விஜய் யார் வாக்குகளை பிரிப்பார்? யார் வாக்களிப்பார்கள்? கலக்கத்தில் கட்சிகள்
நடிகர் விஜய் புதிதாக தொடங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகம் எந்த கட்சியின் வாக்குகளை பிரிக்கும், அவருக்கு யார் வாக்களிப்பார்கள் என்ற கேள்விகளுக்கு விடை இல்லாமல் அரசியல் கட்சிகள் கலக்கத்தில் உள்ளன.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற பெயரில் புதிய அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரது இந்த கட்சியானது ௨௦௨௬ தமிழக சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிடும் என்று அவரே அறிவித்து விட்டாலும் அவரது அரசியல் பிரவேசம் தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளன.
விஜய் எந்த கட்சியின் வாக்குகளை பிரிப்பார்? விஜய் கட்சிக்கு யார் வாக்களிப்பார்கள், விஜயால் முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்று தமிழக முதலமைச்சராக வர முடியுமா? என்கிற அடுக்கடுக்கான கேள்விகளுக்கு இந்த கட்டுரையில் பதில் கிடைக்கும்.
இது பற்றித் தேர்தல் வெற்றி தோல்விகள் குறித்து 25 ஆண்டுகளாகக் களத்தில் சர்வே எடுத்து அனுபவம் பெற்ற திருநாவுக்கரசு சில விசயங்களை முன்வைத்துள்ளார். இவர் லயோலா கல்லூரி சார்பாக எடுக்கப்படும் கருத்துக் கணிப்புக் குழுவில் இயங்கியவர். இப்போது ஐபிடிஎஸ் என ஒரு தனி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.
அவரது கருத்து கணிப்பு கூறுவது என்ன என்பதை இனி பார்ப்போமா?
"2026 ல் விஜய் தமிழ்நாட்டின் முதல்வராக வரமுடியாது. அவரது கட்சி 2026 தேர்தலில் தமிழ்நாட்டில் உள்ள வெற்றிடத்தை நிரப்பக் கூடிய கட்சியாக உருவெடுக்காது. அவரது அரசியல் வருகையை யார் எதிர்பார்த்து இருந்தார்கள் என்றால், அவரது ரசிகர்கள்தான். அதைவிட்டால் தமிழ்நாட்டில் 30 வயதுக்குக் கீழாக உள்ள பெண்கள் விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்று விரும்புகிறார்கள்.
அவர் கழகம் என்ற சொல்லைக் கட்சிக்குப் பயன்படுத்தியதே தவறு. அதன் மூலம் அவர் திராவிடக் கட்சிகளின் வரிசையில் சேர்ந்துவிட்டார். அவர் அந்த வார்த்தைக்குப் பதிலாக புதியதாக ஏதாவது யோசித்திருக்க வேண்டும். கழகம் என்று சொல்லிவிட்டாலே அவர் திமுக, அதிக வரிசையில் நின்றுவிடுகிறார். அவர்களை எதிர்க்காமல் கட்சியை வேறு திசையில் எப்படி நடத்த முடியும்
இன்று ஊழல் பற்றி சினிமாவில் பேசலாம். அரசியலில் அந்தக் கொள்கை பெரிதாக எடுபடாது. விஜய் ரசிகர் கட்சிக்குச் செலவழிக்கிறான் என்றால் எப்படிச் செலவழிப்பான்? சொந்த காசை போட்டு கட்சிக்கு உழைப்பானா? ஆக, அந்த ஊழல் எதிர்ப்பு என்பது கட்சிக்குள்ளாகவே எடுபடாது. அவர் தவறான தருணத்தில் கட்சியைத் தொடங்கி உள்ளார். இங்கே ஏற்கெனவே ஒவ்வொரு கட்சிக்கும் என ஒரு வாக்கு வங்கி உள்ளது. சீமானுக்கு என்று ஒரு வாக்குவங்கி உள்ளது. அதைப்போல் அண்ணாமலை வருகைக்குப் பின் பாஜகவுக்கும் வாக்காளர்கள் உள்ளனர். அதைப்போல் அதிமுக, திமுகவுக்கு என்று பலமான வாக்கு வங்கிகள் உள்ளன. இதில் யார்வாக்கு வங்கியை காலி செய்வார் விஜய்?
