ரூ.1000 மகளிர் உரிமை தொகை தொடர்பாக வானதி சீனிவாசன் வேண்டுகோள்
![ரூ.1000 மகளிர் உரிமை தொகை தொடர்பாக வானதி சீனிவாசன் வேண்டுகோள் ரூ.1000 மகளிர் உரிமை தொகை தொடர்பாக வானதி சீனிவாசன் வேண்டுகோள்](https://www.nativenews.in/h-upload/2024/04/17/1891787-vani.webp)
வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ.
லோக்சபா தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூபாய் 1,000 உரிமைத் தொகை கிடைக்கும் என்று பாஜக எம்.எல்.ஏ வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலில் வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெறும் நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக இறுதிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு முழுவதும் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டார் அமைச்சரும், திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின்.
தேர்தல் பிரச்சாரத்தின்போது அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், திமுக ஆட்சியில் மகளிருக்கு மாதம் தோறும் ரூ. 1000 உரிமைத் தொகையாக வழங்கப்படுகிறது. விடுபட்ட அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் தேர்தல் முடிந்த பிறகு ரூ. 1000 மாதம் தோறும் வழங்கப்படும். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே திமுகவுக்கே வாக்களிக்க வேண்டும்" எனக் கூறி வந்தார்.
இந்நிலையில், இந்த தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும். மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இரண்டு கோடி பேருக்கும் உரிமை தொகை எப்போதுமே கிடைக்காது என தமிழக பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக வானதி சீனிவாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் தான் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும். கடந்த 2021 சட்டப்பேரவைத் தேர்தலின் போது, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து குடும்ப தலைவிகளுக்கும் மாதந்தோறும் ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்படும் என்று திமுக வாக்குறுதி அளித்தது. ஆனால் ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, தகுதி உள்ள குடும்ப தலைவிகளுக்கு மட்டுமே உரிமைத் தொகை வழங்கப்படும் என்று கூறி 2 கோடிக்கும் அதிகமான குடும்பத் தலைவிகளுக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை மறுக்கப்பட்டது.
இந்த மக்களவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றால் இரண்டு கோடி பேருக்கும் உரிமை தொகை எப்போதுமே கிடைக்காது. மாறாக இந்த மக்களவைத் தேர்தலில் திமுகவை தோற்கடித்தால் அனைத்து குடும்பத் தலைவிகளுக்கும் ரூ. 1,000 உரிமைத் தொகை கிடைக்கும். எனவே தமிழ்நாட்டு வாக்காளர்கள் குறிப்பாக பெண்கள் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து திமுகவை படுதோல்வி அடையச் செய்ய வேண்டும். அப்போதுதான் அனைவருக்கும் ரூ.1,000 உரிமைத் தொகை கிடைக்கும்/
இவ்வாறு அவர் அந்த அறிக்கையில் கூறி உள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu