‘தமிழகத்தில் நடப்பது ஊழல் ஆட்சி மாற்றம் வரும்’ மத்திய மந்திரி அமித்ஷா ஆவேசம்

‘தமிழகத்தில் நடப்பது ஊழல் ஆட்சி மாற்றம் வரும்’ மத்திய மந்திரி அமித்ஷா ஆவேசம்
X

ராமேஸ்வரத்தில் தி.மு.க. அரசு மீது குற்றம் சாட்டி ஆவேசமாக பேசும் மத்திய மந்திரி அமித்ஷா.

தமிழகத்தில் நடப்பது ஊழல் ஆட்சி. மாற்றம் வரும் என ராமேஸ்வரத்தில் மத்திய மந்திரி அமித்ஷா மிகவும் ஆவேசமாக பேசினார்.

ராமேஸ்வரத்தில் இன்று தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் ‘என் மண், என் மக்கள்’ நடை பயண யாத்திரை துவக்க விழா நடைபெற்றது.

இந்த நடை பயணத்தை தொடங்கி வைத்து மத்திய மந்திரி அமித்ஷா சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் பேசியதாவது:-

இந்திய அளவில் ஊழல் கட்சி காங்கிரஸ் என்றால் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் கட்சியாக தி.மு.க. உள்ளது காங்கிரஸ் ஆட்சியில் இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் இருந்து காமன்வெல்த் போட்டி வரை மற்றும் 2 ஜி ஊழல் நடைபெற்றது. அவர்கள் நடத்திய ஊழல்கள் மட்டுமே மக்களுக்கு நினைவு வருகிறது. எனவே அவர்கள் மக்களிடம் வாக்கு கேட்க சென்றால் மக்கள் அவர்கள் செய்த ஊழலை தான் நினைத்து பார்க்கிறார்கள்.

எதிர்க் கட்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்து அதற்கு இந்தியா என பெயர் வைத்துள்ளனர்.அவர்கள் இந்தியா என பெயர் வைத்தாலும் அது ஒன்றும் எடுபடப் போவதில்லை. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து சட்டம் திருத்தப்பட்ட போது இவர்கள் எல்லாம் அதனை எதிர்த்து குரல் கொடுத்தவர்கள் .மோடி தலைமையிலான பாரதிய ஜனதா அரசு தீவிரவாதத்திற்கு எதிராக போராடி வருகிறது. இந்தியாவின் ஒரே தலைவர் மோடி தான்.

எதிர்க்கட்சி தலைவர்களின் கவலை எல்லாம் நாட்டைப் பற்றியது அல்ல. அவர்களது குடும்பத்தை பற்றியதுதான் சோனியா காந்தியின் கவலை தனது மகன் ராகுல் காந்தியை பிரதமராக்க வேண்டும் என்பது. தமிழகத்தில் முதல்வராக உள்ள ஸ்டாலினின் கவலை அவரது மகன் உதயநிதியை முதலமைச்சராக வேண்டும் என்பது. இதுபோல பீகாரில் லல்லு பிரசாத் யாதவ் தனது மகன் தேஜஸ்வியையும், மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி தனது மருமகனையும், மராட்டியத்தில் உத்தம் தாக்கரே அவரது மகனையும் முதல்வராக துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மத்தியில் யு.பி.ஏ. அரசு இருந்தபோது தி.மு.க. அதில்அங்கம் வகித்தார்கள். அந்த காலகட்டத்தில் தான் இலங்கையில் தமிழ் மக்கள் போர் என்ற பெயரில் கொன்றழிக்கப்பட்டார்கள். தமிழ் மக்களின் உயிர் பலிக்கு காரணமாக இருந்தது யு.பி.ஏ. அரசு தான். அதேபோல தமிழக மீனவர்கள் மீன்பிடிக்க செல்வதற்கும் பல இடையூறுகள் ஏற்பட்டு வந்தபோது அதனை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் ஸ்டாலின் தலைமையில் இப்போது நடந்து கொண்டிருக்கிற தி.மு.க. அரசு இந்திய அளவில் மட்டுமல்ல உலக அளவில் மிகப்பெரிய ஊழல் கட்சியாக உள்ளது. ஸ்டாலின் மந்திரி சபையில் இருக்கிற ஒரு அமைச்சர் ஊழல் வழக்கிற்காக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இதற்காக முதல்வர் ஸ்டாலின் வெட்கப்பட வேண்டும். ஜெயிலில் இருப்பவர் மந்திரியாக நீடிக்கலாமா என நான் கேட்கிறேன்.

அவர் ராஜினாமா செய்திருக்க வேண்டாமா? ஸ்டாலின் அவரிடம் இருந்து ராஜினாமா கடிதத்தை வாங்காதது ஏன்? அவரிடம் ராஜினாமா கடிதம் வாங்கினால் எல்லா ரகசியங்களையும் அவர் வெளியில் சொல்லி விடுவார் என்ற பயம் காரணமாக ஸ்டாலின் அவரை சிறையில் இருந்தாலும் மந்திரியாக தொடர்ந்து இருக்க வைத்துள்ளார்.

தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தி.மு.க. அரசு பற்றி ஒரு ட்விட் போட்டால் பூகம்பம் வெடிக்கிறது .இப்போது இனி அவர் பத்தாயிரம் கிலோ மீட்டர் நடைபயணம் செல்ல இருக்கிறார்.இதை எப்படி திமுக அரசு தாங்க போகிறது என தெரியவில்லை. இந்த ஆட்சி ஊழல் மாபியாவின் ஆட்சியில் மின்சாரத் துறையில் மிகப்பெரிய ஊழல் நடந்திருக்கிறது.

தி.மு.க. தேர்தல் காலத்தில் அளித்த வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. மீண்டும் பிரதமர் மோடி பிரதமராக பதவி ஏற்க வேண்டும் அதற்கு 40 தொகுதிகளிலும் பா.ஜ.க. கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற செய்ய வேண்டும்.அதன் மூலம் தமிழகத்தில் மாற்றம் வரும். அந்த மாற்றத்திற்கு நீங்கள் ஆதரவளிக்க வேண்டும் என கை கூப்பி வேண்டுகிறேன்.

இவ்வாறு மத்திய மந்திரி அமித்ஷா பேசினார்

Tags

Next Story
பழனி கோயில் நிர்வாகம் 3,134 மூட்டைகள் கரும்பு சா்க்கரை கொள்முதல் செய்தது