகமானார். தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கு முன்பிருந்தே மதிமுக பொதுச்செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி, பல மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வந்தார். மதிமுக தொண்டர்களின் வீடுகளில் நடக்கும் சுப நிகழ்ச்சிகள், துக்க காரியங்கள் என அனைத்திலும் அவர் பங்கேற்றார்.

வைகோ அளித்த விளக்கம்

2021ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களிக்க சென்ற வைகோ, 'எனது மகன் அரசியலுக்கு வருவதில் துளிகூட விருப்பமில்லை. அவர், அரசியலுக்கு வருவது, மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் முடிவு செய்யப்படும். அந்த முடிவுக்கு நான் கட்டுப்படுவேன்' எனக் கூறினார். இதனையடுத்து கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசியலுக்கு தனது மகனை கொண்டு வந்தார் வைகோ. மதிமுகவின் தலைமை நிலைய செயலாளராக நியமனம் செய்யப்பட்ட துரை வைகோ, மதிமுகவில் முதன்மைச் செயலாளர் ஆனார். இது வாரிசு அரசியலே இல்லை. கட்சி தொண்டர்கள் விருப்பப்பட்டார்கள். நடந்துள்ளது. 1993 நிலைமை வேறு.. இன்றைய நிலைமை வேறு என்று சொன்னார் வைகோ. வாரிசு அரசியல் என்பது பொறுப்பிலே வாரிசை திணிப்பது, ஆனால் துரை வைகோ தொண்டர்கள் விருப்பப்படி நியமிக்கப்பட்டிருக்கிறார். எனவே வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று சொன்னார் வைகோ. துரை வைகோ கட்சி பணி ஆற்றுவதை இரண்டு ஆண்டுகளாக தடுத்து வைத்தேன். எனக்கு விருப்பம் இல்லாததால் தடுத்து வைத்தேன். ஆனால் தொண்டர்கள் அவரை பற்றிக்கொண்டார்கள். நான் எதிர்பார்த்ததைவிட தொண்டர்களை வசீகரிக்கக்கூடிய திறமை துரை வைகோவிற்கு இருக்கிறது. மனிதாபிமானம் இருக்கிறது. பொதுவாழ்வில் வெற்றி பெற தேவையான அனைத்து குணமும் அவருக்கு இருக்கிறது. எனவே துரை வைகோ வெல்வார் என்ற நம்பிக்கை உள்ளது என்று கூறியுள்ளார் வைகோ.


வெளியூர் சென்டிமெண்ட்

திருச்சி லோக்சபா தேர்தலை பொறுத்தவரை இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் வென்றவர்களில் செல்வராஜ், அடைக்கலராஜ், குமார் மூவர் மட்டுமே மண்ணின் மைந்தர்கள். மற்றபடி அனந்த நம்பியார் ஆரம்பித்து திருநாவுக்கரசர் வரை அனைவருமே வெளியூர் காரர்கள் தான். வெளியூர் காரர் என்றால் எளிதாக வெற்றி பெறலாம் என்பதே திருச்சி தொகுதியின் கடந்த கால வரலாறாக இருந்து வருகிறது.

அந்த வகையில் நெல்லை மாவட்டத்தைப் பூர்வீகமாகக்கொண்ட வைகோவின் புதல்வரான தானும் திருச்சி தொகுதியில் நின்றால் சென்டிமென்ட்டாக வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் பிரகாசமாக இருப்பதாகக் கருதி களமிறங்குகிறார் துரை வைகோ. துரை வைகோவை வெற்றி பெற வைப்பது திமுகவின் முதன்மை செயலாளரும்,அமைச்சருமான கே.என். நேருவின் கையில் தான் இருக்கிறது. அவர் மனது வைத்தால் துரை வைகோவின் வெற்றி நிச்சயம் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள். ஏனென்றால் திருச்சி மாவட்டத்தில் அனைத்து சட்டமன்ற தொகுதிகளும் தற்போது திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் கையில் தான் இருக்கிறது என்பது கூடுதல் தகவல் ஆகும்.

Tags

Next Story
மறியலில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 640 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு