கூட்டணியில் சேர்த்து தே.மு.தி.க.வின் ஓட்டு வங்கியை அறுவடை செய்ய போகும் கட்சி எது?

கூட்டணியில் சேர்த்து தே.மு.தி.க.வின்  ஓட்டு வங்கியை அறுவடை செய்ய போகும் கட்சி எது?
X

தேர்தல் பிரச்சாரத்தில் விஜயகாந்த் (கோப்பு படம்).

கூட்டணியில் சேர்த்து தே.மு.தி.க.வின் ஓட்டு வங்கியை அறுவடை செய்ய போகும் கட்சி எது என்ற கேள்வி எழுந்துள்ளது.

சினிமாவில் ஜொலித்துக் கொண்டிருந்த காலகட்டத்திலேயே, அரசியலுக்கும் தெளிவாக கட்டமைத்து, பட்டி தொட்டி எங்கும், ரசிகர் மன்ற கிளைகளை ஏற்படுத்தி, நலத் திட்ட உதவிகளை வழங்கி அரசியலை நோக்கி நடைபோட்டார். திரைப்படங்களிலும் அரசியல் வசனங்களைப் பேசி, தனது அரசியல் வருகைக்கான சிக்னல்களை கொடுத்துக் கொண்டிருந்தார். ரசிகர்களும், அதற்குத் தயாராக, களத்தில் வேலைகளைச் செய்தனர்.

தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற பெயரில் 2015 செப்டம்பர் 14ஆம் தேதி கட்சியைத் தொடங்கினார் நடிகர் விஜயகாந்த். மதுரையில் கட்சி தொடக்க விழா பிரமாண்டமாக நடந்தது. சிவப்பு கருப்பு கொடியின் மையத்தில் மஞ்சள் வட்டத்திற்குள் தீபச்சுடர் இருப்பது போல் கட்சியின் கொடி வடிவமைக்கப்பட்டது. திமுக, அதிமுக என்ற இருபெரும் திராவிடக் கட்சிகளுக்கு மாற்றாக மற்றொரு திராவிடக் கட்சியாக தேமுதிக அரசியல் களத்தில் இறங்கியது. அதேசமயம், கட்சி பெயரில் திராவிடத்தையும், தேசியத்தையும் வைத்தார் விஜயகாந்த். தேசியம், திராவிடம் என இரண்டையும் முதல் முறையாக கட்சி பெயரில் வைத்ததே அப்போது விஜயகாந்த்தின் அரசியல் என்ன என்ற விவாதங்களைக் கிளப்பியது. ஊழல் ஒழிப்பு என்பதையே முன்னிலைப்படுத்தி அப்போது பேசினார் விஜயகாந்த்.

2006ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் உள்ள 234 தொகுதிகளில் 232 தொகுதிகளில் முரசு சின்னத்திலும், கடையநல்லூர், திருநெல்வேலி தொகுதிகளில் மட்டும் மோதிரம் சின்னத்திலும் அக்கட்சி போட்டியிட்டது. விருத்தாசலம் தொகுதியில் போட்டியிட்ட விஜயகாந்த் அக்கட்சியின் முதல் எம்.எல்.ஏ.வாக வென்று சட்டமன்றத்திற்கு சென்றார். அந்த தேர்தலில் 8.4 சதவீத வாக்குகளை தே.மு.தி.க. பெற்று இருந்தது.

தே.மு.தி.க. சார்பில் போட்டியிட்டவர்களில் விஜயகாந்த், பண்ருட்டி ராமச்சந்திரன் தவிர வேறு யாரும் மக்கள் மத்தியில் அறிமுகம் இல்லாதவர்கள். அப்படியும், தே.மு.தி.க. பெற்ற 8.45 சதவீத வாக்குகள், திமுக, அ.தி.மு.க. மட்டுமல்லாது, பா.ம.க. உள்ளிட்ட கட்சிகளையும் மிரள வைத்தது. தி.மு.க. அந்த தேர்தலில் பெரும்பான்மை பெறாமல் போனதற்கு காரணமே தே.மு.தி.க .பிரித்த ஓட்டுகள் தான் எனப் பேசப்பட்டது. 2009ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும் யாருடனும் கூட்டணி வைக்காமல் தமிழ்நாடு, புதுச்சேரி உள்ளிட்ட 40 தொகுதிகளிலும் போட்டியிட்ட தே.மு.தி.க, அனைத்து தொகுதிகளிலும் தோல்வி அடைந்திருந்தாலும் 10.45 சதவீத வாக்குகளை பெற்று அரசியல் கட்சிகளின் கவனத்தை ஈர்த்து இருந்தது.

