இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வைகோ வலியுறுத்தல்

இலங்கையில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வைகோ வலியுறுத்தல்

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. (கோப்பு படம்).

இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை விடுவிக்க வேண்டும் என நாடாளுமன்ற மாநிலங்களவையில் வைகோ பேசினார்.

நாடாளுமன்ற மாநிலங்களவையில் இன்று நடைபெற்ற ஜீரோ ஹவர் என அழைக்கப்படும் பூஜ்ய நேரத்தில், இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. கோரிக்கை எழுப்பினார்.

மாநிலங்களவையில் வைகோ பேசியதாவது:-

இலங்கைக் கடற்படையினர், தமிழக மீனவர்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். கடந்த காலங்களில் ஆயிரக்கணக்கான மீனவர்கள் கொடூரமாக தாக்கப்பட்டனர். சுமார் 800 மீனவர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அவர்களின் படகுகள், சேதப்படுத்தப்பட்டு, மீன்பிடி வலைகள் அழிக்கப்பட்டன.

பாக் ஜலசந்தியில் இந்திய மீனவர்கள் மீது இலங்கைக் கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தி, படகுகளைக் கைப்பற்றி, சேதப்படுத்திய செயல்கள் அதிக அளவில் நடந்து வருகின்றன. இலங்கை அரசு, தமிழக மீனவர்களின் படகுகளைக் கைப்பற்றி ஏலத்தில் விடுகின்றது. அண்மைக் காலமாக இது தொடர் கதையாகிவிட்டது. சில நாட்களுக்கு முன்பு, இலங்கைக் கடற்படையினரால் 22 மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களையும் அவர்களது படகுகளையும் நிபந்தனையின்றி விடுவிக்க இந்திய ஒன்றிய அரசும், வெளியுறவுத்துறை அமைச்சரும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறேன். இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழக மீனவர்களின் உறவினர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இலங்கை அரசிடம், இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்.

அடிக்கடி தமிழக மீனவர்களை படகுகளைக் கைப்பற்றியும், கைது செய்து மீனவர்களின் வாழ்வாதாரத்தை சிதைத்து வருகிறது. இலங்கைக் கடற்படையினரால் இடைவிடாத துன்புறுத்தலுக்கு ஆளாகும் நம் மீனவர்களுக்கு நிரந்தர தீர்வு காண உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ எம்.பி. பேசினார்.

Tags

Next Story