மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் யார்? முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி புது தகவல்

மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் யார்? முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி புது தகவல்
X
முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி.
மணிப்பூர் கலவரத்திற்கு காரணம் யார்? என்பது பற்றி முன்னாள் எம்எல்ஏ விஜயதரணி புது தகவல் தெரிவித்து உள்ளார்.

பாஜகவில் தேர்தல் முடிந்ததும் தனது அடுத்த கட்ட அரசியல் பயணத்திற்கான அறிவிப்பு வரும் என கூறி இருக்கிறார் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாஜகவில் இணைந்த விஜயதரணி. மேலும் பிரதமர் மோடி குறித்தும் மணிப்பூர் கலவரம் குறித்தும் அவர் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.

விளவங்கோடு சட்டமன்ற உறுப்பினராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்ட விஜயதரணி கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் போட்டியிட விருப்பப்பட்டார்.

ஆனால் காங்கிரஸ் தலைமை அதற்கு உடன்படவில்லை. இதையடுத்து அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாஜகவில் இணைந்தார். அவருக்கு நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கு கூட அவருக்கு வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருப்பதாக தகவல் வெளியான நிலையில் பாஜகவில் தனது நிலை என்ன என்பது குறித்து பேசி இருக்கிறார். இது தொடர்பாக தனியார் தொலைக்காட்சிக்கு விஜய தரணி அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

மக்களவைக்கான நாடாளுமன்ற பாஜக வேட்பாளர் பட்டியலில் எனது பெயர் இல்லை. விளவங்கோடு சட்டசபைக்கான வேட்பாளர் பட்டியலிலும் என் பெயர் இல்லை. நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடலாம் என நான் இருந்தேன். வாய்ப்பு இல்லை: ஆனால் சட்டசபை தேர்தலில் போட்டியிட எனக்கு விருப்பமில்லை. ஏற்கனவே மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராக இருந்ததால் அடுத்த தலைமுறைக்கு குறிப்பாக பெண்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் என்ற நோக்கத்திலேயே நான் போட்டியிடவில்லை. தற்போதும் பெண்களுக்கே தொகுதி ஒதுக்கப்பட்டிருக்கும் நிலையில் எனக்கு மகிழ்ச்சிதான். விளவங்கோடு தொகுதியில் பாஜக நிச்சயமாக வெற்றி பெறும். பிரதமர் மோடி மீது களங்கம் கற்பிக்க வேண்டும் என்பதை பலர் அது எண்ணமாக இருக்கிறது. அதற்காகத்தான் தேவையில்லாமல் விவகாரங்களை கிளப்பி வருகின்றனர். குறிப்பாக மணிப்பூரில் கலவரம் நடந்தது குறித்து பிரதமர் தெளிவாக இருக்கிறது.

அங்கு நடந்த விஷயங்கள் பிரதமரின் கவனத்தில் உள்ளது. அங்கு நிறைய தூண்டுதல்கள் உள்ளது. திட்டமிட்டு அங்கு பிரச்சினை நடக்கிறது. பிரதமர் சென்றால் பிரச்சினை வரும். ஆறுதல் சொல்வதில் நம்பிக்கை இல்லாத பிரதமர் தீர்வை நோக்கி பயணிக்கிறார். மணிப்பூரில் கலவரம் வெடித்த நிலையில் நிறைய பேர் அங்கு ஊடுருவி உள்ளனர். தமிழ்நாட்டில் இருந்து கூட அங்கு ஊடுருவி இருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. திட்டமிட்டு அவர்கள் கலவரத்தை தூண்டியுள்ளனர். இதற்கான ஆதரங்கள் விரைவில் வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags

Next Story