சிலர் சீமான் வாக்குகள் விஜய்க்குப் போகும் என்கிறார்கள். நிச்சயம் போகாத. சீமான் ஒரு சித்தாந்த அரசியலை முன்னெடுத்து அதற்கான இளைஞர்களை தன் பக்கம் இழுத்து வைத்துள்ளார். ஒரு காலத்தில் 'என் உயிரினும் மேலான உடன்பிறப்புகள்' என்று முன்னாள் திமுக தலைவர் மு.கருணாநிதி சொன்னாலே திமுக தொண்டர்கள் உணர்ச்சிவசப்படுவார்கள். அதைப்போலச் சீமான் பேச்சுக்காக அவரது கட்சியில் பல ஆயிரக்கணக்கான இளைஞர்கள் உள்ளனர். அவர்களை எப்படி விஜய் ஈர்ப்பார்? அது முடியவே முடியாது.
இன்றைக்குச் சீமானைப் போலவே நாம் தமிழர் கட்சியில் 1000 சீமான்கள் உருவாகிவிட்டனர். அவர்கள் அனைவரும் சீமானின் வழித்தோன்றல்கள். அவர்கள் விஜய் பக்கம் வரமாட்டார்கள். அது தவறான கணிப்பு. தமிழ்நாட்டில் ஆறரைக் கோடி வாக்காளர்கள் உள்ளன. இதில் ஏற்கெனவே கட்சி ரீதியாகப் பிரிந்துள்ளவர்கள் இருக்கிறார்கள். இப்படி 80% வாக்குகள் கட்சி ரீதியாக முன்பே பிரிந்துள்ளன. அதில் 20% பேர்தான் தனியே கட்சி சார்பு இல்லாமல் இருக்கிறார்கள். புதிய தலைமுறை வாக்காளர்களில் பல நடிகர்களின் ரசிகர்கள் உள்ளன. அஜித், விஜய், சூர்யா, ரஜினி என்று தனித்தனியே ரசிகர்கள் பிரிந்துள்ளனர்.
அப்போதும் கூட பெரிய அளவுக்கு விஜய்யின் கட்சிக்குச் சீட்டுகள் கிடைக்காது. விஜய் தொடங்கி உள்ள கட்சி, இன்னும் ஆறு மாதங்கள் வரை பெரிய அளவில் ஆக்டிவ் ஆக இருக்காது. நாடாளுமன்றத் தேர்தல் முடிந்து ஒரு சமநிலை வந்த பின் கட்சிப் பணிகளை விஜய் தொடங்குவார். அதற்கு வருகின்ற ஜூன் மாதம் வரை ஆகிவிடும். இன்றைக்கு உள்ள நிலைமையை வைத்து ஆராய்ந்தால், மூன்று சதவீத வாக்குகள் வரை மட்டுமே அவரது கட்சி பெறலாம். அதுவும் ரசிகர்கள் ஓட்டுதான். எங்களது கணிப்பின்படி விஜய்க்குத் தமிழ்நாட்டில் அரசியல் எதிர்காலம் பிரகாசமாக இல்லை.
ஒரு கட்சி ஒரு தேர்தலைச் சந்திக்கிறது என்றால், அதற்கு சுமார் குறைந்தது 5 ஆயிரம் கோடி ரூபாய் தேவை. அந்தளவுக்குப் பணபலம் உள்ளவரா விஜய்? அவருக்கு யார் செலவழிப்பார்கள்? அவருக்கு உதவப் போகும் அந்தப் பணக்காரர்கள் யார்? அவர் பாஜக பக்கம் இல்லை. திமுக பக்கம் இல்லை. அதிமுக பக்கமும் இல்ல. அப்படி என்றால் இவருக்குப் பின்னால் உள்ள பண முதலைகள் யார்? அதை முடிவு செய்யாமல் இவரது வெற்றியை முடிவு செய்ய முடியாது என்கிறார்கள் இந்த கருத்து கணிப்பு குழுவினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu