முதல்முறையாக திமுகவுக்கு எதிராக விசிக வாய்ஸ்: கூட்டணிக்குள் உரசல்?
கோப்பு படம்
தமிழகத்தில் திமுக கூட்டணியில், திருமாவளவன் தலைமையிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளது. கடந்த நாடாளுமன்ற மற்றும் சட்டமன்றத் தேர்தல்களில், திமுகவுடன் கூட்டணி அமைத்தே, களம் கண்டது.
தேர்தலுக்கு பின்னரும், திமுக தலைமையுடன் சுமூக உறவை திருமாவளவனின் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கொண்டுள்ளது. உள்ளாட்சித் தேர்தலில், கேட்ட இடங்கள் ஒதுக்கப்படவில்லை என்று விசிக தரப்பில் கடும் அதிருப்தி இருந்தாலும், அது பெரிதாக வெடிக்கவில்லை. திமுக - விசிக உறவு இதுவரை இணக்கமாகவே இருந்து வருகிறது.
இந்நிலையில், தற்போது முதல்முறையாக, திமுக அரசுக்கு எதிராக விசிக குரல் கொடுத்திருக்கிறது. கூட்டணி கட்சி என்பதற்காக, எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள முடியாது என்று, விசிக தரப்பில் சற்று காட்டமாகவே தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மையில், சென்னை ராஜா அண்ணாமலைபுரம், கோவிந்தசாமி நகர், இளங்கோ தெருவில் 150-க்கும் மேற்பட்ட வீடுகளை, ஆக்கிரமிப்பு என்று கூறி தமிழக அரசு அகற்றியது. இதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் சூழலில், அப்பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளி கண்ணையன் என்பவர், தீக்குளித்து உயிரிழந்தார்.
இதையடுத்து, அப்பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணியை அரசு கைவிட வேண்டுமென்ற கோரிக்கைகளை அரசியல் கட்சிகள் முன்வைத்துள்ளன. இதேபோல், கூட்டணிக் கட்சியான விடுதலை சிறுத்தைகள் கட்சியும், ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை கைவிடுமாறு, அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளது.
மேலும், அக்கட்சியின் துணைப் பொதுச்செயலாளர்களில் ஒருவரான வன்னியரசு, உயிரிழந்த கண்ணையன் குடும்பத்துக்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது என்கிறார்கள். இங்கே மண்ணின் மைந்தர்களை, ஆக்கிரமிப்பு என்ற பெயரில் அகற்றி வருகின்றனர். இதுதான் திராவிட மாடலா?
தமிழக அரசின் இந்த நடவடிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது. விசிக இதை கண்டிக்கிறது. திமுகவுடன் கூட்டணி வைத்திருக்கிறோம் என்பதற்காக, அரசின் இதுபோன்ற நடவடிக்கைகளை கண்டு விசிக சும்மா இருக்காது. இதுபோன்ற செயல்கள், அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும்" என்று ஆவேசமாகக் கூறினார்.
வழக்கமாக, திமுக அரசுடன் மென்மையான அணுகுமுறையை கொண்டுள்ள விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில், முதல்முறையாக அதன் முக்கியத் தலைவர் ஒருவரே, அரசை கடுமையாக விமர்ச்சித்துள்ளது. அத்துடன் கூட்டணி குறித்தும் காட்டமாக பேசியிருப்பது, அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
ஏற்கனவே திமுகவுடன் மன வருத்ததில் விசிக உள்ள நிலையில், இரு கட்சிகளுக்கு இடையே நிலவும் உரசலின் வெளிப்பாடாக இது இருக்குமோ என்று, அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
நடிகை மும்தாஜிடம் போலீஸ் விசாரணை - காரணம் என்ன?
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu