சமாளிக்க முடியாத பழைய மாணவர்கள் யார்? ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்

சமாளிக்க முடியாத பழைய மாணவர்கள் யார்? ஸ்டாலினுக்கு ஷாக் கொடுத்த ரஜினிகாந்த்
X

கலைஞர் எனும் தாய் நூல் வெளியீட்டு விழாவில் பேசிய நடிகர் ரஜினிகாந்த்.

சமாளிக்க முடியாத பழைய மாணவர்கள் யார்? என ஸ்டாலினுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் நூல் வெளியீட்டு விழாவில் ரஜினி காந்த் பேசி உள்ளார்.

கலைஞர் எனும் தாய் என்கிற தலைப்பில் அமைச்சர் எ. வ. வேலு எழுதிய புத்தகத்தின் வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடந்தது. அமைச்சர் எ.வ. வேலு எழுதிய இந்த புத்தகத்தை முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியிட நடிகர் ரஜினிகாந்த் பெற்றுக் கொண்டார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் ஸ்டாலின் கருணாநிதி தனக்கு தந்தை மட்டும் அல்ல தாயும் ஆக இருந்தார் என வானளாவ புகழ்ந்தார். தந்தை மகனைப் புகழ்வதில் ஆச்சரியம் அல்ல. ஆனால் இந்த விழாவில் பங்கேற்று சிறப்புரையாற்றிய நடிகர் ரஜினிகாந்த் பேசியது தான் இப்போது ஹைலைட்டாக உள்ளது. அப்படி என்னதான் ரஜினிகாந்த் இந்த விழாவில் பேசிவிட்டார் என பார்ப்போமா?

ஒரு பள்ளியில் ஆசிரியர்கள் புதிய மாணவர்களை எளிதாக சமாளித்து விடுவார்கள். ஆனால் பழைய மாணவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயம் கிடையாது. இங்கு ஏகப்பட்ட பழைய மாணவர்கள் இருக்கிறார்கள். அதுவும் அவர்கள் சாதாரணமானவர்களும் கிடையாது. அசாதாரண மானவர்கள் அனைவரும் நல்ல ரேங்க் வாங்கிவிட்டு வகுப்பறையை விட்டு செல்ல மாட்டேன் என்று அமர்ந்துள்ளார்கள்.

கருணாநிதி உடன் இருந்தவர்களை சிறுவயதில் இருந்து பார்த்து வந்துவிட்டு அவர்களை சமாளிப்பது என்பது சாதாரண விஷயமா? அமைச்சர் துரைமுருகன் கருணாநிதி கண்ணிலேயே விரல் விட்டு ஆட்டியவர். அவரிடம் ஏதாவது விஷயத்தை செய்யப் போகிறோம் என்று சொன்னால் சந்தோஷம் என்பார் நன்றாக இருக்கிறது என்று சந்தோசம் என்கிறாரா? அல்லது ஏன் இப்படி செய்கிறீர்கள் என்று கூறுகிறாரா என்ன ஒன்றும் புரியாது. இதற்காக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு தலை வணங்குகிறேன்.

இது தான் ரஜினிகாந்த் பேசியதில் ஹைலைட் ஆன பாய்ண்ட்ஸ். இது தவிர கருணாநிதி போல் ஒரு தலைவர் உலகில் இல்லை. அவரது பிறந்த நாள் விழாவை இப்படி யாரும் கொண்டாடியதும் இல்லை என்றெல்லாம் புகழ்ந்து தள்ளினார்.

ரஜினிகாந்த் இப்படி கூறியிருப்பதற்கு ஸ்டாலின் பதில் பேசும்போது ரஜினி என்னைவிட வயதில் ஒரு வயது மூத்தவர். ஆதலால் அவர் சொல்வதை நான் அறிவுரையாக ஏற்றுக் கொள்கிறேன். உஷாராக இருப்பேன் என்று பதில் அளித்துள்ளார்.

இந்த விழாவில் அரசியல் பேசப்பட்டு இருக்கிறது. அதுவும் ரஜினிகாந்த் பேசுகிறார் என்றால் அது நிச்சயமாக பல அர்த்தங்களை உண்டு பண்ணும். அவர் எப்போதுமே ஒரு முறை சொன்னால் 100 தடவை சொல்வது போல் என்று சினிமாவில் வரும் வசனம் பாணியில் அவர் பேசும் வார்த்தைகள் ஒவ்வொன்றுக்கும் 100 அர்த்தங்கள் வரும்.

இந்த விழாவிலும் அவர் பேசியதை அப்படித்தான் அரசியல் நோக்கர்களால் எடுத்துக் கொள்ளப்பட்டு இருக்கிறது. அதாவது பழைய மாணவர்கள் என அவர் குறிப்பிட்டது துரைமுருகன், பொன்முடி, நேரு போன்றவர்களை என எடுத்துக் கொள்ளலாம் .அவர்கள் நல்ல ரேங்க் பெற்று இருக்கிறார்கள் வகுப்பை விட்டு போகவும் மாட்டார்கள் என்றால் அவர்கள் ஆட்சியை விட்டு கட்சி பணிக்கு செல்ல வேண்டும் என அவர் நினைப்பது போல் பூடகமாக பேசி இருக்கிறார்.

மேலும் துரைமுருகன் ஏற்கனவே துணை முதல்வர் பதவி பற்றி பேசும்போது துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள் என்று கூறியவர். ஆதலால் இந்த சீனியர்களை முதல்வர் ஸ்டாலின் எப்படி சமாளிக்க போகிறாரோ என்கிற பாணியில் தான் அவர் இப்படி பேசி இருக்கிறார். இது ஒரு வகையில் ஸ்டாலினுக்கு ஒரு ஷாக் கொடுக்கும் வகையில் அமைந்துள்ளது.

ஏனென்றால் துணை முதலமைச்சர் பதவி உதயநிதி ஸ்டாலினுக்கு கொடுக்கப்படும் என்று கடந்த ஓர் ஆண்டுகளுக்கும் மேலாகவே பேசப்பட்டு வருகிறது.ஆனால் அது இன்று வரை நடைமுறைக்கு வரவில்லை. அதற்கு காரணம் இந்த பழைய மாணவர்கள் பிரச்சனை தான். அதைத்தான் ரஜினிகாந்த் வெளிப்படையாக பேசி போட்டு உடைத்து இருக்கிறார். எப்படியோ துணை முதல்வர் பதவி பழைய மாணவர் ரூபத்தில் ரஜினி பேசும் அளவிற்கு இப்போது பேசு பொருளாக ஆக்கப்பட்டு இருக்கிறது என்பது மட்டுமே நிதர்சனமான உண்மை.

Tags

Next Story
ஈரோடு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: கூகுள் நிறுவனத்தின் உதவியுடன் குற்றவாளியை கண்டறியும் முயற்சி