நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குற்றால அருவிகள் திறக்கப்படுமா?

நெருங்கும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: குற்றால அருவிகள் திறக்கப்படுமா?
X

ஐந்தருவி.

தேர்தல் நெருங்க நெருங்க மாற்றம் ஏற்படலாம். இதனால் விரைவில் குற்றால அருவிகள் திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் குற்றால வாசிகள்.

தமிழகத்தில் புகழ்பெற்ற சுற்றுலாத் தலங்களில் ஒன்று தென்காசி மாவட்டத்தில் அமைந்துள்ள குற்றாலம். இங்கு ஆண்டுதோறும் ஜூன், ஜூலை ஆகஸ்ட் ஆகிய மாதங்கள் பருவநிலை காலங்களாகும். இந்த காலநிலையில் இதமான காற்றுடன் மெல்லிய சாரல் மழை பெய்யும்.

இந்த பருவ நிலையை அனுபவிக்க நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்தும், வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருகின்றனர். இவர்களை நம்பி குற்றாலம் சுற்றுவட்டாரப் பகுதியில் உள்ள ஏராளமான வியாபாரிகள் நேரடியாகவும் மறைமுகமாகவும் பயனடைந்து வருகின்றனர்.

கடந்த சில மாதங்களாகக் குற்றால அருவிகள் திறக்கப்படாமல் உள்ளது. இதனால் இவர்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் தாக்கம் எதிர்வரும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் எதிரொலித்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

குற்றாலம் சிறப்பு நிலை பேரூராட்சியாக உள்ளது. இங்கு 8 வார்டுகள் உள்ளது. சுமார் 2280 வாக்காளர்கள் உள்ளனர். இங்கு தலைவர் பதவி ஆண் பொதுப்பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடந்தமுறை அதிமுகவைச் சேர்ந்த அசோக் பாண்டியன் பேரூராட்சி தலைவராக இருந்தார். அதற்கு முன்னதாக திமுகவைச் சேர்ந்த ஒன்றிய செயலாளர் துரை தலைவராக இருந்தார்.

அதிமுக, திமுக என இரு கட்சிகள் மாறி மாறி இருந்த போதும், குற்றாலத்தில் வளர்ச்சிக்குத் தேவையான நிதிகள் பெறப்பட்டன. கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனா பரவல் தடை காரணமாகக் குற்றால அருவிகள் மூடப்பட்டன. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கவில்லை. கடந்த ஆண்டு தென்காசி மாவட்ட ஆட்சியராக சமீரன் இருந்தபோது சமூக இடைவெளியுடன் சுற்றுலாப் பயணிகள் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.

இந்நிலையில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டபோது குற்றால அருவிகள் மூடப்பட்டன. தற்போது தமிழக அரசு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் குற்றாலத்திற்கு எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை. இதனால் குற்றாலத்தில் நம்பி வாழும் மக்களிடையே ஒரு விதமான அதிருப்தி ஏற்பட்டுள்ளது.

திமுக மாவட்ட செயலாளர் சிவ பத்மநாதன், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் பழனி நாடார், குற்றாலம் வியாபாரிகள் சங்கம் பல தரப்பு மக்கள் மனு அளித்தும் எவ்வித பயனும் கிடைக்கவில்லை. இதனிடையே அதிமுகவில் இருந்த முக்கிய புள்ளிகள் மற்றும் முன்னாள் தலைவர்கள் உறுப்பினர்கள் பலர் திமுகவில் ஐக்கியமாகி விட குற்றால அரசியல் வட்டாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் குற்றாலத்தை நம்பி வாழும் மக்களின் மன நிலையோ வேறு மாதிரியாக உள்ளது. வாழ்வாதாரம் என்று தவிர்க்கும் தங்களுக்குத் தீர்வு கிடைக்குமா? அல்லது வழக்கம்போல் ஏமாற்றம் மட்டுமே மிஞ்சுமா ? என ஒருவித குழப்பமான மனநிலையில் இப்பகுதி மக்கள் உள்ளனர்.

எது எப்படியோ வருகின்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குற்றாலம் திமுகவிற்கு ஒரு சவாலாகத்தான் இருக்கும் என்பது நிதர்சனமான உண்மை. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பு குற்றால அருவிகள் திறக்கப்பட்டால் கணிசமான வாக்கு வித்தியாசத்தில் திமுக வெற்றி பெறலாம் என்பது கழக மூத்த உறுப்பினர் ஒருவரின் கருத்தாக உள்ளது. தேர்தல் நெருங்க நெருங்க மாற்றம் ஏற்படலாம் இதனால் விரைவில் குற்றால அருவிகள் திறக்கப்படும் என எதிர்பார்ப்பில் குற்றால வாசிகள்.

Tags

Next Story
இரு சக்கர வாகனங்கள் நிறுத்துமிடமாக மாறிய நாமக்கல் ஆட்சியா் அலுவலகம்!