2011 சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. கூட்டணி அமைத்தது 41 தொகுதிகளில் போட்டியிட்டு 29 தொகுதிகளை வென்று பிரதான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. மொத்தம் பதிவான வாக்குகளில் 7.9 சதவிகித வாக்குகள் தே.மு.தி.கவுக்கு கிடைத்து இருந்தன. கட்சி தொடங்கிய ஏழே ஆண்டுகளில் எதிர்க்கட்சித் தலைவரானார் விஜயகாந்த்.

பின்னர் அ.தி.மு.க.வுடன் சட்டமன்றத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கூட்டணியில் இருந்து அக்கட்சி விலகியது. சட்டப்பேரவையில் முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா முன்னிலையில் விஜயகாந்த் நாக்கை துருத்திய சம்பவம் பெரும் சர்ச்சைக்குள்ளானது. தேமுதிகவை சேர்ந்த சில எம்.எல்.ஏக்கள் ஜெயலலிதாவை சந்தித்து ஆதரவு அளித்தனர். இது விஜயகாந்த்துக்கு நெருக்கடியானது. 2014 நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்டது தேமுதிக. அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி வாய்ப்பை இழந்த அதன் வாக்கு வங்கி 5.1 சதவீதமாக குறைந்தது. அதுவரை ஏற்றம் மட்டுமே இருந்த தே.மு.தி.க.வில் முதல் முறையாக சரிவு ஏற்பட்டது. எனினும், 14 தொகுதிகளில் போட்டியிட்டதில் சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் ஒன்றரை லட்சம் வாக்குகள் தே.மு.தி.க.வுக்கு கிடைத்தன.

2016 சட்டமன்றத் தேர்தலை மக்கள் நலக் கூட்டணி உடன் இணைந்து எதிர்கொண்டது தேமுதிக. இந்தக் கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளராக விஜயகாந்த் அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலின்போது, திமுக, அதிமுக என இரு கட்சிகளாலும் கடுமையாக குறி வைக்கப்பட்டார் விஜயகாந்த். இந்தக் கூட்டணி போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி வாய்ப்பை இழந்தது அதன் வாக்கு வங்கி 2.4 சதவிகிதமாக குறைந்தது. தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டார்.

2019ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க, அ.தி.மு.க கட்சிகளுடன் இணைந்து 4 தொகுதிகளில் தேமுதிக போட்டியிட்டு, அவற்றில் 2 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. வாக்கு சதவீதம் 2.16 ஆக மேலும் குறைந்தது. 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. உடன் தொகுதிப் பங்கீட்டில் உடன்படாததால் அக்கட்சி தனித்து போட்டியிடுவதாக அறிவித்தது. பின்னர் டிடிவி தினகரனின் அமமுக கட்சியுடன் இணைந்து 60 தொகுதிகளில் போட்டியிட்ட அக்கட்சி அனைத்து தொகுதிகளிலும் வெற்றி வாப்பை இழந்தது. தேமுதிகவின் வாக்கு வங்கி 0.45 சதவீதமாக குறைந்தது. போட்டியிட்ட முதல் தேர்தலில் 8.45 சதவீத வாக்குகளைப் பெற்ற கட்சி, அடுத்த 15 ஆண்டுகளில் கடுமையான வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. விஜயகாந்தின் உடல் நலக்குறைவு, முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சியை விட்டு வெளியேறியது, தமிழக அரசியல் களச் சூழலில் ஏற்பட்ட மாற்றங்கள், தே.மு.தி.க.வை அதலபாதாளத்திற்குத் தள்ளியுள்ளன.

தே.மு.தி.க.விற்கு இத்தனை ஆண்டு கால தேர்தல்களில் வாக்களித்தவர்கள் அனைவரும், விஜயகாந்த்தை நம்பி மட்டுமே வாக்களித்தவர்கள். அதன் காரணமாகவே, விஜயகாந்த், உடல்நிலை குன்றிப்போன பிறகு நடந்த தேர்தல்களில் அக்கட்சி கடுமையான வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. விஜயகாந்த் மறைவுக்குப் பிறகு, தற்போது கட்சிக்குத் தலைமையேற்றிருக்கும் பிரேமலதாவால், அந்த வாக்குகளை தக்க வைக்க முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. மேலும் ஒவ்வொரு தொகுதியிலும் தேமுதிகவிற்கு என்று வாக்கு வங்கி உள்ளது. விஜயகாந்த் மறைவினால் அந்த வாக்கு வங்கியானது இனி அனுதாப வாக்கு வங்கியாக மாறும் என்பதால் தேமுதிகவை கூட்டணயில் சேர்த்து அதனை அறுவடை செய்ய போகும் கட்சி எது என்பது தான் தற்போது எழுந்துள்ள கேள்வி.

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது