முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூக்கு நன்றி தெரிவித்த திருமாவளவன்!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன். (கோப்பு படம்).
தமிழக அரசியலில் அதிமுக- பாஜக இடையே உரசல் நிலவி வரும் நிலையில், இருகட்சிகளைச் சேர்ந்த இரண்டாம் கட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர். இந்த நிலையில், மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள அதிமுக கட்சி அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அதிமுகவுக்கு எதிரான பாஜகவின் நடவடிக்கைகள் கண்டிக்கத்தக்கது. தோழமை கட்சிகளுக்குள் இது சகஜமான ஒன்று. 2011 ஆம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சியின் போது திமுக கூட்டணியில் இருந்தும் அந்தக் கட்சிக்கு எதிரான செயல்களை காங்கிரஸ் செய்தது. அப்போது, கூடா நட்பு கேடாக முடிந்துள்ளது என்றார் கருணாநிதி. பின்னர் அவர்களுடனே கூட்டணி அமைத்தார். அது போல தான் எங்களுடைய உரசல்களும். இது சகஜம் தான்.
ஜெயலலிதாவுடன் ஒப்பிடுவதற்கு இங்கு யாரும் இல்லை. இனிமேல் பாஜக அதுபோன்ற செயல்களில் ஈடுபடாது. கூட்டணியை எப்போது வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம். கூட்டணி என்பது கொள்கை சார்ந்தது அல்ல. எங்களுக்கு நெருக்கடி கொடுக்க ஆண்டவனால் கூட முடியாது.
விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எங்களுடைய சகோதரர். அவர் மீது ஜெயலலிதா அன்பும் பாசமும் கொண்டவர். திருமாவளவன் அதிமுக கூட்டணிக்கு வர வேண்டும். அதிமுக மீது துரும்பை வீசினாலும், நாங்கள் தூணை கொண்டு எறிவோம் என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.
திருமாவளவன் நன்றி:
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு பதில் அளித்து தொல். திருமாவளவன் வெளியிட்ட பதிவில், அதிமுக கூட்டணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி வர வேண்டும் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசி உள்ளார். அவருடைய அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி.
திமுக கூட்டணியில் வலிமையாக நல்ல இணக்கத்துடன் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளது. திமுக கூட்டணியை அகில இந்திய அளவில் கொண்டுச் செல்வதே அடுத்தக்கட்ட பணி என தொல். திருமாவளவன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவின் கருத்துக்கு பதில் அளித்து உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu