அ.தி.மு.க.வில் ஐக்கியமானார் உசிலம்பட்டி முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன்

எடப்பாடி பழனிசாமிக்கு பூங்கொத்து வழங்கி அ.தி.மு.க.வில் சேர்ந்தார் முன்னாள் எம்.எல்.ஏ. மகேந்திரன்.
உசிலம்பட்டி தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. வும், அ.ம.மு.க. தலைமை கழக செயலாளருமான மகேந்திரன் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் முயற்சியால் அ.தி.மு.க.வில் இணைந்தார்.
உசிலம்பட்டியைச் சேர்ந்தவர் ஐ.மகேந்திரன். இவர், அமமுக தலைமைக் கழக செயலாளர் மற்றும் மதுரை புறநகர் மாவட்ட செயலாளராக இருந்தார். 2006-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். டிடிவி.தினகரன் புதிய கட்சி துவங்கியதும் அக்கட்சியில் இணைந்தார். 2019-ம் ஆண்டு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிட்ட மகேந்திரன் 31199 வாக்குகளை பெற்றார். இதனால் அங்கு அ.தி.மு.க. தோற்று, தி.மு.க. வென்றது. 2021 சட்டப்பேரவை தேர்தலில் உசிலம்பட்டில் அ.ம.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட மகேந்திரன் 55491 வாக்குகளை பெற்றார்.இதனால் தி.மு.க. கூட்டணி வேட்பாளர் கதிரவன் தோற்று, அ.தி.மு.க. வேட்பாளர் அய்யப்பன் வென்றார்.
இப்பகுதியில் தனக்கென தனி செல்வாக்குடன் இருப்பவர் என்பதை அடுத்தடுத்த தேர்தலில் நிரூபித்தவர். டிடிவி தினகரனின் மிகுந்த நம்பிக்கைக்கு உரியவராக திகழ்ந்தார். இவர் நேற்று முன்தினம் திடீரென அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தார். முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் மிகவும் ரகசிய பேச்சுவார்த்தை நடத்தி இந்த இணைப்பை முன்னின்று நடத்தியுள்ளார். இது இப்பகுதியைச் சேர்ந்த அமமுக மட்டுமின்றி பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினரிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து மகேந்திரனுக்கு நெருக்கமானர்கள் கூறுகையில், "2 தேர்தல்கள், பல ஆண்டுகள் என கட்சிக்காக சொந்த பணத்தை தொடர்ந்து செலவிட்டு வந்தார். இனியும் கட்சியால் எதிர்காலம் இருக்குமா என்ற சந்தேகம் வலுவானது. இந்த சூழலில் சில உறுதிமொழியின் அடிப்படையில் அதிமுகவில் இணைய உதயகுமார் பேச்சு நடத்தியதன் மூலம் அ.தி.மு.க.வில் இணைந்து விட்டார்" என்றனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu